bஅமைச்சர் கண்ணப்பன் ஆள் மீது ஆக்‌ஷன்!

politics

கடந்த மார்ச் 14ஆம் தேதி சென்னை எழிலகத்தில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை துணை ஆணையர் (1) நடராஜனின் அலுவலகத்தில் அதிரடி ரெய்டு மேற்கொண்டது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு விஜிலென்ஸ் போலீஸ்.
தமிழ்நாடு அரசின் ஒரு துறை அலுவலகத்துக்கு உள்ளேயே தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் புகுந்து ரெய்டு நடத்தி சுமார் 35 லட்ச ரூபாய் ரொக்கம், பணம் எண்ணும் எந்திரம் ஆகியவற்றை கைப்பற்றியதோடு சம்பந்தப்பட்ட போக்குவரத்துத் துறை துணை ஆணையர் (1) நடராஜன் மற்றும் அலுவலக ஊழியர் முருகன் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
இந்தப் பின்னணியில் நேற்று (மார்ச் 19) மாலை போக்குவரத்துத் துறை துணை ஆணையர் (1) நடராஜன் மீது துறை ரீதியான இடமாறுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை எழிலகத்தில் போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் துணை ஆணையராக (1) பணியாற்றிய நடராஜன் திருநெல்வேலி போக்குவரத்து துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது திருநெல்வேலி போக்குவரத்து துணை ஆணையராக இருக்கும் ரஜினிகாந்த் விழுப்புரம் போக்குவரத்துத் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
விழுப்புரத்தில் தற்போது போக்குவரத்துத் துணை ஆணையராக இருக்கும் நெல்லையப்பன், சென்னை எழிலகத்தில் போக்குவரத்துத் துறை துணை ஆணையர் (1) பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

கடுமையான லஞ்சப் புகார்களை எதிர்கொண்டிருக்கும் நடராஜன் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என கூறப்பட்ட நிலையில் இடமாற்றம் மட்டுமே செய்யப்பட்டிருப்பது குறித்து போக்குவரத்துத் துறை வட்டாரத்தில் விசாரித்தோம்.
“மார்ச் 14ஆம் தேதி நடந்த ரெய்டு அதில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்கள் தொடர்பாக விஜிலென்ஸ் போலீஸார் உள்துறைச் செயலாளருக்குத் தனியாக நோட் போட்டுள்ளனர். போக்குவரத்து துறை அமைச்சர் கண்ணப்பனுக்கும் துணை ஆணையர் நடராஜனுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்தும் மேலிடத்துக்கு தகவல்கள் சென்று சேர்ந்திருக்கின்றன. இந்த நிலையில் போக்குவரத்துத் துறைக்குள் மேற்கொள்ளப்படும் துறை ரீதியான நடவடிக்கை ஆகும் இது. இதையடுத்து நடராஜன் மீது சஸ்பெண்ட் நடவடிக்கையை மேற்கொள்ளப்படுவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன” என்கிறார்கள்.
**- வணங்காமுடி**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *