மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 20 மா 2022

ஆதீன நிழலில் சாணக்ய விழா!

ஆதீன நிழலில் சாணக்ய விழா!

ஸ்ரீராம் சர்மா

நாடறிந்த ஊடகவியலாளர் - பேரன்பிற்கினிய நண்பர் திரு.ரங்கராஜ் பாண்டே அவர்களின் அழைப்பிற்கிணங்க சாணக்யா யூடியூப் சேனலின் மூன்றாவது ஆண்டு விழாவைக் காண நேர்ந்தது.

சாதாரணதொரு சமூக எழுத்தாளனாக - மனதுக்கு சரி எனப்படுவதை பட்டென எழுதிவிடுவதே எனதியல்பு. எழுதுகிறேன்.

நகரத்தின் போக்குவரத்து வசதிகளற்ற – உள்ளடங்கிய - அந்த செட்டிநாடு வித்யாஸ்ரம் அரங்கத்தை நிறைத்துக்காட்டுவது என்பது எளிய காரியமல்ல.

நேற்றந்த அரங்கம் நிறைந்து நின்றதற்கு காரணம், ரங்கராஜ் பாண்டே என்பவரின் நீண்ட நெடிய பத்திரிகை - ஊடக உழைப்பு மற்றும் மேலாண்மைத் திறன்தான் என்றால் அது மிகையல்ல.

நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் பாண்டே.

விழா தொடக்கத்தில்… ஈடு இணையற்ற வில்லிசைக் கலைஞரான பத்மஸ்ரீ திருமிகு. சுப்பு ஆறுமுகம் ஐயா அவர்களின் செல்வமகள் பாரதி திருமகன் அவர்களின் வில்லுப்பாட்டு வழக்கம்போல களை கட்டி நின்று முடிய…

அன்றைய துக்ளக் விழாவில் சோ அவர்களின் கேள்வி – பதிலுக்குப் பழக்கப்பட்ட ஜனங்கள், இன்று பாண்டேவின் பதிலுக்கு வரிசை கட்டி நின்ற விதம் தலைமுறை தொடர்ச்சியாகிறதோ என்னவோ!

விழா தொடங்கியதும்… முதலில் மேடையேறினார் திரு.இராம.வீரப்பன்.

எம்.ஜி.ஆரை தூக்கி நிறுத்தியவர் – ஜானகி அம்மாவை முன்னிறுத்தி தியாகம் பல செய்தவர் போன்ற புகழ் வரிகள் கொண்ட பீடிகை வீடியோவோடு, சாணக்யாவின் விருதினைப் பெற்றுக் கொண்டு, தடைப்பட்ட கம்பன் கழக விழாவுக்கு ஒரு லட்ச ரூபாய் கிடைத்தது என்றதோடு பாதி நிகழ்வில் கிளம்பிப் போனார்.

அடுத்து வந்த மரியாதைக்குரிய இரு மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் வழக்கம் போல கலகலவென பேசத் தொடங்கினார்.

சாணக்கியரையும் , திருவள்ளுவரையும் துணையாகக் கொண்டு… “இங்கு நான் அரசியல் பேச மாட்டேன்…” என்று சொல்லிக் கொண்டே ஆயிரம் அரசியல் பேசி கைதட்டல் அள்ளினார்.

அந்த விழாவின் நட்சத்திரமாக நின்று மனம் கவர்ந்தவர் ஸ்ரீலஸ்ரீ மதுரை ஆதீனம்தான்.

அவரது தாழ்ச்சியான குணமும் – நேர்மை ததும்பிய அவரது துணிச்சலும் மனதை நெகிழ்ந்து போகச் செய்தது.

முன்பிருந்த ஆதீனம் போல, டாம்பீகமான தனி இருக்கை ஒன்றை அவர் தன்னோடு எடுத்து வரவில்லை. அடிப்பொடிகளின் ஆர்ப்பாட்டமில்லை. ஆரவாரமில்லை.

மேடை ஓரத்தில் – விழா குழுவினரால் ‘ஒதுக்கப்பட்ட’ சாதாரண இருக்கை ஒன்றில் மிக எளிமையாக அமர்ந்து கொண்டார்.

பெருந்தன்மையோடு அப்படி அவர் இருந்து கொண்டாலும் – புகழுடையதொரு ஆதீன ஸ்தானத்துக்கு - உரிய மரியாதையைக் கொடுக்காமல் அவ்வாறு அமரச் செய்த விதம் விழா குழுவினருக்கு அழகல்ல. மேலும், ரங்கராஜ் பாண்டேவின் நிர்வாகத் தன்மைக்கு அது பெரும் இழுக்கு!

அவரை மத்தியில் அமர வைத்து மரியாதை செய்திருக்க வேண்டும்.

ஆம், ஆள்பவன் அரசன் என்றாலும், அரசனுக்கும் பெரிது ஆன்மிகக் கோலம் அல்லவா? அதை முன்னிறுத்துவதுதானே இந்த மண்ணுக்கான மரபு... அழகு!

நாத்திகத்தை முழு மூச்சாக பேசிய பெரியாரும்கூட, அன்றந்த ஆதீனத்தின் திருநீருக்கு முன் பணிவோடு நின்றதுண்டே!

பட்டினத்தார் – பத்ரூஹரி அரசன் வரலாற்றுப் பாடத்தை பாண்டே படித்ததில்லை போலும். படித்தாக வேண்டும்.

