மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 17 மா 2022

சிறப்புக் கட்டுரை: சீன தேசத்தில் சோழர்கள் கோயில் கட்டியது ஏன்?

சிறப்புக் கட்டுரை: சீன தேசத்தில் சோழர்கள் கோயில் கட்டியது ஏன்?

அனிருத் கனிசெட்டி

வரலாற்றின் இடைக்காலத்தின் இந்திய பெருங்கடலின் வரலாறும் கதைகளும் நம்மை வியக்கவைக்கும் வகையில் இருக்கின்றன. சீன அரசுகளுடன் உறவு வைத்திருந்தது முதல் தமிழர்களின் வர்த்தக ஆதிக்கம் வரை இந்தியப் பெருங்கடலின் அலைகள் பல்வேறு வரலாற்றுக் கதைகளைச் சுமந்துள்ளன.

அரசு உறவுகள், கலாச்சார உறவுகள், செழிப்பான துறைமுகங்கள், பணம் படைத்த வர்த்தகர்கள், போர்கள் என இந்தியப் பெருங்கடலைச் சுற்றிப் பரவிக் கிடக்கும் கதைகளில் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமில்லை.

11ஆம் நூற்றாண்டில் பர்மாவைச் சேர்ந்த அரசர் கியன்சித்தா தனது நாட்டின் நிலக்கிழார்களிடம் உரையாற்றினார். அப்போது அவர், தென்னிந்தியாவில் உள்ள “சோழி அரசுக்கு” தங்க இழையில் ஒரு கடிதம் எழுதியுள்ளதாகவும், அதில் புத்த மதத்தின் மூன்று அணிகலன்கள் (புத்தம், தர்மம், சங்கம்) பற்றி அறிவித்திருந்ததாகவும், அதன்பின் சோழி அரசு போலியான கோட்பாடுகளை உடனடியாக ஒழித்து உண்மையான புத்த மார்க்கம் பக்கம் வந்ததாகவும் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

மேலும், “சோழி அரசர்” தனது மகளை பர்மாவைச் சேர்ந்த அரசருக்குத் திருமணம் செய்வதற்காக அனுப்பி வைத்ததாகவும் கியன்சித்தா தெரிவித்துள்ளார். அந்தச் “சோழி” அரசர் வேறு யாருமல்ல, சோழப் பேரரசை சேர்ந்த முதலாம் குலோத்துங்க சோழன்தான்.

குலோத்துங்கன் சைவம், வைணவத்தின் மிகப்பெரிய ஆதரவாளர் என்பது வரலாற்றில் தெளிவாகிறது. ஆனால், எங்கோ பர்மாவில் இருக்கும் ஓர் அரசர் சொல்வதைக் கேட்டு குலோத்துங்கன் புத்த மார்க்கத்தின் பக்கம் ஏன் வர வேண்டும்? தனது மகளை ஏன் திருமணத்துக்காக பர்மாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும்?

இதற்கான பதில் சோழச் சுவடுகளில் இருக்கிறது. 1090ஆம் ஆண்டில், சோழ துறைமுக நகரான நாகப்பட்டினத்தில் உள்ள புத்த மடத்துக்குக் கொடுக்கப்பட்டு வந்த நன்கொடையை குலோத்துங்க சோழன் மீண்டும் புதுப்பித்துள்ளார். அந்த புத்த மடம் 1006ஆம் ஆண்டில் தென்கிழக்காசியாவின் முக்கிய சக்தியான ஸ்ரீவிஜய அரசால் கட்டமைக்கப்பட்டது.

ஸ்ரீவிஜய அரசு ஒரு மிகப்பெரிய கடற்படை கூட்டமைப்பாக இயங்கி இந்தியா, சீனா இடையேயான கடல் வணிகப் பாதைகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த ஸ்ரீவிஜய அரசால் நாகப்பட்டினத்தில் கட்டப்பட்ட புத்த மடத்துக்குக் குலோத்துங்கன் நன்கொடை கொடுத்தது மத அடிப்படையில் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது போன்றதாகும்.

