மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 17 மா 2022

கப்பம், கமிஷன், கண்ணப்பன்: விஜிலென்சை அதிரவைக்கும் வாக்குமூலங்கள்!

கப்பம், கமிஷன், கண்ணப்பன்: விஜிலென்சை அதிரவைக்கும் வாக்குமூலங்கள்!

சென்னை எழிலகத்தில் போக்குவரத்து துறை ஆணையர் அலுவலகத்தில் உள்ள துணை ஆணையர் நடராஜன் அறையில் கடந்த மார்ச் 14ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியது அரசு வட்டாரங்களில் குறிப்பாக போக்குவரத்து துறை வட்டாரங்களில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

போக்குவரத்துத் துறையில் ஊழல்களும், முறைகேடுகளும் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, தமிழக விஜிலென்ஸ் போலீஸார் முதல்வரின் சம்மதத்துடன் கடந்த 14ஆம் தேதி மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு எழிலகம் முதல் மாடியில் உள்ள துணை ஆணையர் 1 நடராஜன் அறைக்குள் நுழைந்து அதிரடி சோதனைகள் செய்தனர். இந்த சோதனையில் 35 லட்சம் ரூபாய் ரொக்கம், வரவு செலவு கணக்கு டைரி, துண்டு சீட்டுகள், செல்போன், பணம் எண்ணக்கூடிய இரண்டு மிஷின் மற்றும் முக்கிய ஆதாரங்களைக் கைப்பற்றியதோடு சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்டும் சென்றார்கள்.

இதுதொடர்பாக எழிலக ரெய்டு: அடுத்த டார்கெட் அமைச்சர் கண்ணப்பன் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

ரெய்டுக்கு பிறகான நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மற்றும் விஜிலன்ஸ் வட்டாரம் ஆகியவற்றில் விசாரித்தோம்.

"விஜிலென்ஸ் போலீஸ் 14ஆம் தேதி மதியம் எழிலகம் முதல் மாடிக்கு வந்தவர்கள் சுமார் நான்கு மணி நேரம் தீவிரமான சோதனைகள் செய்தனர். போக்குவரத்து துணை ஆணையர் (1) நடராஜன் அறையில் பணம் எண்ணக்கூடிய இரண்டு மிஷின், கருப்பு நிற பேக்கில் பண்டல் பண்டலாக பணம் இருந்தது. அந்த பணக் கட்டுகளில் யார், யார் பணம் கொடுத்தார்கள் என்று அவர்கள் பெயரையும் எழுதி அந்த பண்டல் மீது ரப்பர் பேண்டு போட்டு வைத்திருந்தார்கள்.

கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்காக 30 பேர் அட்வான்ஸ் கொடுத்துள்ளார்கள். அதில் முருகன் ஐந்து லட்சம், மாதேஸ்வரன் ஐந்து லட்சம், தசரதன் ஐந்து லட்சம், சாந்த லட்சுமி ஐந்து லட்சம் என அட்வான்ஸ் கொடுத்தவர்கள் பெயரை எழுதிய துண்டு சீட்டை அந்தந்த பண்டல் மீது வைத்து ரப்பர் பேண்டு போட்டு வைத்திருந்தனர். இதேபோல 32 லட்சம் ரூபாய்க்கும் யார் யார் கொடுத்தார்கள் என்ற பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. மீதி மூன்று லட்சம் யார் கொடுத்தவர் என்று பெயரைக் குறிப்பிடாமல் இருந்துள்ளது. ஆக மொத்தம் 35 லட்ச ரூபாய் இருந்தது.

பணம் எண்ணக்கூடிய பணிகளைக் கவனிக்கும் முருகன் மற்றும் ரகுராமன் இருவரும் போக்குவரத்து துறை ஆணையர் அலுவலக ஊழியர்கள். இவர்கள் ரெய்டு வந்தபோது தப்பி ஓடிவிட்டனர்.

அதில் முருகன் என்பவரைப் பிடித்து அவரிடமிருந்து சில லட்சம் பணத்தைப் பறிமுதல் செய்து வாக்குமூலமும் பெற்றுள்ளனர் விஜிலென்ஸ் போலீசார். அவரது வாக்குமூலத்தில், 'துணை ஆணையர் நடராஜனைச் சந்திக்கப் பலபேர் வருவார்கள், போவார்கள். அதில் யார் கொடுத்த பணம் எதற்குக் கொடுத்த பணம் என்று எனக்குத் தெரியாது. பணத்தை எண்ணி கட்டுப்போட்டுக் கொடுப்போம். அதான் எங்கள் வேலை. அந்த பணத்தை அமைச்சர் கண்ணப்பன் சொல்பவரிடம் கொடுத்து அனுப்பிவிடுவார். சில நேரத்தில் நடராஜனே எடுத்துப்போய் கொடுப்பார்' என்று கூறியுள்ளார் முருகன்.

ரெய்டு நடத்திய அன்று போக்குவரத்து துறை துணை ஆணையர் நடராஜன் பயன்படுத்தக்கூடிய அரசு வாகனமான பொலிரோ காரில் பல டாக்குமென்ட்டுகளை கைப்பற்றியுள்ளார்கள். அதில் பிரேக் இன்ஸ்பெக்டர்கள் இட மாறுதல் பட்டியல், பதவி உயர்வு பட்டியல், எந்தெந்த ஆபீஸ் எவ்வளவு கொடுத்துள்ளார்கள், கொடுக்க வேண்டியது எவ்வளவு, வரவு எவ்வளவு செலவு எவ்வளவு என்ற பட்டியல் இருந்துள்ளது.

