மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 16 மா 2022

டிஜிட்டல் திண்ணை: அதிமுகவில் ஜெயக்குமாருக்கு புதுப் பதவி!

டிஜிட்டல் திண்ணை: அதிமுகவில் ஜெயக்குமாருக்கு புதுப் பதவி!

வைஃபை ஆன் செய்ததும் இன்ஸ்டாகிராம் சில புகைப்படங்களை அனுப்பியது.

அண்மையில் மூன்று வழக்குகளில் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தற்போது நீதிமன்ற நிபந்தனைப் படி திருச்சியில் தங்கி பிணையில் இருக்கிறார். அப்போது அவரை சந்திக்கும் அதிமுகவினரின் படங்களைதான் இன்ஸ்டாகிராம் அனுப்பியிருந்தது.

அவற்றைப் பார்த்து விட்டு ஃபேஸ்புக் மெசஞ்சர் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

"திருச்சியில் இரண்டு வாரங்களுக்கு தங்கி கன்டோன்ட் மென்ட் காவல் நிலையத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் மூன்றாவது மாடியில் தங்கி உள்ளார் ஜெயக்குமார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்சி வந்தார் ஜெயக்குமார். வந்தது முதல் இப்போது வரை அதிமுகவினரின் முற்றுகையில் திணறி வருகிறார்.

கடந்த இரண்டு நாட்களில் தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் எல்லாம் அதிமுக பிரமுகர்களுடன் தான் பொழுதை செலவிட்டு வருகிறார் ஜெயக்குமார்.

திருச்சி மற்றும் அருகாமை மாவட்ட அதிமுக பிரமுகர்கள் மட்டும் இல்லாமல், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இருந்தும், வட மாவட்டங்களில் இருந்தும் கட்சி நிர்வாகிகள் அவரைப் பார்க்க படையெடுத்து வருகிறார்கள்.

சிலரை 10 நிமிடம் 20 நிமிடங்களில் அனுப்பிவிடும் ஜெயக்குமார் சில பிரமுகர்களோடு மணிக்கணக்கில் பேச நேரிடுகிறது. அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கம் நேற்று முன்தினம் ஜெயக்குமாரை சந்தித்தார். சிறை அனுபவம், கட்சி நிலவரம், சசிகலா விவகாரம் என இருவரும் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் பேசிக்கொண்டிருந்தார்கள்.

நேற்று மார்ச் 15ஆம் தேதி முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், மாதவரம் மூர்த்தி உள்ளிட்ட சென்னை அதிமுக பிரமுகர்கள் ஜெயக்குமாரை சந்தித்தனர். அப்போது மாதவரம் மூர்த்தி, 'அண்ணே... உங்களுக்கு ஜாமீன் கிடைத்த வெள்ளிக்கிழமை சாயந்திரம் புழல் ஜெயில் வாசலில் உங்களை வரவேற்கக் கூடினோம். வெடி எல்லாம் வெடிச்சோம். உங்களுக்கு உள்ளே வெடிச் சத்தம் கேட்டுச்சா?' என்று குழந்தை போல கேட்க.... 'ஏம்ப்பா... புழல் ஜெயில் அம்மா காலத்துல கட்டினதுப்பா. அவ்வளவு ஸ்ட்ராங்கான சுவரைத் தாண்டி எனக்கு எப்படி சத்தம் கேட்கும்?' என்று பதில் கேள்வி கேட்டார்.

தன்னை சந்திக்க வரும் தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை அனைவரிடமும் கட்சி பற்றியும் எம்ஜிஆர், ஜெயலலிதா, ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரது பணிகள் பற்றியே பேசி வருகிறார் ஜெயக்குமார்.

திருச்சி மாவட்ட நிர்வாகிகள் பலர் காலை, மாலை, இரவு என வாழை இலையோடும் வீட்டில் சமைத்த உணவுகளோடும் ஜெயக்குமாரின் அறையை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். என் மேல் இவ்வளவு அக்கறை வைத்திருக்கிறீர்களா என்று நெகிழ்ந்து போகும் ஜெயக்குமாரின் அறையில் சால்வைகளைப் போல வாழை இலைகளும் குவிந்து கிடக்கிறது.

தான் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு மற்றவற்றை தன்னை பார்க்க வரும் தொண்டர்களிடம் கொடுத்து வருகிறார் ஜெயக்குமார். இவ்வளவு பேர் தனக்கு வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்து வருவதை கண்டு திகைத்துப்போன ஜெயக்குமார், திருச்சியில் தங்கி இருக்கிற நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிர்வாகி வீட்டுக்குச் சென்று சாப்பிட்டால் என்ன என்று யோசித்து அதையும் இன்று மார்ச் 16 முதல் செயல்படுத்த தொடங்கிவிட்டார். முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான பரஞ்சோதி அழைப்பின் பேரில் மதிய உணவு உண்பதற்கு மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு செல்கிறார் ஜெயக்குமார்.