இதன் பின், பர்மாவில் உள்ள பாகன் அரசிடம் அரசு உறவுகள், திருமண உறவுகளை ஏற்படுத்த முதலாம் குலோத்துங்கன் முயற்சி செய்துள்ளார். அப்போதைய காலத்தில் பாகன் அரசு மிகப்பெரிய அளவில் சக்திவாய்ந்ததாக வளர்ந்து வந்துள்ளது. மேலும், தமிழ் வர்த்தகர்களின் கப்பல்கள் பாகன் அரசுக்குச் சொந்தமான பகுதியில் அதிகம் வணிகம் செய்துள்ளன.

குலோத்துங்கனின் நுட்பமான வியூகம்

இவை எல்லாமே பாகன் அரசரான கியான்சித்தா தனது சொந்த இலக்குகளை அடைவதற்காகத் தந்திரமாகச் செய்த அரசியல் உத்தி. ஆனால், குலோத்துங்கனின் உத்தி கொஞ்சம் காலம் கழித்துச் சிறப்பாகப் பலன் கொடுத்தது. சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு, சீன இலக்கியங்களில் பாகன் அரசும், சோழ அரசும் மிக நெருக்கமாகச் செயல்பட்டுவந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 1079ஆம் ஆண்டில் சீனாவில் குவாங்சோவில் உள்ள தாவோயிச மடத்துக்குக் குலோத்துங்கன் 6,00,000 தங்கத் துண்டுகளை அனுப்பிவைத்துள்ளார். அதனால் மிகவும் ஈர்க்கப்பட்ட சீன அரசவை குலோத்துங்கனுக்குத் தனிப் பட்டமும் கொடுத்துள்ளது. இதுபோக, சோழ அரசுக்குச் சீனர்கள் முதல்தர வர்த்தக அந்தஸ்து கொடுத்துள்ளனர். உள்ளபடியே, குலோத்துங்கனின் உண்மையான இலக்கு இதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

இதேபோல கம்போடியா, இந்தோனேசியா, இலங்கை உள்ளிட்ட அரசுகளுக்கும் சோழர்களுக்கும் இடையே ஏராளமான பரிசுப் பரிமாற்றங்கள் நடந்திருப்பதற்கு வரலாறு நெடுகச் சான்றுகள் உள்ளன. அதேபோல கோயில்கள், மடாலயங்களைப் புதுப்பிப்பதற்கான கோரிக்கைகளும் பரிமாறப்பட்டுள்ளன. இதன் மூலம், சோழர்களுக்கும், இந்திய பெருங்கடல் சார்ந்த அரசுகளுக்கும் இடையே கலாச்சார, மதம் சார்ந்த உறவுகள் ஏற்பட்டிருப்பது தெளிவாகிறது.

தமிழ் வர்த்தகர்களின் செயல்பாடு

இந்தியப் பெருங்கடலில் அரசு உறவுகள், வர்த்தக உறவுகள் வலுப்பெற்றது ஒருபுறம் இருக்க, தமிழ் வர்த்தகர்கள் செய்த காரியங்கள் இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றன. உலகப் பொருளாதார வரலாற்றில் தமிழ் வர்த்தகர்கள் பெரிதாகப் பேசப்படாத நாயகர்களாகவே உள்ளனர்.

‘ஐநூறுவர்’ எனப்படும் தமிழ் வர்த்தக அமைப்பு ஆசிய வரலாற்றில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இது ஐநூறு வர்த்தகர்களைக் கொண்ட அமைப்பு என்பது அதன் பெயரில் இருந்தே தெளிவாகிறது. குதிரை, மசாலா பொருட்கள், யானை தந்தம், ஜவுளி, வெண்கலம் என எண்ணிலடங்காச் சரக்குகளை ஐநூறுவர் வணிகம் செய்துள்ளனர்.

900 ஆண்டுகளாகத் தென்னிந்தியா தொடங்கித் தென்மேற்கு இந்தியா, கிழக்கு இந்தியக் கடலோரப் பகுதிகள் எனப் பல இடங்களில் ஐநூறுவர் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. அக்கால வர்த்தகர்கள் தங்கள் தொழில் இலக்குகளை அடைவதற்கு அரசு உறவுகள், போர் இரண்டையுமே பயன்படுத்தியுள்ளனர்.

1015ஆம் ஆண்டில் சீனாவில் உள்ள சோழத் தூதரகம் சீனர்களுக்கு 21000 அவுன்ஸ் முத்துகளைப் பரிசாக வழங்கியுள்ளது. அப்போதைய தூதர்கள் வணிகர்களாகவே இருந்துள்ளனர். எனவே அவர்கள் தரப்பில் தனியாக 6600 அவுன்ஸ் முத்துகள், மதுபானம் போன்றவற்றைப் பரிசாக அளித்துள்ளனர்.

