மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 18 மா 2022

சிறப்புக் கட்டுரை : உரிமை வாழ்வே வா வா !!

சிறப்புக் கட்டுரை :  உரிமை  வாழ்வே  வா வா !!

வே ஸ்ரீராம் சர்மா

ஒவ்வொரு ஊரின் பெயருக்கு பின்னாலும் ஒரு சிறப்புண்டு. வரலாறு உண்டு. அது, உணர்வுபூர்வமானது.

பரம்பரையாக அழைக்கப்பட்டு, அழைக்கப்பட்டு அந்த ஊரின் பெயரே ஓரு மந்திரம் போல மாறிவிடுகிறது. கேட்ட மாத்திரத்திலோர் சக்தி பிறக்கிறது.

மல்லிகை என்றதும் அதன் மணமும், நிறமும், மெத்தென்ற அதன் குணமும் ஒருங்கே மனதில் எழுவதைப் போல…

திருச்சி என்பது மலைக்கோட்டையோடும் - தஞ்சாவூர் என்பது கோபுரத்தோடும் – திருவாரூர் என்பது தேரோடும் – கன்னியாகுமரி என்பது நீலக் கடலோடும் தான் நெஞ்சில் கவிகிறது.

ஆனால், அடிமை இந்தியாவில் ஆங்கிலேயர்களால் சூட்டப்பட்ட சில பெயர்களோ விழிப்படலுத்துள் வீழ்ந்துவிட்ட கனரகத் துகள்களாய் இன்னமும் வேதனை அளிக்கிறது.

அந்த அவலப் பெயர்கள் நம் இன மாண்பை இழித்துக் கொண்டு நிற்பதைக் கண்டு மனம் கொதிக்கிறது.

தலைநகரத்து நெற்றியில் கருநிறமருவெனக் களங்கப்படுத்திக் கொண்டிருக்கும் ‘ப்ரிஸ்ட்லி நகர் செட்டில்மெண்ட்’ என்னும் அந்தப் பெயர்ப் பலகையை - விடுதலை இந்தியாவுக்கு கேவலம் என்பதா ? மானத் தமிழ்நாட்டுக்குப் பேரவலம் என்பதா ?

கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டால் - தன்மானத்துக்குப் பேர் போன நமது முதலமைச்சரின் அரசாங்கம் - போர்க்கோல புறப்பாட்டில் எழுந்தந்த பேரவலத்தை நசுக்கி வைக்கும் எனும் நம்பிக்கையில் கட்டுரையைத் தொடர்வோம்.

குற்றப் பரம்பரை சட்டம். ( CRIMINAL TRIBES ACT )

அன்றைய அடிமை இந்தியாவில் மக்களுக்கு எதிரான ஆங்கிலேயர்களின் அடக்கு முறைகளை எதிர்த்து நாடெங்கும் கலகக் குரல்கள் எழுந்தன.

அவற்றை ஒடுக்கி ஒழிப்பதற்குப் பற்பல சூழ்ச்சிகளை செய்தார்கள் அன்னியர்கள். அதன் உச்சமாகக் கொண்டு வரப்பட்டதுதான் குற்றப் பரம்பரைச் சட்டம்.

இந்தக் கொடுஞ்சட்டம் தமிழகத்துக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் அமல்படுத்தப்பட்டது. ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் அமல்படுத்தப்பட்ட இந்த சட்டத்தினால் அவமானப்படுத்தப்பட்டனர்.

1871 ல் வட இந்தியாவில் புனையப்பட்ட அந்த அயோக்கிய சட்டம் 1876 ஆம் ஆண்டு வங்க தேசத்தில் அமல்படுத்தப்பட்டு கடைசியாக தமிழகத்தில் எட்டிப் பார்த்தது.

முக்குலத்து அப்பாவிகள் !

ஆண்டு 1911.

அந்த சட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது தென் மாவட்டங்கள்.