எனது மேடையில் அனைவரும் சமம் எனப் பறை சாற்றுமளவுக்கு தான் உயர்ந்துவிட்டதாக பாண்டே நினைத்துக்கொள்ள எள்ளளவும் முகாந்திரமில்லை.

எனினும், ஊரார் அப்படி நினைத்துவிடும் அளவுக்கு வைத்துக்கொள்வது அவருக்குத் தகாது என்பதை இடித்துச்சொல்வது ஒரு நண்பனாக எனது கடமையாகிறது.

மேற்சொன்னது எனது ஆதங்கம் மட்டுமே!

மதுரை ஆதீனமோ, எதையும் பொருட்படுத்தாமல் மிகத் தாழ்ச்சியாக ஒலிபெருக்கிக்கு முன் வந்து நின்றார்.

எடுத்த எடுப்பிலேயே, ஸ்ருதி சுத்தமாக சைவத் திருமுறை பாடலோடு துவங்கி - அரசியல் அலசல்களோடு அரங்கத்தை அதகளம் ஆக்கினார்.

“கோயில்களின், ஆதீனங்களின் சொத்துகள் பறிபோவது என்ன நியாயம்?” என முழங்கினார்.

“குத்தகையைக் கேட்டால், ‘குத்த கை’ வருகிறது...” என நகைச்சுவையோடு அவலச்சுவை காட்டினார்.

“அறநிலையத் துறை அமைச்சராக இருந்தவர், தனது பழைய பெருமையை சொல்லியதோடு கிளம்பிவிட்டது சரியா?”

ஆன்மிக செம்மல்கள் மாணிக்கவாசகரின், திருஞானசம்பந்தரின் பெருமையைப் பற்றிச் சொல்லாமல், சைவ ஆதீனமான என்னைப் பற்றி ஒரு சொல் கூட சொல்லாமல், ‘ஓடிப் போனது’ ஏன்… எனத் திரும்பத் திரும்ப காட்டமாக தனது அதிருப்தியை அழுந்தப் பதிய வைத்தார்.

சைவ மடங்களை நீங்கள் மதிக்கும் அழகு இதுதானா... எனக் கேட்காமல் கேட்டார்.

அரங்கம் நிசப்தமாக இருந்து உள் வாங்கிக் கொண்டது.

“இது, சைவம் தழைத்த பூமி. தமிழுக்குத் தலைவன் சிவபெருமானே! அவனிடம் விளையாடாதீர்கள். கோயில்களை, கோயில் சொத்துகளை சூறையாட எண்ணாதீர்கள். அவனிடம் இரண்டு வகை நெருப்புண்டு. எரித்தே விடுவான்…” எனத் தன் கொள்கையை ஆழ நிறுவி எச்சரித்தார்.

முடிவில், தன் பேரன்பு நிழலைப் பரப்பி - அதில் ரங்கராஜ் பாண்டே உட்பட அனைவரையும் நிறுத்தி அரவணைத்து, முறைப்படி வாழ்த்தி - கௌரவித்து முடித்தார்.

‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்’ எனப் பண்போடு அரங்காடிய அந்த மதுரை சைவக் குரிசிலை எண்ணி எண்ணி மனம் நெகிழ்ந்து போனது.

கவர்னர் தமிழிசை அவர்கள், தன் ப்ரோட்டோகாலையும் மீறி, ஆதீனம் பேசி முடிக்கும் வரை மேடையில் அமர்ந்திருந்து, ஆதீனகர்த்தருக்குரிய மரியாதையை உள்ளன்போடு செலுத்தியது மண்ணளந்த அவரது மேன்மையைக் காட்டி நின்றது.

தவிர்க்க முடியாத சொந்த வேலையின் காரணமாக முழுமையாக அமர்ந்திருக்க முடியாமல் கிளம்பி விட்டேன்.

காரோடிய சாலையெல்லாம் மழை நீரோடியது போல் மினுக்கிக் கொண்டேயிருந்தது விழா நினைவு…

புகழுடையதொரு ஆதீனத்தையும் - இருமாநிலத்து கவர்னர் ஒருவரையும் மேடையேற்றி அரங்கம் நிறைந்ததொரு கூட்டத்தையும் கூட்டித் தன் மூன்றாம் ஆண்டு விழாவை நடத்தும் சாணக்யா யூடியூப் சேனல்...

அதைவிடவும் ‘செழுமையான’ மற்ற மற்ற யூடியூப் சேனல்களின் மேலாண்மைக்கொரு சவாலாக முன்னேறிக்கொண்டிருப்பதை பாராட்டியே ஆக வேண்டும்.

அடுத்தாண்டின் விழா இன்னுமின்னும் முறையாகவும் - நிறைவாகவும் நடந்தேறி நலம் காணட்டும்.

பேரன்புக்கினிய ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கும் - சாணக்யா யூடியூப் சேனலுக்கும் எனதெளிய வாழ்த்துகளும் – பிரார்த்தனைகளும்!

கட்டுரையாளர் குறிப்பு

வே.ஸ்ரீராம் சர்மா - எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

.

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

3 நிமிட வாசிப்பு

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

4 நிமிட வாசிப்பு

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

4 நிமிட வாசிப்பு

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

ஞாயிறு 20 மா 2022