மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 19 மா 2022

திருமண நிதியுதவி : சரத் குரல்!

திருமண நிதியுதவி : சரத் குரல்!

திருமண நிதியுதவி தடையின்றி வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட முழு பட்ஜெட் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் பட்ஜெட் குறித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2022–23 ஆம் நிதியாண்டிற்கான காகிதமில்லா பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் துறை வாரியாக நிதி ஒதுக்கீடு செய்தும், சில திட்டங்களில் மாற்றம் செய்தும், புதிய சீர்திருத்த திட்டங்களையும் அறிவித்தும் உள்ளார்.

‘தமிழக ஒலிம்பிக் பதக்க தேடல் திட்டம்', ‘வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்' திட்டம், கொற்கையில் ஆழ்கடல் ஆய்வு, மதுரை, திருவள்ளூர், கோவை, பெரம்பலூர், வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் புதிய தொழில்பூங்காங்கள் அமைக்கும் திட்டம், வானிலையை துல்லியமாக கண்டறிய சூப்பர் கம்ப்யூட்டர், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் (iTNT) அமைப்பு, விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிய அரசு அருங்காட்சியகங்கள், சமூக வலைதளங்கள் வாயிலாக நடைபெறும் பொய் பிரச்சாரங்கள், குற்றங்களை தடுக்க காவல்துறையில் சமூக ஊடக சிறப்பு மையம் அமைக்கப்படும் என்பவை உட்பட தமிழக அரசால் வெளியிடப்பட்ட புதிய அறிவிப்புகளும், திட்டங்களும் வரவேற்கத்தக்கது.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் என மாற்றியமைக்கப்பட்டு, அரசுப் பள்ளிகளில் 6-12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்ற அறிவிப்பும், ஐ.ஐ.டி.யில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் என்ற அறிவிப்பு பாராட்டுக்குரியது.

அரசுப் பள்ளி மாணவிகளின் உயர் கல்வி சேர்க்கை குறைவாக இருப்பதால் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, தாலிக்கு தங்கம் திட்டத்தால் பயன்பெற்று வரும் மகளிருக்கு பாதிப்பு ஏற்படுத்தாதவாறு அமைய வேண்டும். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படுத்தப்படும் திட்டமும், திருமண நிதியுதவியும் தடையின்றி வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். மேலும், மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்குவதற்கான அறிவிப்பு இந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே வெளியிடாதது மக்களுக்கு ஏமாற்றம் அளித்திருக்கும்.

நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வரும் தமிழகத்திற்கு 14வது நிதிக்குழுவால் வழங்கப்பட்ட மானியங்களைக் காட்டிலும் குறைந்த அளவிலேயே 15-வது நிதிக்குழு மானியம் அதிகரித்துள்ளது. மத்திய அரசு, பாரபட்சமின்றி மாநில அரசுடன் ஒத்துழைப்பு நல்கி செயல்பட்டால், தேச வளர்ச்சியும், மாநில வளர்ச்சியும் சிறப்பாக அமையும். வரவேற்கத்தக்க அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்தாலும், அரசு மேலும் ரூ.90,116 கோடி அளவுக்கு நிகரக் கடன் பெற திட்டமிட்டு, 2023 ஆண்டில் நிலுவைக் கடன் ரூ.6.53 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கும் என்பது வேதனைக்குரியது.

தொலைநோக்கு திட்டங்கள் மற்றும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளின் வாயிலாக கடன் தொகையை குறைத்து, சாதாரண பட்ஜெட் அறிவிப்புகள் என்பதோடு நின்றுவிடாமல் பொருளாதார வளர்ச்சியை மென்மேலும் ஊக்குவித்து செயல்பட்டால் பாராட்டலாம்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வறிய நிலையில் உள்ள விதவையரின் மகள்களுக்கு ஈவேரா மணியம்மையார் நினைவு திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி கலப்பு திருமண உதவி திட்டம், ஆதரவற்ற பெண்களுக்கான அன்னை தெரசா அம்மையர் நினைவு திட்டம், விதவையர்கள் மறுமணத்திற்கான டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் ஆகிய திட்டங்களில் எவ்வித மாற்றமும் இன்றி 8 கிராம் தங்கம் மற்றும் திருமண உதவித்தொகையும், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தில் 10ஆம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாய், 8 கிராம் தங்கமும், பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும், 8 கிராம் தங்கமும் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

சனி 19 மா 2022