வேலு நாச்சியார் – மருது பாண்டியர்கள் காலம் தொட்டே அது விடுதலை வீரியம் கொண்ட பூமி என்பதை தங்கள் ரெக்கார்டுகளில் மூலமாகத் தெரிந்து கொண்ட ஆங்கிலேய அதிகாரிகள் முக்குலத்து மக்களை முதல் டார்கெட்டாக வைத்தார்கள்.

குறிப்பிட்ட பகுதி வாழ் மக்கள் பிரித்தடிக்கப்பட்டனர்.

‘கச்சேரி’ எனப்பட்ட போலீஸ் பூத்களில் அன்றாடம் கைரேகை பதிக்க வேண்டும். கிழிக்கப்பட்ட கோடுகளுக்குள் வாழ்ந்து கொள்ள வேண்டும் என நசுக்கப்பட்டனர். அத்தியாவசிய பாத்திரங்கள் தவிர ஆயுதமாகக் கூடிய அனைத்தும் பிடுங்கப்பட்டன.

கொடுக்கப்படும் ரேஷனைப் பொங்கித் தின்று கொண்டு ஆடு மாடுகள் போல் பட்டிகளில் அடைந்து கொள்ள வேண்டும்.

ராத்திரி சீட்டு

அக்கம்பக்கத்துச் சொந்த பந்தங்களின் நல்லது கெட்டதுகளுக்கு போக வேண்டும் என்றாலும் கூட ஆங்கே ‘மேனேஜர்’ பொறுப்பிலிருந்த வெள்ளையனிடம் ‘ராத்திரி சீட்டு’ பெற்றுக் கொண்ட பின்பே செல்ல முடியும்.

விடிவதற்குள் வந்தாக வேண்டும். இல்லையென்றால், குடும்பம் குறைக்கப்பட்டிருக்கும்.

குற்றப்பரம்பரை சட்டம் என்பது இந்தியர்களின் மேல் ஏவப்பட்ட பேரவமானம். சொல்லப் போனால் இப்படிப்பட்ட சட்டத்தைப் புனைந்ததுதான் குற்றம்.

அன்றாடம் வைக்கும் கைரேகையின் மூலம், “நான் நம்பத்தகாதவன். நான் ஒரு குற்றவாளி “ என அந்த எளிய மனிதர்களின் மனதில் ஆழப் பதிக்க முயன்றது வெள்ளை அதிகாரத்தின் திமிர்க் குற்றமல்லாமல் வேறென்ன ?

இந்தக் கேவலத்தை ஏற்க மறுத்து தமிழகத்தில் கலகம் செய்தார்கள் நம் முன்னோர்கள். சுட்டுத் தள்ளினார்கள் வெள்ளையர்கள். ஏறத்தாழ 20 உயிரை பலி கொண்டனர்.

வெள்ளையர்களின் துப்பாக்கிகளோடு - தங்களிடம் இருந்த வில் , ஈட்டி , வேலாயுதங்களைப் பொருத்திச் சமராட முடியாத தமிழ்ப் போராளிகள் மறைந்திருந்து தாக்கத் துவங்கினார்கள்.

திணறிப் போனது கூலிப்படை.

உள் நாட்டுக் கடத்தல்

கலகம் மேலும் பரவிவிடக் கூடாது என்று பதட்டப்பட்ட அன்னியர்கள் ஆலோசனை கலந்தனர்.

வீரியமான போராளி மக்களை அவர்களது வாழ்விடத்தில் இருந்து வேரும் வேரடி மண்ணுமாகப் பிடுங்கி எடுத்து விட்டால் அடங்கி விடுவார்கள் எனக் கணக்குப் போட்டனர்.

உள் நாட்டுக் கடத்தலாக நாடெங்கும் பிரித்து அடித்தனர்.

அவ்வாறு ஆரம்பத்தில் தென் மாவட்டங்களை சார்ந்த 32 கிராமங்களிலிருந்து பிடுங்கி எறியப்பட்ட முன்னோர்கள் விழுப்புரம் பகுதியில் வந்து விழுந்திருக்கிறார்கள்.

முற்றிலும் புதிய நிலப்பரப்பு . உணவை உண்டாக்குவதும் – பெண்டு குழந்தைகளை உயிரோடு காப்பாற்றுவதுமே முதல் கவனமாகப் போய்விட ‘தலையெழுத்தே’ என வாழ்ந்து கொண்டார்கள்.

