மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 16 மா 2022

எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு: சிக்கியது என்ன?

எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு: சிக்கியது என்ன?

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குத் தொடர்புடைய இடங்களில் நேற்று இரண்டாவது முறையாக லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடந்தது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் எஸ்.பி.வேலுமணிக்குத் தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்தது. இரண்டாவது முறையாக நேற்று வேலுமணி மட்டுமின்றி அவருடைய சகோதரர் அன்பரசன், அன்பரசன் மனைவி ஹேமலதா உட்பட பத்து பேர் மற்றும் மகா கணபதி ஜுவல்லர்ஸ், கான்ஸ்ட்ரோ மால் குட்ஸ் மற்றும் ஆலம் கோல்ட் அண்ட் டைமண்ட் நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சோதனை நடந்தது.

13 மணி நேரத்துக்கும் மேலாக நடத்தப்பட்ட சோதனை குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில், “எஸ்.பி. வேலுமணி, தமிழக அரசின்‌ உள்ளாட்சி மற்றும்‌ ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த போது 26.04.2016 முதல்‌ 15.03.2021 வரையிலான காலத்தில்‌ 12 நபர்களின்‌ துணையுடன்‌, கூட்டுச் சதி புரிந்து வருமானத்திற்கு அதிகமாக ரூ 58,23,97,052 அளவுக்குச் சொத்து சேர்த்ததாக கிடைத்த நம்பத்தகுந்த தகவலின்‌ அடிப்படையில்‌, கோவை ஊழல்‌ தடுப்பு மற்றும்‌ கண்காணிப்பு பிரிவில் அன்பரசன்‌, ஹேமலதா, சந்திரசேகர்‌, சந்திர பிரகாஷ்‌, கிருஷ்ணவேணி, சுந்தரி, கார்த்திக்‌, விஷ்ணு வரதன்‌, சரவணகுமார்‌, ஸ்ரீ மகா கணபதி ஜீவல்லர்ஸ்‌, கான்ஸ்ட்ராமால்‌ குட்ஸ்‌ பிரைவட்‌ லிமிடெட்‌ மற்றும்‌ ஆலம்‌ கோல்ட் அண்ட் டயமண்ட்ஸ்‌ பிரைவட்‌ லிமிடெட்‌ மீதும்‌ குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இவ்வழக்கு தொடர்பான ஆவணங்கள்‌ இருப்பதாகச் சந்தேகிக்கப்படும்‌ 59 இடங்களில்‌ (கோயம்புத்தூர்‌-42, திருப்பூர்‌ -2, சேலம்‌-4, நாமக்கல்‌ - 1, கிருஷ்ணகிரி -1, திருப்பத்தூர்‌-1, சென்னை - 7 மற்றும்‌ கேரள மாநிலம்‌ ஆனைகட்டி-1) ஊழல்‌ தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினரால்‌ சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேற்படி சோதனையில்‌ தங்க நகைகள்‌ 11.153 கிலோ‌, வெள்ளி சுமார்‌ 118.506 கிலோ‌ மற்றும்‌ ஆவணங்கள்‌ கண்டுபிடிக்கப்பட்டும்‌, கணக்கில்‌ வராத பணம்‌ ரூ.84,00,000/-, சான்று பொருட்களான கைப்பேசிகள்‌, பல வங்கிகளின்‌ பாதுகாப்பு பெட்டக சாவிகள்‌, மடி கணினி, கணினி ஹார்டு டிஸ்க்குகள்‌ மற்றும்‌ வழக்கிற்குத் தொடர்புடைய ஆவணங்கள்‌ ஆகியன கைப்பற்றப்பட்டன.

மேலும்‌ சுமார்‌ ரூ. 34,00,000 அளவுக்கு பலதரப்பட்ட கிரிப்டோ கரன்சிகளில்‌ முதலீடு செய்திருப்பதும்‌ கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கு புலன் விசாரணையிலிருந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே முன்னாள் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி வீட்டில் சோதனை நடத்திய போது, அவரும் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சோதனை குறித்து எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், “ இரண்டாவது முறையாக அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசு சோதனை நடத்தியுள்ளது. கடந்த முறையும் ஒரு ரூபாய் கூட கைப்பற்றவில்லை. இந்த முறையும் எதுவும் கைப்பற்றப்படவில்லை. காவல்துறையினர் திமுகவினருக்கு அடிமையாக இருக்காதீர்கள்.

முதல்வரை யார் அரசியல் ரீதியாக எதிர்க்கிறார்களோ அவர்களுடைய இடங்களில் எல்லாம் சோதனை நடக்கிறது. எனக்குத் தொடர்புடைய இடங்களில் நகை பணம் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியானது இது தவறானது. இந்த சோதனையைச் சட்ட ரீதியாகச் சந்திப்போம்.

முதல்வரைப் பொறுத்தவரை இதுபோன்று ரெய்டு நடத்தி எங்களது வேலைகளை முடக்க வேண்டும் என்று நினைக்கிறார். அது நடக்காது. உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் கடுமையாக வேலை பார்த்தோம். திமுகவுக்குக் கிடைத்த வெற்றி முறைகேடானது. இரட்டை இலைக்குத்தான் மக்கள் ஓட்டு போட்டனர்.

என்ன செய்தாலும் கோவையில் மக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்கிறார்கள் என்ற கோபத்தில் தான் ரெய்டு நடத்துகின்றனர். உடன் வாக்கிங் வருபவர்கள் யார் யார் என கண்காணித்து அவர்களது வீடுகளில் கூட சோதனை நடத்துகின்றனர். இது முழுமையாகப் பழிவாங்கும் நடவடிக்கை” என்று கூறினார்.

முன்னதாக ரெய்டு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி, அன்பழகன், செங்கோட்டையன், கருப்பணன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் வேலுமணி வீட்டுக்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

ஆளுநராக பன்னீர்: பாஜகவின் புது பஞ்சாயத்து!

6 நிமிட வாசிப்பு

ஆளுநராக பன்னீர்:  பாஜகவின் புது பஞ்சாயத்து!

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

4 நிமிட வாசிப்பு

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

3 நிமிட வாசிப்பு

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

புதன் 16 மா 2022