மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 16 மா 2022

எழிலக ரெய்டு: அடுத்த டார்கெட் அமைச்சர் கண்ணப்பன்

எழிலக ரெய்டு: அடுத்த டார்கெட் அமைச்சர் கண்ணப்பன்

தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கண்ணப்பனுக்கு உதவிகரமாக இருந்து வந்த போக்குவரத்துத் துறை துணை ஆணையர் (1) நடராஜன் அலுவலகத்தில் நுழைந்து அதிரடி சோதனை செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார்.

தமிழக அமைச்சரவையில் உள்ள ஐந்து அமைச்சர்கள் மீது முதல்வருக்குத் தொடர்ந்து ரிப்போர்ட் போய்க்கொண்டே இருந்திருக்கிறது, தலைமைச் செயலாளர் மற்றும் உளவுத் துறை மூலமாக. கடந்த வாரத்தில் அவர்களில் மூன்று அமைச்சர்களை அழைத்து கடுமையாகப் பேசி எச்சரித்து அனுப்பியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த எச்சரிக்கையின் வெளிப்பாடுதான், மார்ச் 14ஆம் தேதி சென்னை எழிலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் அதிரடி சோதனை.

"போக்குவரத்துத் துறை ஆணையர் நடராஜன் அலுவலகம் எழிலகத்தில் இரண்டாவது மாடியில் உள்ளது. முதல் மாடியில் துணை ஆணையர்கள் இருக்கிறார்கள். அதில் முக்கியமான பொறுப்புகளை துணை ஆணையர் (1) நடராஜன் பார்த்து வருகிறார். இந்த துணை ஆணையர் நடராஜன் வசூல் ராஜனாக மாறி தனது அலுவலகத்தை கலெக்‌ஷன் மையமாகவே மாற்றிவிட்டார்.

பிரேக் இன்ஸ்பெக்டர் கிரேடு 1, கிரேடு 2, ஆர்டிஓ அலுவலக ஊழியர்களின் இடம் மாறுதல்களுக்கு கடந்த ஆட்சியைவிட தற்போதைய ஆட்சியில் ஐந்து மடங்கு முதல் பத்து மடங்கு வரையில் உயர்த்தி வசூல் செய்து வருகிறார்கள். அலுவலகத்திலேயே பேரம் பேசி வசூல் செய்து அமைச்சர் மகனிடம் ஒப்படைத்து வருகிறார்கள்.

துணை ஆணையர் நடராஜன் பிரிவு மீது புகார் வந்ததால் முக்கிய பொறுப்புகளை வெவ்வேறு துணை ஆணையர்களிடம் பகிர்ந்து உத்தரவு போட்டார் போக்குவரத்து துறை ஆணையர் நடராஜன் (இவர் பெயரும் நடராஜன்தான்). ஆனால், அந்த உத்தரவை அமைச்சர் கண்ணப்பனிடம் சொல்லி உடனடியாக ரத்து செய்துள்ளார் துணை ஆணையர் நடராஜன்.

பிரேக் இன்ஸ்பெக்டர்களிடம் மாறுதல்களுக்கு 20 லட்சம் இருந்ததை 60 லட்சமாகவும், 40 லட்சம் இருந்ததை ஒரு கோடியாகவும், ஆர்டிஓ இட மாறுதல்களுக்கு அதேபோல் பல மடங்கு உயர்த்தி கேட்பதால் பலரும் இடம் மாறுதல் வேண்டாம் என்றும் நீங்கள் போடும் இடத்துக்குச் சென்று பணி செய்கிறோம் என்று ஒதுங்கிப் போகிறார்கள். ஒத்துவராத அதிகாரிகளைக் காத்திருப்பு பட்டியலில் வைத்து விடுகிறார்கள்.

இட மாறுதலுக்கு இப்படி என்றால்... மாதா மாதம் போக்குவரத்துத் துறை அலுவலகங்கள் மூலமாக நடத்தப்படும் வசூலும் எகிறிவிட்டது.

கடந்த அதிமுக மற்றும் முந்தைய திமுக ஆட்சிக் காலங்களில் ஒரு ஆபீஸுக்கு 15,000, 25,000 அதிகபட்சமாக 30,000 என வசூல் செய்த அதிகாரிகள் மேலே மாசம் 40 லட்சம் ரூபாய் கொடுத்து வந்தனர்.

ஆனால் தற்போது நடைபெறும் திமுக ஆட்சியில் அமைச்சர் கண்ணப்பனின் உதவியாளர்கள், குறிப்பாக துணை ஆணையர் நடராஜன் இந்த மாதாந்திர கப்பத் தொகையை கன்னாபின்னாவென ஏற்றிவிட்டார். அதாவது மாதம் 25,000 வசூல் செய்து கொடுக்கும் ஆபீஸ் இனி 2.50 லட்சம் கொடுக்க வேண்டும் என்று டார்கெட் வைத்தார்.

இந்த கணக்குப்படி தமிழக போக்குவரத்துத் துறையில் உள்ள 120 அலுவலகங்களும் ஒவ்வொரு மாதமும் மொத்தமாக 3.30 கோடி கொடுக்க வேண்டும் என்று மாதந்தோறும் கசக்கிப் பிழியப்படுகிறார்கள். தமிழகம் முழுவதும் நடக்கும் இந்த வசூல் மொத்தமாக அமைச்சரின் அண்ணன் பிள்ளை மற்றும் வளர்ப்பு பிள்ளையிடம் பத்திரமாகப் போய் சேர்கிறது.