அவர்களின் அன்றைய குடியிருப்புக்கு அன்றிருந்த ஏதோவோர் நவாபின் பெயரால் ‘ஹசீஸ் நகர் செட்டில்மெண்ட்’ என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

நாளடைவில் கொஞ்சம் பேர் பிரிக்கப்பட்டு ‘பம்மல்’ என்னுமிடத்தில் வைக்கப்பட்டார்கள்.

நீண்ட நாட்கள் ஓரிடத்திலேயே வைத்திருப்பது நல்லதல்ல என செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து அறிவுறுத்தல் வர...

பம்மலில் இருந்தவர்களை மேலும் இரண்டு பிரிவாகப் பிரித்தார் அன்றைய சென்னை மாகாண லேபர் கமிஷனராக இருந்த வெள்ளை அதிகாரி ‘பிரிஸ்ட்லி’.

பிரிஸ்ட்லி நகர் செட்டில்மண்ட் .

சென்னை ஓட்டேரி அப்போது ஆளரவமற்ற புளியங்காடாக இருந்திருக்கிறது. அங்கே கொண்டு வந்து ஒரு பகுதியினரைக் குவித்தார் ப்ரிஸ்ட்லி.

அந்த வெள்ளையரின் பெயரால் அமைந்ததுதான் ‘பிரிஸ்ட்லி நகர் செட்டில்மெண்ட்’.

அடிமை இந்தியாவில் நடந்த அவலத்தின் நீட்சியாக - ஏறத்தாழ 300 குடும்பங்களோடு - அதே அவலப் பெயரோடு இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கிறது அந்தக் குடியிருப்பு !

அவமான முகவரி !

அந்தக் குடியிருப்புக்கு நேரில் சென்றிருக்கிறேன். வெள்ளந்தியான அந்த மக்களை சந்தித்து உறவாடியிருக்கிறேன்.

வேலுநாச்சியார் – மருது பாண்டியர்கள் வழி வந்த வீரம் செறிந்த அந்த விடுதலைப் போராளிகளின் குடியிருப்புக்கு - மண்ணையும் மக்களையும் எதிரியிடமிருந்து காக்க போராடிய அந்த மாமல்லர்களின் குடியிருப்புக்கு செட்டில்மெண்ட் என்ற பெயர் சர்வ சத்தியமாகப் பொருந்தாது.

கேட்கிறேன்…

யாருடைய மண்ணில் , யார் - யாரை செட்டில் செய்வது ?

விடுதலை மண்ணில் அடிமை நாமகரணம் நமக்கெதற்கு ?

குற்றப்பரம்பரை சட்டம் என்பது இந்தியர்கள் மேல் அன்னியரால் செலுத்தப்பட்ட உளவியல் போர் ! அதன் நீட்சியாக இன்னமும் அவலமாடிக் கொண்டிருக்கிறது ‘செட்டில்மெண்ட்’ என்னும் அந்தக் கெட்ட வார்த்தை.

அது, சுதந்திர இந்தியாவின் இறையாண்மையையும் - மாட்சிமை மிக்க அதன் குடி மக்களையும் நேரடியாக அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறது.

அன்னைத் தமிழ்நாட்டில் அந்த அவமான முகவரி தூக்கி எறியப் பட்டாக வேண்டும். கனவிலும் ஏற்க முடியாத அந்தப் பேரசிங்கத்தை உடனடியாகத் துடைத்தெறிந்தாக வேண்டும்.

குற்றப்பரம்பரை சட்டம் ஒழிக்கப்பட்டு விட்டது என்பது உண்மையானால் அதன் இன்னொரு பரிமாணமான செட்டில்மண்ட் என்ற பேரவலமும் ஒழிக்கப்பட்டாக வேண்டும் .

விடுதலை இந்தியாவின் 75 ஆம் ஆண்டை ஆரவாரமாகக் கொண்டாடிப் பலனில்லை. அதற்கு அர்த்தம் சேர்ப்பதுதான் அழகு !

