நடராஜன் நினைவு தினம்: தனித்தனியாக வந்த சசிகலா, தினகரன்


புதிய பார்வை இதழின் ஆசிரியராக இருந்தவரும் அதிமுகவில் நிழல் அரசியல் செய்து வந்தவருமான முனைவர் ம.நடராஜனின் நான்காவது ஆண்டு நினைவு தினம் நேற்று மார்ச் 20 அனுசரிக்கப்பட்டது.
தற்போது அதிமுக பொதுச் செயலாளர் என்று உரிமை கொண்டாடும் சசிகலாவின் கணவரான நடராஜன், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு... தஞ்சையில் நடந்த வருடாந்திர பொங்கல் விழாவில் பாஜகவை கடுமையாக சாடி உரையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது கணவர் நடராஜனின் நான்காவது நினைவு தினத்தை ஒட்டி சில நாட்களுக்கு முன்பே தஞ்சை வந்துவிட்டார் சசிகலா. அருளானந்த நகரில் இருக்கும் தனது வீட்டில் தங்கியிருந்த சசிகலா, நேற்று தன் கணவர் நினைவு தினத்தை ஒட்டி அதிகாலை 5 30 மணிக்கெல்லாம் தஞ்சை விளாரில் இருக்கும் நடராஜனின் நினைவிடத்துக்குச் சென்றார். அங்கே நடராஜன் சகோதரர்களின் குடும்பத்தினரே அதிகம் இருந்தனர்.
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நினைவிடத்தில் தமிழ்முறைப்படி திருமுறைகளை ஓதி வழிபாடு நடந்தது. அதன் பின்னர் தனது கணவரின் நினைவிடத்தில் நினைவு தீபத்தை ஏற்றினார் சசிகலா. அப்போது அவர் கண்கள் கலங்கிக் கண்ணீர் துளிர்த்தது.
சசிகலா வருவதற்கு முன்பே அங்கே அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரான ஓ.ராஜா காத்திருந்தார். எம்.என். குடும்பத்தினரோடு திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட அமமுக பிரமுகர்களும் இந்த நினைவு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சுமார் இரண்டு மணி நேரம் அங்கே இருந்த சசிகலா காலை 7.40 மணி அளவில் புறப்பட்டு மீண்டும் தன் இல்லத்துக்குச் சென்றார்.
சமீப நாட்களாகவே சசிகலாவுக்கும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கும் கருத்து வேறுபாடுகள் என்று அவர்களைச் சுற்றி உள்ளவர்களே பேசிக்கொள்ளும் நிலைதான் உள்ளது.
இந்தப் பின்னணியில் நடராஜன் நினைவு தின நிகழ்ச்சி முற்றிலும் ஒரு குடும்ப நிகழ்ச்சி என்கிற அளவில் நேற்று காலை சசிகலாவோடு டிடிவி தினகரனும் பங்கேற்பார் என ஓர் எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால், நேற்று முன்தினம் இரவு தஞ்சை வந்துவிட்ட டிடிவி தினகரன், நேற்று காலை சசிகலா புறப்பட்டுச் சென்ற பின்னர் காலை 9.30 மணி அளவில் தனது ஆதரவாளர்களோடு நடராஜன் நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.
“இது ஒரு அரசியல் நிகழ்ச்சி அல்ல. இன்னும் சொல்லப்போனால் இது குடும்ப நிகழ்ச்சி. நடராஜன் தன் மறைவு வரை இந்தக் குடும்பத்தை ஒற்றுமையாக இருக்க போராடினார். ஆனால் அவரது நினைவு தினத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்விலேயே சசிகலாவும் தினகரனும் ஒன்றாக கலந்து கொள்ளவில்லை. அவர்களுக்கிடையே ஏதோ ஒரு நெருடல் இருப்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. நடராஜன் நினைவு தின நிகழ்ச்சியிலேயே ஒன்றாக வரவில்லை என்றால் தினகரன் மீது சசிகலா வருத்தத்தில் இருக்கிறார் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது" என்கிறார்கள் தஞ்சை அமமுகவினர்.
- வேந்தன்