அதைவிட முக்கியமானது திருச்சி கிழக்கு ஆர்டிஓ ஒருவர் தெளிவான பட்டியலை அனுப்பியுள்ளார். அதில் இந்த மாதம் 493 வாகனங்கள் ரிஜிஸ்டர் செய்யப்பட்டது‌. லைசென்ஸ், எல்.எல்.ஆர், எஃப்சி என அனைத்திலும் கிடைத்த பணம் வரவு 2 லட்சத்து 93 ஆயிரம், செலவு 2 லட்சத்து 99 ஆயிரம், ஆறாயிரம் என் சொந்த பணத்தைப் போட்டுக் கொடுக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். மாதம் 25 ஆயிரம் இருந்த மாமூல் பணத்தை 2.5 லட்சமாக உயர்த்தி விட்டதன் விளைவுதான் இது‌. அந்த லஞ்சப்பணப் பட்டியலும் விஜிலென்ஸ் போலீஸிடம் சிக்கியுள்ளது. அதை முதல் தகவல் அறிக்கையிலும் காட்டியுள்ளார்கள்.

அதேபோல் கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்கு அட்வான்ஸ் லஞ்சம் கொடுத்தவர்களின் பெயர்கள் பண்டல் மீது இருந்ததை வைத்து... சாந்தி, பரமசிவம், பிரேம்குமார் ஆகிய மூவரிடமும் விஜிலென்ஸ் போலீஸ் விசாரித்துள்ளார்கள்.

அதில் ஒருவர் நகையை அடகு வைத்தும் வட்டிக்கு வாங்கியும் கொடுத்துள்ளதாகக் கூறியுள்ளார். இன்னொருவர் வங்கியில் பர்சனல் லோன் போட்டும், வெளியில் கடன் வாங்கி கொடுத்துள்ளதாக ஆதாரங்களையும் காட்டியுள்ளார்கள்.

கண்காணிப்பாளர் பதவி உயர்வு பட்டியலில் உள்ள மீதியுள்ள 27 பேர் இன்று மார்ச் 17ஆம் தேதி, விஜிலென்ஸ் தலைமை அலுவலகத்தில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

போக்குவரத்து துறை அலுவலகங்களில் இருந்து மாதாமாதம் கப்பத் தொகை, பணி உயர்வு இடமாறுதல்களுக்கு லட்சக்கணக்கில் லஞ்சம் ஆகியவை மட்டுமல்ல... பல அரசு பேருந்து டெப்போக்களில் உதிரி பாகங்கள் டெண்டர் விடாமல் வாங்க சொல்லியுள்ளார் அமைச்சர் கண்ணப்பன். 13 போக்குவரத்துக் கழக டெப்போக்களில் 3 டெப்போ மேனேஜர்கள் டெண்டர் விடாமல் பர்ச்சேஸ் செய்யமுடியாது என மறுத்துள்ளார்கள். அதனால், அந்த 3 மேனேஜர்களையும் விழுப்புரம், திருவாரூர், கும்மிடிப்பூண்டி ஆகிய மூன்று மாவட்ட டிப்போக்களுக்கு இடமாற்றம் செய்துவிட்டார் அமைச்சர் கண்ணப்பன்.

அதேபோல் லைசன்ஸ், ஆர்சி புக், ரெனிவல் செய்து பிரிண்ட் கொடுக்கும் வேலை தனியார் நிறுவனமான BAN TONயிடம்ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு சுமார் 5ஆயிரம் லைசென்ஸ் வழங்கப்படுகின்றன. 5 ஆயிரம் புதிய வாகனங்கள் பதிவு செய்து ஆர்சி புக் கொடுப்பது, மூவாயிரம் எஃப்சி கொடுப்பது, ரெனிவல் செய்வது என 15ஆயிரத்திற்கும் குறையாமல் நடைபெறும். ஒவ்வொன்றுக்கும் நூறு இருநூறு என்று அன்றாடம் கமிஷனாக கேட்டு வசூலித்து வருகிறார்கள்" என்று கொட்டி முடித்தார்கள்.

போக்குவரத்துத் துறை அமைச்சரும் அவரை சுற்றியிருப்பவர்களும் எதற்கெடுத்தாலும் கப்பம்,

கமிஷன் என வேட்டையாடி வருகிறார்கள். இவ்வளவு துல்லியமான ஆதாரங்கள் போக்குவரத்து அமைச்சர் கண்ணப்பனுக்கு எதிராக சிக்கியிருக்கும் நிலையில்... நாளை பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க இருக்கிறது. அதனால் கண்ணப்பன் மீது உடனடி நடவடிக்கை இருக்குமா அல்லது சற்று தாமதமாகுமா... அதாவது கண்ணப்பனுக்கு முதல்வர் சடன் பிரேக் போடப் போகிறாரா சற்று தூரம் ஓட விட்டு பிரேக் போட போகிறாரா என்பதே போக்குவரத்து துறையில் நடக்கும் இப்போதைய பட்டிமன்றம்.

வணங்காமுடி

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

வியாழன் 17 மா 2022