வானிலை மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு!

வானிலை மேம்பாட்டுக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
இன்று (மார்ச் 18) நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் அவர், “வானிலையை துல்லியமாக்கக் கணிக்கப் பேரிடர் எச்சரிக்கை அமைப்புகளை மேம்படுத்துவதன் அவசியத்தை அண்மையில் சென்னையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு நமக்கு உணர்த்தியது. பேரிடர் தாக்கும் முன் உரிய நேரத்தில் எச்சரிக்கையை வழங்குவதற்கு வானிலை பலூன் அமைப்பு, இரண்டு வானிலை ரேடர்கள், 100 தானியங்கி வானிலை மையங்கள், 400 தானியங்கி மழைமானி, தானியங்கி நீர்மட்ட கருவிகள், அதிவேக கணினி உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட ஒரு கட்டமைப்பை அரசு உருவாக்கும். இப்பணிகளுக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
கடந்த நவம்பர் -டிசம்பர் மாதம் சென்னையில் கடும் மழை பெய்தது. அப்போது, சென்னை வானிலை ஆய்வு மையத்தில் மழை குறித்து உரிய நேரத்தில் சரியாகக் கணக்கிட்டு எச்சரிக்கை அறிக்கையை வழங்க போதுமான தொழில்நுட்ப வசதிகள் இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில் வானிலை மேம்பாட்டுக்கு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
-பிரியா