இதற்கு பதிலாகச் சோழத் தூதர்களுக்குச் சீன அரசுகள் தரப்பில் ராஜ பட்டங்களும், மன்னர்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் பங்கேற்க அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. சீனாவில் தமிழ் வர்த்தகர்கள் இவ்வளவு தூரம் ஊடுருவி ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்ததற்கு என்ன காரணம்?

வணிகப் போட்டியும் சர்வதேச உறவும்

சோழப் பேரரசைச் சேர்ந்த வர்த்தகர்களுக்கும், ஸ்ரீவிஜய அரசைச் சேர்ந்த வர்த்தகர்களுக்கும் இடையேயான தொழில் போட்டிதான் இதற்குக் காரணம். சீனச் சந்தைகளில் சோழ வர்த்தகர்கள் தொழில் செய்ய முயற்சி செய்தபோது ஸ்ரீவிஜய வர்த்தகர்கள் போட்டிக்கு வந்து தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.

எனவே, ஸ்ரீவிஜய வர்த்தகர்களின் ஆட்டத்தை அடக்க வேண்டும் என்பதற்காகத் தமிழ் வர்த்தக அமைப்புகள் இணைந்து குலோத்துங்கன் மூலம் உத்திகளை வகுத்துத் தென்கிழக்கு ஆசியா முழுவதும் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.

இதன் பின்னர் தமிழ் வர்த்தகர்கள் சீனாவிலும், தென்கிழக்கு ஆசியாவிலும் செட்டிலாகிவிட்டனர். அவர்களின் வாரிசுகளும் செல்வாக்கு மிக்கவர்களாகவும், தொழிலில் ஆதிக்கம் செலுத்துவோராகவும் வளர்ந்துள்ளனர். இதன்படி,14ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சீனாவில் உள்ள குவான்ஷோவில் தமிழ் வர்த்தகர்கள் சார்பில் சிவன் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயில் பிற்காலத்தில் இனவாதப் போராட்டக் குழுக்களால் இடிக்கப்பட்டுவிட்டது.

இந்தியப் பெருங்கடலின் வரலாறு நம்மை வியக்கவைக்கும் கதைகளால் நிரம்பியுள்ளது. வன்முறை, கலாச்சாரம், தொழில் போட்டி, பொறாமை, இழப்பு என இந்தியப் பெருங்கடல் சொல்லும் கதைகள் ஏராளம். எனினும், வேறு நாடுகளைச் சேர்ந்தவராக இருந்தாலும் மக்கள் மற்றவர்களின் கலாச்சாரம், மத உணர்வுகளுக்கு மதிப்பளித்துள்ளது தெளிவாகிறது.

அக்காலத்திலேயே பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் சோழ வர்த்தகர்கள் வர்த்தக உறவுகளை ஏற்படுத்தியுள்ளது உள்ளபடியே பிரமிக்க வைக்கிறது. இந்த வர்த்தக உறவுகள் பெரும்பாலும் அரசு உறவுகள், பரிசுப் பொருட்கள் மூலம் சாத்தியமாகியிருக்கின்றன.

21ஆம் நூற்றாண்டிலும் கண்ணியமான வர்த்தக உறவுகளை ஏற்படுத்துவது, வணிக, ராணுவ, அரசியல் உறவுகளுடன் சேர்ந்து வரும் ஆபத்துகள் பற்றியும் சோழர் காலத்து மக்கள் நமக்கு நிறைய பாடங்களை விட்டுச் சென்றுள்ளனர்.

அனிருத் கனிசெட்டி ஆராய்ச்சியாளர், எழுத்தாளர் மற்றும் எக்கோஸ் ஆஃப் இந்தியா: எ ஹிஸ்டரி பாட்காஸ்ட் மற்றும் யுதா: தி இந்தியன் மிலிட்டரி ஹிஸ்டரி பாட்காஸ்ட் ஆகியவற்றின் தொகுப்பாளர். பெங்களூரில் உள்ள புகைப்படக் கலை அருங்காட்சியகத்தின் ஆசிரியர்.

*

நன்றி: தி பிரின்ட்

தமிழில்: புலிகேசி

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

வியாழன் 17 மா 2022