மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 20 மா 2022

ஈபிஎஸுக்கு வயிற்றெரிச்சல்: எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்

ஈபிஎஸுக்கு வயிற்றெரிச்சல்: எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்

வேளாண் பட்ஜெட்டை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்திருந்த நிலையில் அவருக்கு வயிற்றெரிச்சல் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று(மார்ச் 20) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, “இது வேளாண் பட்ஜெட் கிடையாது. வேளாண்மை மானிய கோரிக்கை கொள்கை விளக்கக் குறிப்பைத்தான் அமைச்சர் படித்துள்ளார். விவசாயிகளை ஏமாற்றுகிற நாடகம். வேளாண் பட்ஜெட்டுக்கு என தனி நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்த வேளாண் பட்ஜெட்டில் பல துறைகளை ஒன்றாகச் சேர்த்து, அந்த துறைகளுக்கு ஒதுக்கப்படுகின்ற நிதியை ரூ.33 ஆயிரம் கோடி என்று இந்த பட்ஜெட்டில் கொண்டு வந்து அறிவித்துள்ளார்கள். திமுக ஆட்சியில் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.” என்று கூறியிருந்தார்.

ஈபிஎஸுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ள வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், “நாடே போற்றும் தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கையையும், வேளாண் நிதிநிலை அறிக்கையையும் பார்த்து, உழவர்களை வஞ்சித்து ஆட்சி செய்துவிட்டுச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு வயிற்றெரிச்சல் வந்துள்ளது.

அதனால்தானோ என்னவோ “திமுக ஆட்சியில் விவசாயிகள் அலைக்கழிப்பு” என்று ஒரு பச்சைப் பொய்யை அறிக்கையாக - பேட்டியாக நேற்றைய நாள் கொடுத்திருக்கிறார்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “விவசாயிகளுக்கு ஏதாவது ஒரு பாதிப்பு என்றால் முதலமைச்சர் ஓடோடிச் சென்று உதவுகிறார். கேட்பதற்கு முன்பே நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க ஆணையிடுகிறார். மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பதற்கு முன்பே தூர் வாரி- காவிரி நீர் கடைமடைக்கும் செல்வதை உறுதி செய்கிறார்.

இலவச மின்சாரத்திற்கு இடையூறு செய்ய வரும் ஒன்றிய அரசின் மின்சார சட்டத் திருத்தத்தை எதிர்த்துப் போர்க்குரல் எழுப்புகிறார். காவிரி டெல்டாவைப் பாதிக்கும் மேகதாது அணைப் பிரச்சினை குறித்து- காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் விவாதம் நடத்துவதற்கே வாய்ப்பு அளிக்காமல் எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக அரசைப் பின்வாங்க வைக்கிறார். முல்லைப் பெரியாறு பிரச்சினையாக இருந்தாலும் - தமிழ்நாட்டின் உரிமை தொடர்பான நதிநீர் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் முனைப்புடன் செயல்பட்டு உழவர் நலனை - தமிழக உரிமையை நிலைநாட்டி வருகிறார்.

நியூட்ரினோ திட்டத்தை ஏற்க மறுக்கிறார். ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்குக் கையெழுத்துப் போட முடியாது என்று துணிச்சலுடன் கூறுகிறார். சென்ற நிதிநிலை அறிக்கையிலும்- இந்த நிதிநிலை அறிக்கையிலும்- இதுவரை வெளியிடப்பட்டுள்ள உழவர்களுக்கான வேளாண் தனி நிதிநிலை அறிக்கைகளிலும், வேளாண் துறைக்குப் பல்வேறு திட்டங்களை அறிவித்து- வேளாண் உட்கட்டமைப்பு, உற்பத்தி, விளைபொருட்களுக்கு ஏற்ற விலை என அனைத்திலும் முன்னுதாரணமாக விளங்கும் திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறார்.

சென்ற வேளாண் நிதிநிலை அறிக்கையில் அளித்த அறிவிப்புகளை- இந்த வேளாண் நிதி நிலை அறிக்கைக்குள் நிறைவேற்றியுள்ளது திமுக அரசு. முதலமைச்சரின் வழிகாட்டுதலில் வெளியாகியுள்ள வேளாண் நிதிநிலை அறிக்கை- உழவர்களின் எதிர்காலம்! வேளாண் தொழிலின் பொற்காலம். அதைத்தான் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

ஆகவேதான், அன்றாட அரசியல் நிகழ்வுகள் குறித்து ஏதும் அறியாமல் - உட்கட்சியில் என்றைக்கு நமது பதவி போகும்- எத்தனைப் பேர் நம் பதவிக்குக் குறி வைக்கிறார்கள் என்ற தாங்க முடியாத கவலையில் “தி.மு.க. ஆட்சியில் விவசாயிகள் அலைக்கழிப்பு” என்றும் “வேளாண் பட்ஜெட்டுக்கு என்று தனி நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை” என்றெல்லாம் ஒரு முதலமைச்சராக இருந்தவர்- இப்போது எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் அறிக்கை விடுவதும்- பேட்டியளிப்பதும் கேலிக்கூத்தாக இருக்கிறது.

ஆட்சி நிர்வாகம் இவர் முதலமைச்சராக இருந்தபோது எப்படித் திண்டாடியிருக்கும் என்பது இப்போது இன்னும் தெளிவாகப் புரிகிறது!

உழவர்கள் தற்கொலை, உழவர்களின் “கிசான் இன்சூரன்ஸ்” திட்டத்தில் முறைகேடு,உழவர்கள் கடனைத் தள்ளுபடி செய்ய முடியாது என உச்சநீதிமன்றத்திற்கே சென்று தடை உத்தரவு வாங்கியது, உழவர்களை வஞ்சிக்கும்- உழவுத் தொழிலை அடியோடு பாதிக்கும் ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளித்து- வாக்களித்து- வக்காலத்து வாங்கியது-

மேட்டூர் அணையைத் திறந்துவிட்டு விட்டு, பிறகு தூர்வாருகிறோம் என்று “முறைகேடு”, குடிமராமத்து ஊழல்-இப்படி உழவர்களின் நாடி நரம்புகளில் சம்மட்டி எடுத்து அடிக்கும் வகையில் ஒரு அராஜக ஆட்சியை நடத்திய . பழனிசாமி, “தனது உழவர் விரோத ஆட்சியை வேளாண் பெருங்குடி மக்களின் பொற்காலம்” என்று கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் பொய் சொல்கிறார் என்றால்- பொய் சொல்வதில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு நிகர் அவரேதான் என்பதில் சந்தேகமில்லை!

அனைவரும் பாராட்டும் வேளாண் நிதிநிலை அறிக்கையைப் பாராட்ட மனமில்லாமல் எதிர்க்கட்சித் தலைவர் இருக்கலாம்; ஆனால் திமுக அரசு அளித்துள்ள-உழவர் பெருங்குடி மக்களே பாராட்டும் வேளாண் நிதி நிலை அறிக்கையைக் கொச்சைப்படுத்தி- ஏற்கனவே ஆளுங்கட்சியாக இருந்த போது போட்ட “போலி விவசாயி”, “போலி பச்சைத் துண்டு” வேடத்தை “ரிப்பீட்” செய்ய வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

பழனிசாமி , இதுபோன்ற பகல் வேடங்கள் போட்டு அரசியலில் மேலும் “காற்று போன பலூன்” ஆகி விட வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

-பிரியா

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

3 நிமிட வாசிப்பு

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

4 நிமிட வாசிப்பு

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

4 நிமிட வாசிப்பு

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

ஞாயிறு 20 மா 2022