மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 20 மா 2022

நடிகர் சங்க தேர்தல்: முன்னிலையில் யார்?

நடிகர் சங்க தேர்தல்: முன்னிலையில் யார்?

மூன்றாண்டுகளுக்கு முன் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை இன்று(மார்ச் 20) காலை 8 மணிக்குத் துவங்கியது.

வழக்கம்போல சில சலசலப்புக்கு இடையே ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. மாலைக்குள் யார் வெற்றி பெற்றார்கள் என அறிவிப்பு வெளியாகி விடும். கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்குத் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், நாசர் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர்.

ஆனால் தேர்தலை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் செல்லாது என்று அறிவித்த நீதிமன்றம் வாக்கு எண்ணிக்கைக்கும் தடை விதித்தது. இதைத் தொடர்ந்து இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டன.

தேர்தல் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தொடர்ந்து , தேர்தல் செல்லும் என்று அறிவித்து வாக்குகளை எண்ணவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து ஏழுமலை என்ற துணை நடிகர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று (மார்ச் 20) சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள குட் ஷெப்பர்ட் பள்ளி வளாகத்தில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. இந்த ஓட்டு எண்ணிக்கை தேர்தல் அதிகாரி, நடிகர் சங்க தனி அதிகாரி மற்றும் போட்டியிட்ட வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் எண்ணப்படுகிறது.

இதற்காகப் பலத்த போலீஸ் பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பதிவான வாக்குகளைக் காட்டிலும் கூடுதல் எண்ணிக்கையில் வாக்குச் சீட்டுக்கள் துணைத் தலைவர் பதவிக்கு இருந்ததால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறு பாக்யராஜ் தலைமையிலான அணி தேர்தல் அதிகாரியிடம் புகார் கூறியது. இதனால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.

இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின் கூடுதலாக இருக்கும் வாக்குகளைக் கணக்கில் கொள்வதில்லை என முடிவு எடுக்கப்பட்டது. முன்னதாக ஓட்டுப்பதிவான நாள் அன்று பதிவான வாக்குகள் இப்போது எவ்வளவு ஓட்டுகள் உள்ளது என்பதை அறிவிக்கவேண்டும் அதன் பின்னர் வாக்கு எண்ணிக்கையைத் தொடங்கலாம் என பாக்யராஜ் தலைமையிலான அணியினர் கோரிக்கை வைத்தனர். தேர்தல் அதிகாரி இதனை ஏற்க மறுத்ததால் பாக்யராஜ் அணியினர் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்திலிருந்து வெளியேறினர்.

முதற்கட்ட தகவலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட நாசர், செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி, துணை தலைவர்கள் பதவிக்கு நடிகர் கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகிப்பதாகக் கூறப்படுகிறது.

பாக்யராஜ் தலைமையிலான அணியில் முக்கியப் பொறுப்புகளுக்கு எவரும் வெற்றிபெறும் வாய்ப்பு இல்லை என்பதே பகல் 12 மணி நிலவரமாக உள்ளது.

-இராமானுஜம்

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை! ...

3 நிமிட வாசிப்பு

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை!

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ...

5 நிமிட வாசிப்பு

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ஆதீனம்!

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

4 நிமிட வாசிப்பு

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

ஞாயிறு 20 மா 2022