உண்மையில் அது தியாகிகளின் குடியிருப்பு ! அவர்களின் நலம்பாட வேண்டியது நம் பொறுப்பு !

இன்றைய யதார்த்த நிலை !

உணர்வுபூர்வமான இந்த கட்டுரையை முடிப்பதற்கு முன் பிரிஸ்ட்லி நகர் செட்டில்மண்ட்வாசிகளிடம் ஒரு வார்த்தை பேசிவிடலாம் என்று தோன்றியது.

அந்தக் குடியிருப்புக்கு சிமெண்ட்டில் ஒரு நுழைவாயில் ( ORCH ) கட்டத் துவங்கியிருப்பதாக அறிந்து - அதற்கு முன்னர் அந்த நகரின் தலைவரான திரு. மோகன் அவர்களிடம் தொடர்பெடுத்துவிட எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.

வேறு சிலரிடம் உரையாடிப் பார்த்த வகையில், பெயர் மாற்றம் குறித்து அவர்கள் மாற்றுக் கருத்தைக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ந்து போனேன்.

இயல்பில் அவர்கள் மிக நல்லவர்கள். ஆனால், காலம் காலமாக வஞ்சிக்கப்பட்டதாலோ என்னவோ, பிடி கொடுக்காமல் கொஞ்சம் இறுகிய அணுகுமுறையோடே இருக்கிறார்கள்.

வாழ்வாதாரம் குறித்த சில அச்சங்கள் அவர்களின் ஆழ் மனதில் அடைந்திருப்பதை உணர முடிந்தது.

அவர்களுக்கிடையே முறையான ஒழுங்கமைவும் – அரசாங்கத்தின் தரப்பிலிருந்து நீண்டதொரு கருத்தாக்க அரவணைப்பும் ( COUNSELING ) அவர்களுக்கு தேவைப்படுகிறது என்பதை உணர முடிந்தது.

சரியாக 111 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் பரம்பரை நிலத்தை விட்டகன்று வந்து செய்வதறியாது திகைத்த எளிய மக்கள் அவர்கள்.

பனிப்புகையினூடே முதலைகளின் நதியினைக் கடப்பது போல - தட்டுத் தடுமாறிக் கடந்து வந்த அவர்களை தியாகிகள் என்றாலது தகும்.

அவர்களது வாழ்வை வளமாக்கித் தருவது, நம் முன்னோர்களுக்கு நாம் செய்தாக வேண்டிய நன்றிக் கடனாகும் .

தன்மான அரசாங்கம் !

இன்னமும் முடிவுரை எழுதப்படாத இந்தக் கட்டுரையை - இந்த அளவிலேயே நிறுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

ஆழங்காற்பட்ட அரசியல் திண்மையும் – தன்மான அறச்சீற்றமும் படைத்த நமது முதலமைச்சரின் வழிகாட்டுதலில்… கற்றறிந்தோர் அடங்க வெற்றி நடை போடும் இந்த அரசாங்கம் இதைத் தன் பாணியில் முடித்து வைக்கும் என உளமார நம்புகிறேன் !

திராவிடப் பொன்னாட்டின் மானப் பெருங்கவி பாவேந்தர் பாரதிதாசனார் ‘வருக விடுதலை வாழ்வு’ எனும் தலைப்பில் பாடிய கவிதை வரிகள்தான் நெஞ்சுக்குள் நிழலாடுகின்றது ...

அடிமை தவிர்த்தாய் வா வா – நல்

அன்பில் உயர்ந்தாய் வா வா !

ஆழப் புதைத்தாய் மடமை – நல்

அறிவில் உயர்ந்தாய் வா வா !

உரிமை வாழ்வே வா வா – எம்

ஒற்றுமை விளைவே வா வா !

பெரிது முயன்றார் தமிழர் – அவர்

பெற்றதோர் பேறே வா வா !

கட்டுரையாளர் குறிப்பு

வே.ஸ்ரீராம் சர்மா - எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

.

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

வெள்ளி 18 மா 2022