மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 16 மா 2022

சிறப்புக் கட்டுரை: இந்தியாவில் தொடரும் ஊட்டச்சத்துக் குறைபாடும் உணவுப் பாதுகாப்பின்மையும்!

சிறப்புக் கட்டுரை: இந்தியாவில் தொடரும் ஊட்டச்சத்துக் குறைபாடும் உணவுப் பாதுகாப்பின்மையும்!

தீபா சின்ஹா

கோவிட்-19 இரண்டாம் அலை ஓய்ந்து ஒமிக்ரான் பாதிப்பு தொடங்குவதற்கு முன் 2021 பிற்பகுதியில் இன்னல்களும் உணவுப் பாதுகாப்பின்மையும் நிலவியதாக உணவுக்கான உரிமைத் திட்டத்தின் பசி கண்காணிப்பு-II அறிக்கை தெரிவிக்கிறது. 2021 டிசம்பர் முதல் 2022 ஜனவரி வரை நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு அடிப்படையில் இந்த அறிக்கை அமைகிறது.

கோவிட்-19க்குப் பிந்தைய ஊட்டச்சத்து நிலை தொடர்பான முழுமையான தரவுகள் இல்லை என்றாலும், இந்தியாவில் ஏழைகள், விளிம்புநிலை மக்களிடம் பெருந்தொற்று உணவுப் பாதுகாப்பு தொடர்பாக உண்டாக்கிய தாக்கத்துக்குப் பலவித காரணிகள் இருக்கின்றன.

கோவிட்-19 நெருக்கடி உலகம் முழுவதும், ஊட்டச்சத்துக் குறைபாடு பிரச்சினையைத் தீவிரமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 118 குறைந்த, நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் கோவிட்-19 உண்டாக்கிய ஊட்டச்சத்து பாதிப்பு 9.3 மில்லியன் குழந்தைகளில் உயரத்துக்கு நிகரான எடையின்மை ஏற்பட்ட பாதிப்பு, 2.6 மில்லியன் குழந்தைகளில் வயதுக்கு ஏற்ற உயரமின்மை ஆகிய பாதிப்புகளை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை இந்த பாதிப்பு அதிகம் இருக்கும். எனவே, பெருந்தொற்று பாதிப்பு தொடர்பான கணிப்பு நம் குழந்தைகள் மீது தீவிர தாக்கம் செலுத்தும். மேலும், கோவிட்-19 பாதிப்புக்கு முன்னதாகவே இந்தியாவின் ஊட்டச்சத்து நிலை மிக மோசமாக இருந்துள்ளது.

கோவிட்-19 பாதிப்பு, தற்போதைய பொருளாதார நெருக்கடி ஆகியவற்றுடன் இந்தியாவில் ஊட்டச்சத்து தொடர்பான சமகாலப் போக்குகளை அலசி ஆராய வேண்டும். என்ன நடக்கிறது என்பதை அறிவது, ஊட்டச்சத்து தொடர்பான பிரச்சினையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கையை எடுக்க உதவும்.

இந்தியாவில் ஊட்டச்சத்து தொடர்பான அண்மை புள்ளிவிவரம், தேசிய சுகாதார சர்வே 2019-20 அறிக்கையாகும். இதன் முதல்கட்ட ஆய்வு பெருந்தொற்றுக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்டது. இரண்டாம்கட்ட ஆய்வு 2020 பொது முடக்கத்தின்போது மேற்கொள்ளப்பட்டது.

குழந்தைகள் வயதுக்கேற்ற உயரமின்மை பிரச்சினையில் சிறிய முன்னேற்றம் இருப்பதாகவும், அனீமியா, உயரத்துக்கு ஏற்ற எடையின்மை ஆகியவை அதிகரித்திருப்பதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. முதல் கட்டத்தில் பெரும்பாலான மாநிலங்கள் இந்தப் பிரச்சினையில் லேசான முன்னேற்றம் அல்லது தேக்கத்தைக் கொண்டிருந்த நிலையில் இரண்டாம் கட்டத்தில் அனைத்து மாநிலங்களும் முன்னேற்றம் கொண்டுள்ளன. எனினும், தேசியத் தரவுகளின்படி, ஊட்டச்சத்து தொடர்பான பெரும்பாலான காரணிகளில் சொற்ப முன்னேற்றமே காணப்படுகிறது.

