ஆளுநர் சொன்னது என்ன?: முதல்வர் விளக்கம்!

தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று மார்ச் 15 ஆம் தேதி, ஆளுநர் ரவியை சந்தித்துப் பேசினார்.
தமிழக சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட நீட் எதிர்ப்பு தீர்மானம் ஆளுநரிடம் இருக்கும் நிலையில் இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் பெற்றது.
நேற்று இதுகுறித்து தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்ட நிலையில்... இன்று (மார்ச் 16) அமைச்சர் நேரு இல்லத் திருமணத்தில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் தன்னிடம் என்ன சொன்னார் என்பதை விளக்கினார்.
“ ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களின் மருத்துவ கல்வி கனவைச் சிதைக்கும் நீட் தேர்வுக்கு விலக்கு பெற வேண்டும் என சட்டமன்றத்தில் ஒரு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். பல மாதங்களாக அந்த மசோதாவைக் கிடப்பில் போட்டு அதனை ஒருநாள் திருப்பி அனுப்பி வைத்துவிட்டார்கள்.
இதையடுத்து உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்டி மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். அந்த மசோதா எந்த நிலையில் உள்ளது என்று எங்களுக்கு நேற்றுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்பதால் நேற்றைய தினம் ஆளுநரைச் சந்தித்து நீட் மசோதா கோப்பு குறித்து விசாரித்தோம்.
அப்போது, ஆளுநர் எனக்கும் சட்டம் தெரியும், இரண்டாவது முறையாக நான் நீட் மசோதாவைத் திருப்பி அனுப்ப முடியாது. அதனால், ஜனாதிபதிக்குத் தான் அனுப்பி வைக்க வேண்டும். வேறு வழி கிடையாது. அவருக்கு அனுப்பி வைக்கிறேன் என்று கூறினார். ஆகவே முதல் படியில் வெற்றி பெற்றிருக்கிறோம். விரைவில் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவோம் என்று நம்பிக்கை எனக்கு உள்ளது. நேற்று நாடாளுமன்றத்தில் இதுபற்றி டி.ஆர்.பாலு எம்.பியும் பேசி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்” என்றார் முதல்வர் ஸ்டாலின்.
-பிரியா