மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 19 மா 2022

ஸ்டாலின் ராஜினாமா செய்யச் சொன்னவரை ஆசீர்வதிக்கும் துரைமுருகன்

ஸ்டாலின் ராஜினாமா செய்யச் சொன்னவரை ஆசீர்வதிக்கும் துரைமுருகன்

நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில் பேரூராட்சி முதல் மாநகராட்சி வரையில் சேர்மன் மற்றும் மேயர் வேட்பாளர், துணை சேர்மன் மற்றும் துணை மேயர் யார் யார் என்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் மார்ச் 3ஆம் தேதி அறிவித்திருந்தார்.

மார்ச் 4ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெற்றபோது தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராக போட்டி வேட்பாளர்கள் நின்று வெற்றியும் பெற்றுள்ளார்கள். சில இடங்களில் தோல்வியும் அடைந்துள்ளனர்.

அதேபோல் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள்.

இதனால் கூட்டணி கட்சியினர் முதல்வர் ஸ்டாலினிடம் அதிருப்தியில் குறைகளை சொன்னார்கள். குறிப்பாக விசிக தலைவர் திருமாவளவன், 'கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினரே போட்டியிட்டு வெற்றி பெறுவது கூட்டணி அறமா? அவர்களை திமுக தலைமை ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும்" என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இதையடுத்து, 'கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினரே போட்டியிட்டு வெற்றி பெறுவதால் கட்சித் தலைவர் என்ற முறையில் நான் குறுகிப் போகிறேன்' என உருக்கமான அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின்... கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவினர் தங்கள் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும் திமுகவுக்கு உள்ளேயும் இதுபோல தலைமை அறிவித்த வேட்பாளர்களுக்கு எதிராக நின்று வெற்றி பெற்ற திமுகவினரை பதவி விலகச் சொல்லுமாறு மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களிடம் கடுமையாக எச்சரித்தார்.

முதல்வர் முயற்சி பல இடங்களில் பலன் கொடுத்தது. சில இடங்களில் பலன் தரவில்லை.

இதனால் பல நிர்வாகிகளை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்த திமுக தலைமை பல இடங்களில் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.

இந்த பின்னணியில் திமுகவின் தலைமை அறிவித்த நகராட்சி சேர்மன் வேட்பாளருக்கு எதிராக போட்டியிட்டு அதிமுக கவுன்சிலர்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றவரை தலைமைக் கழக பொறுப்பில் இருக்கும் மூத்த அமைச்சர் உள்ளிட்டோர் ஆதரித்து ஆசீர்வாதம் செய்துள்ளனர்.

கடலூர் மேற்கு மாவட்டத்தில் பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் அடங்கிய பண்ருட்டி நகராட்சி சேர்மன் வேட்பாளராக திமுக தலைமையால் அறிவிக்கப்பட்டவர் சிவா.

அவர் மின்னம்பலத்திடம் பேசும்போது, "திமுக நகர செயலாளர் கே. ராஜேந்திரன் கடந்த பத்து வருடங்களாக அதிமுக எம். எல். ஏ. சத்யாவின் கணவர் பன்னீர்செல்வத்துடன் தொடர்பிலிருந்து பலன்களைப் பெற்று வந்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.

கடந்த அதிமுக ஆட்சியில் பன்னீர்செல்வம் தான் பண்ருட்டி நகரமன்ற சேர்மனாக இருந்தார்‌ இந்த முறை தனது தீவிர விசுவாசியாக இருக்கும் ராஜேந்திரனை சேர்மனாக ஆக்க அனைத்து விதமான உதவிகளையும் செய்து வந்தார்.

இந்த நிலையில் திமுக தலைமை என்னை மார்ச் 3ஆம் தேதி சேர்மன் வேட்பாளராக அறிவித்தது.

4ஆம் தேதி மறைமுகத் தேர்தலில் எனக்கு எதிராக திமுக நகர செயலாளர் ராஜேந்திரன் போட்டி வேட்பாளராக நின்றார்.

மொத்தம் 33 கவுன்சிலர்கள் திமுக கவுன்சிலர்கள் 17, கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் 7 , சுயேச்சை 2, அதிமுக கவுன்சிலர்கள் 7.

நான் (சிவா) 16 வாக்குகள் பெற்றேன், போட்டி வேட்பாளர் ராஜேந்திரன் அதிமுக கவுன்சிலர்கள் ஆதரவுடன் 17 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுவிட்டார்.

பக்கம் பக்கமாக விளம்பரங்கள் கொடுத்து சேர்மன் பதவியேற்றுக் கொண்டு கடந்த 14 ஆம் தேதி முதல் நகர மன்றக் கூட்டத்தைக் கூட்டினார். அதிமுக கவுன்சிலர்கள் உட்பட 13 கவுன்சிலர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர்‌. மீதி கவுன்சிலர்கள் புறக்கணித்து விட்டனர். இதனால் எந்த தீர்மானமும் சேர்மனால் நிறைவேற்ற முடியவில்லை.

மார்ச் 5ஆம் தேதி திமுக துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலையிடம் புகார் கொடுத்தேன், தலைவர் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை தந்து அனுப்பி வைத்தார். மாவட்ட செயலாளரும் அமைச்சருமான வெ. கணேசனிடமும் முறையிட்டேன்.

தலைவரிடம் நகர செயலாளர் ராஜேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க கடிதம் கொடுத்துவிட்டேன் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பார் என்று ஆறுதல் கூறினார். ஆனால் நடப்பது வேறு மாதிரி இருக்கிறது" என்று ஆதங்கப்பட்டார் சிவா.

அப்படி என்ன நடக்கிறது?.

திமுக தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராக போட்டி வேட்பாளராக நின்று வெற்றி பெற்ற சேர்மன் ராஜேந்திரன் கடந்த 16 ஆம் தேதி பொதுச் செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகனை சந்தித்து மலர்க்கொத்து கொடுத்து ஆசி பெற்றார். அதே நாளில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான கணேசனை சந்தித்து சால்வை போர்த்தி ஆசிபெற்றுள்ளார்.

இந்த புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் பார்த்த கடலூர் மாவட்ட உடன் பிறப்புகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடலூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் தலைவர் ஸ்டாலின் அறிவித்த வேட்பாளருக்கு எதிராக போட்டியிட்ட வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த எம் எல் ஏ ஐய்யப்பன் மீது நடவடிக்கை எடுத்தது தலைமை. ஆனால் பண்ருட்டி நகராட்சி சேர்மன் தேர்தலில் தலைமைக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்ற ராஜேந்திரனை ஆதரிக்கிறதே‌... இது என்ன நியாயம்? தலைவர் ஸ்டாலின் ராஜினாமா செய்யச் சொல்கிறார். பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆசீர்வாதம் செய்கிறார். கட்சியில் என்ன நடக்கிறது என்று கேட்கிறார்கள் பண்ருட்டி திமுகவினர்.

-வணங்காமுடி

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

3 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் ...

7 நிமிட வாசிப்பு

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் புகார்!

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் ...

4 நிமிட வாசிப்பு

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் முடிவு!

சனி 19 மா 2022