மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 18 மா 2022

குறையும் வருவாய், நிதி பற்றாக்குறை: பிடிஆர் பட்ஜெட் உரை!

குறையும் வருவாய்,  நிதி பற்றாக்குறை:  பிடிஆர் பட்ஜெட் உரை!

2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரையாற்றி வருகிறார்.

திமுக அரசு தாக்கல் செய்யும் முதல் முழு பட்ஜெட் இதுவாகும். பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் காலை சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர். முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாழ்த்துப் பெற்றார்.

சரியாக காலை 10 மணிக்குச் சட்டப்பேரவை தொடங்கியது. அனைத்து உறுப்பினர்களுக்கும் வணக்கம் தெரிவித்த சபாநாயகர் அப்பாவு,

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை

ஆராய்வான் செய்க வினை என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி, நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்யலாம் என்றார்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசத் தொடங்கியதுமே, அதிமுகவினர் பேச அனுமதிக்க கேட்டு கூச்சலிட்டனர்.

எனினும் தனது உரையை நிறுத்தாமல் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “திமுக ஆட்சிக்கு வந்த பின் நான் தாக்கல் செய்த பட்ஜெட்டின் போது அறிவிக்கப்பட்ட பெரும்பாலான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து இன்று வரை நாங்கள் நிதி மேலாண்மையில் அடைந்த சாதனைகள் அனைத்தும் முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதலாலும், முழு ஆதரவாலும் நடந்தவையாகும்” என்றார்.

“கொரோனா வீரியம் மிக வேகமாக இருந்த காலத்தில் பொறுப்பேற்றோம். அத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும் முதல் நாளிலேயே 5 வாக்குறுதிகளை நிறைவேற்றக் கையெழுத்திட்டார் முதல்வர். அதைத்தொடர்ந்து மீதமுள்ள வாக்குறுதிகளையும் நிறைவேற்ற ஒரு தொலைநோக்கு திட்டத்தையும் வகுத்துள்ளார். அதன் அடிப்படையில் இந்த அரசு வரலாறு காணாத வேகத்தில், தொடர்ந்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது.

இதுமட்டுமின்றி கடந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன. மழை வெள்ளம், கோவிட் பெருந்தொற்று என பதவி ஏற்ற நாளில் இருந்து பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்தது. 2015ஆம் ஆண்டு பெய்த மழையில் சென்னை பெரும் பாதிப்பைச் சந்தித்தது. அதைக்காட்டிலும் கடந்த ஆண்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மிக அதிகமான மழை பொழிவு இருந்தது.

இருப்பினும் முதல்வர் மேற்கொண்ட நடவடிக்கையாலும், கள ஆய்வுகளாலும் இறப்புகளும் இழப்புகளும் கட்டுப்படுத்தப்பட்டன" என கூறினார்.

அப்போது அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் தனது உரையை நிறுத்தினார் பழனிவேல் தியாகராஜன்.

உடனே சபாநாயகர் அப்பாவு, “நீங்கள் இருவரும் முதல்வராக இருந்துள்ளீர்கள். இன்று பட்ஜெட் மட்டும்தான் தாக்கல் செய்யப்படும், அதைத் தவிர வேறு எதுவும் கிடையாது என்று உங்களுக்குத் தெரியும். தெரிந்தே இப்படி நடந்துகொண்டால் இது நியாயமா?. நீங்கள் உட்காருங்கள் உங்களுக்குப் பதில் சொல்கிறேன். நிதியமைச்சர் தொடரலாம்” என்றார்.

இதையடுத்து அதிமுகவினரின் கூச்சலுக்கு நடுவே மீண்டும் உரையைத் தொடங்கினார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ”கொரோனா மூன்றாம் அலை, ஒமிக்ரான் பாதிப்பைத் தமிழகம் சந்தித்தது. அதனை மாநில அரசு சிறப்பாக கட்டுப்படுத்தியது. எனினும் எதிர்பாராத நடந்த நிகழ்வுகள், ஏற்கனவே மோசமான நிலையிலிருந்த மாநில நிதிநிலையில் மேலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது.

பெருமளவில் செலவினங்கள் ஏற்பட்ட போதிலும், சிறந்த நிதி நிர்வாகத்தையும், நிதி மேலாண்மையையும் அரசு கடைப்பிடித்தது.

2014ஆம் ஆண்டு முதல் வருவாய் பற்றாக்குறை அச்சுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் அதிகரித்து வந்தது. முதன்முறையாக இந்த ஆண்டு இந்நிலை மாற்றப்பட்டுள்ளது 7000 கோடிக்கும் மேலான வருவாய் பற்றாக்குறை குறையவுள்ளது. இந்த சவாலான ஆண்டில் நிதிப் பற்றாக்குறை 4.61 சதவிகிதத்திலிருந்து 3.80 சதவிகிதமாகக் குறையவுள்ளது.

இதற்கு அரசின் நிர்வாகத் திறன் தான் காரணம்.

திராவிட இயக்கத்தின் கோட்பாடுகளே இந்த அரசின் ஆணி வேராகும். பெரியார், அண்ணா, கலைஞரின் சிந்தனைகளும், செயல்களும்,எழுத்துகளும் தான் இந்த அரசை வழிநடத்துகிறது. திராவிட இயக்கம் சமூக நீதிக்கான போராட்டத்தில் குறிப்பிடத்தக்கச் சாதனைகளைப் பல புரிந்த போதிலும் இன்னும் முழுமையாக வெற்றி பெறவில்லை” என்றார்.

-பிரியா

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

வெள்ளி 18 மா 2022