இதற்கிடையே ஜெயக்குமாரை யார் யார் சந்திக்க வருகிறார்கள் என்பது பற்றியெல்லாம் ஹோட்டலில் முகாமிட்டிருக்கும் உளவுத் துறையினரும் ஒவ்வொரு நாளும் மேலிடத்திற்கு ரிப்போர்ட் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஜெயக்குமாரை சந்தித்து வரும் அதிமுகவின் மேல் மட்ட நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, 'உள்ளாட்சி தேர்தல் தோல்வியால் சற்று சுணக்கமாக இருந்த அதிமுக தொண்டர்கள் ஜெயக்குமார் கைது காரணமாக இப்போது தெம்பாகியிருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்து இந்த ஒன்பது மாதங்களில் கட்சிக்காக சிறைக்கு சென்ற தலைவராக அதிமுகவில் ஜெயக்குமாரைதான் தொண்டர்கள் பார்க்கிறார்கள். சிறையை விட்டு வெளியே வந்ததும் சுணங்கி விடுவார் என திமுக எதிர்பார்க்க சிறை வாசலில் இருந்தே தனது அரசியலை முன்பை விட வேகமாக தொடங்கிவிட்டார் ஜெயக்குமார். இந்த நிலையில்தான் தற்போது அமைப்புச் செயலாளர்களில் ஒருவராக இருக்கும் ஜெயக்குமாரை தலைமைக் கழக நிர்வாகியாக உயர்த்த எடப்பாடி வட்டாரத்தில் ஒரு ஆலோசனை நடக்கிறது.

சசிகலா விவகாரம் பற்றி அப்போது அதிமுகவில் யாரும் பேசத் துணியாத நிலையில், ஜெயக்குமார் தான் தொடர்ந்து பேசி அதிமுகவில் ஒரு கருத்துருவாக்கத்தை வலுப் பெறச் செய்தார்.

இப்போது திருச்சியில் அதிமுக தொண்டர்களையும் நிர்வாகிகளையும் உற்சாகப் படுத்துவது போலவே தமிழகத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளையும் தொண்டர்களையும் உற்சாகப்படுத்தும் வாய்ப்பை ஜெயக்குமாருக்கு அளித்தால் என்ன என்று ஆலோசித்து வருகிறார் எடப்பாடி. மேலும் தனக்கு தலைநகர் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் நம்பிக்கையான ஒருவர் வேண்டும் என்ற அடிப்படையில் ஜெயக்குமாரை துணை ஒருங்கிணைப்பாளர் அல்லது அவைத்தலைவர் பதவிக்கு உயர்த்த முடிவு செய்திருக்கிறார் எடப்பாடி. ஏற்கனவே அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு பதில் ஜெயக்குமாரை அவைத்தலைவர் ஆக்கினால் நாள்தோறும் தலைமை அலுவலகத்திற்கு சென்று கட்சி விவகாரங்கள், தொண்டர்கள் நிர்வாகிகள் சந்திப்பு என ஜெயக்குமார் ஆக்டிவாக இருப்பார் என எடப்பாடி எதிர்பார்க்கிறார். கட்சிக்காக களத்தில் செயல்படுபவர்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கிறார் எடப்பாடி' என்கிறார்கள் அந்த மேல்மட்ட நிர்வாகிகள்.

ஜெயக்குமாருக்கு நெருக்கமானவர்களிடம் இதுபற்றி கேட்டால், 'பட்டினப்பாக்கம் வீட்டில் லுங்கி அணிந்து கொண்டு இரவு டிபன் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஜெயக்குமாரை, திருச்சி மாவட்டத்தில் பல நிர்வாகிகள் சாப்பாடு கொண்டு வந்து கொடுக்கும் அளவுக்கு பரபரப்பாக மாற்றிய ஸ்டாலினுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்' என சிரிக்கிறார்கள்" என்ற மெசேஜு க்கு சென்ட் கொடுத்து சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக் மெசஞ்சர்.

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்! ...

5 நிமிட வாசிப்பு

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்!

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை? அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் ...

11 நிமிட வாசிப்பு

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை?  அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் அதிமுகவாகும் சிவசேனா

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

5 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

புதன் 16 மா 2022