இந்த சம்பவங்களை புள்ளி விவரங்களுடன் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் முருகன் கடந்த 2021 இறுதியிலேயே முதல்வர், தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு இயக்குநருக்கு புகாராகவே அனுப்பியுள்ளார்.

இந்த வசூல் வேட்டைக்காரர்கள் பற்றிய தகவல்கள் முதல்வருக்குப் போய்விட்டது என்று தெரிந்தும் அமைச்சர் கண்ணப்பன் எந்த சிறு தடுப்பு நடவடிக்கை கூட மேற்கொள்ளவில்லை.

மாறாக பணம் எண்ணும் மெஷின்களை வாங்கி எழிலகத்தில் வைத்திருக்கிறார்கள்.

ஆர்டிஓ ஆபீஸ் மற்றும் பிரேக் இன்ஸ்பெக்டர் யூனிட் ஆபீஸ்களில் கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்கு வழக்கமாக ஒரு லட்சம் அதிகபட்சம் இரண்டு லட்சம் வரையில் வாங்கினார்கள்.

துணை ஆணையர் நடராஜன் 10 +1 லட்சம் என பேரம் பேசி 30 நபர்களிடம் பணம் பெற்றிருக்கிறார். இந்த லஞ்சப் பணத்தை எண்ணுவதற்காகவே துணை ஆணையர் அலுவலகத்தில் பணம் எண்ணும் இரண்டு மெஷின் வாங்கி வைத்து அதைக் கையாள்வதற்கான இரண்டு ஊழியர்களையும் பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்தத் தகவலும் லேட்டஸ்டாக முதல்வருக்கு கொண்டு செல்லப்பட்டது . உடனடியாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு இயக்குநர் மூலம் தலைமைச் செயலாளர் இறையன்புக்கு தெரிவிக்கப்பட்டது. கூடுதலாக உளவுத் துறையும் கொடுத்த ரிப்போர்ட் வைத்து ஏற்கனவே கோபமாக இருந்த முதல்வர் ஸ்டாலின், நடவடிக்கை எடுக்க கிரீன் சிக்னல் கொடுத்தார்.

இதையடுத்து தான் மார்ச் 14ஆம் தேதி மதியம் 3.00 மணியளவில் டிஎஸ்பி தலைமையில் சென்ற விஜிலென்ஸ் போலீஸ் முதல் மாடியில் துணை ஆணையர் (1) அறைக்குள் சென்றதும் கதவு ஜன்னல் அனைத்தையும் மூடி விட்டனர்.

பிறகு சோதனை நடத்தியதில் பணம் என்னும் இரண்டு மிஷன், ரூ.35 லட்சம் ரொக்கம், வரவு செலவு டைரி, குறிப்பு சீட்டுகள், செல்போன் அனைத்தையும் கைப்பற்றி கொண்டு துணை ஆணையர் நடராஜனிடம் விசாரணை நடத்தினார்கள்.

"நான் 1993 பேட்ஜ் கிரேடு 1 பிரேக் இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்து பதவி உயர்வு பெற்று துணை ஆணையராக இருக்கிறேன். அமைச்சருக்கு உதவியாக இருப்பேன். அவர் சில பணிகளை சொன்னால் செய்வேன்" என்று கூறியுள்ளார் நடராஜன்.

'இவ்வளவு பணம் எப்படி வந்தது?' என்று போலீஸார் கேட்க... "கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்கு அவர்களாகவே எடுத்து வந்து கொடுத்துட்டு போகிறார்கள்" என்று கொட்டிவிட்டார் நடராஜன்.

'இந்தப் பணம் யாருக்கு போகிறது?' என்று துருவித் துருவி கேள்விகள் கேட்டு வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர் விஜிலென்ஸ் போலீஸார்.

இந்த ரெய்டு நடந்த அடுத்த நாளான நேற்று மார்ச் 15ஆம் தேதி ஒன்றும் தெரியாதவர்போல் அலுவலகத்துக்கு வந்தார் துணை ஆணையர் நடராஜன்.

தன்னிடம் ரெய்டு குறித்து கேட்டவர்களிடம், "எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. அமைச்சர் பேசிவிட்டார். என் அறையில் விஜிலென்ஸ் ரெய்டு செய்ததற்கு பல ஆர்டிஓ அலுவலகத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டாடி இருக்கிறார்களாம். பலர் பார்ட்டி வைத்திருக்கிறார்களாம். வசூல் செய்யும் பணத்தை என் வீட்டுக்கா எடுத்துப் போகிறேன்? அமைச்சர் சொல்வதை தானே செய்கிறேன்" என்று ஃபீலிங்குடன் பேசியுள்ளார் நடராஜன்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் கண்ணப்பன் மீது ஏற்கனவே பல புகார்கள் முதல்வரிடம் இருக்கும் நிலையில், இந்த வசூல் வேட்டை புகார் பெரிய அளவு முதல்வரை காயப்படுத்தி இருக்கிறது என்கிறார்கள். எனவே இந்த ரெய்டின் அடுத்த கட்ட நடவடிக்கை கண்ணப்பன் மீதான கடும் பாய்ச்சலாக இருக்கும் என்று அதிகாரிகள் வட்டாரத்தில் எதிர்பார்க்கிறார்கள்.

-வணங்காமுடி

ஆளுநராக பன்னீர்: பாஜகவின் புது பஞ்சாயத்து!

6 நிமிட வாசிப்பு

ஆளுநராக பன்னீர்:  பாஜகவின் புது பஞ்சாயத்து!

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

4 நிமிட வாசிப்பு

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

3 நிமிட வாசிப்பு

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

புதன் 16 மா 2022