ஊட்டச்சத்து போக்குகள் தொடர்பான முழுமையான புரிதலுக்குச் சிக்கலான பல விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். இருப்பினும், உணவு நுகர்வும் அதன் தரமும் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகிறது. ஆனால், இந்தத் தரவுகள் இந்தியாவில் எப்போதுமே போதாமை நிறைந்ததாக அமைகின்றன. இது தொடர்பான தரவுகள் பத்தாண்டுக்கு முந்தையதாக இருக்கின்றன.

இந்தியா பெரும்பாலும் தானியங்கள் சார்ந்த உணவைக் கொண்டுள்ளது. பருப்புகள், காய்கறிகள், முட்டை, பால் போன்ற ஊட்டச்சத்து மிக்க உணவுகள் குறைவாகவே எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

பசிக்கான உலக அட்டவணையில் இந்தியா மோசமான செயல்பாட்டையே கொண்டிருக்கிறது.

2021 உலகப் பசி அட்டவணையில் 116 நாடுகளில் இந்தியா 101ஆவது இடத்தில் உள்ளது. 2000ஆவது ஆண்டு முதல், தெற்காசிய நாடுகளில் ஆப்கானிஸ்தான் தவிர மற்ற நாடுகளைவிட இந்தியா பின்தங்கியுள்ளது. இந்த நாடுகள் மேம்பட்ட செயல்பாட்டைக் கொண்டிருப்பதோடு, கடந்த 20 ஆண்டுகளில் வேகமான மேம்பாட்டையும் கொண்டுள்ளன.

2021ஆம் ஆண்டின் உலகப் பசி அறிக்கை, 2000 முதல் 2021 வரையான காலத்தில் நான்கு வெவ்வேறு ஆண்டுகளுக்கான ஜி.ஹெச்.ஐ. மதிப்பீட்டை அளிக்கிறது. இந்தியாவில் மெதுவான முன்னேற்றமே இருப்பதை உணர முடிகிறது. மோசமான இடத்தில் இருந்த கம்போடியா ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால், இந்தியா மோசமான இடத்திலிருந்து மிக மோசமான இடத்துக்குச் சென்றுள்ளது.

இந்த அறிக்கை சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில், இந்த ஆய்வுக்கான முறை தவறானது, இந்தியாவின் உண்மையான பசி நிலையை உணர்த்துவது அல்ல என இந்தியாவின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆய்வு தொலைபேசி அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகவும், போதிய ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மாதிரிகள் மிகவும் குறைவானவை என்றும் இந்தியாவின் அதிகாரிகள் மட்டத்தில் கூறப்பட்டது. ஆனால், ஆய்வு தொலைபேசி உரையாடல்களை அடிப்படையாகக் கொண்டது அல்லவென்றும், அரசும் ஐநாவும் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையிலேயே இந்த முடிவுகள் வெளியிடப்பட்டிருப்பதாகவும் இந்த அறிக்கையைத் தயாரித்தவர்கள் விளக்கம் அளித்தார்கள்.

பசி குறித்த அறிக்கை உண்மையில் ஊட்டச்சத்துக் குறைப்பாட்டையே குறிப்பிடுகிறது என்றும் இந்திய அதிகாரிகள் கூறினார்கள். பிரச்சினையை கவனிப்பதாகவும், இந்தியா தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. உண்மையில் இது பிரச்சினையை வார்த்தைகளால் திசை திருப்பும் முயற்சியாகும். பசியை அளப்பது உலக அளவிலும், இந்தியாவில் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது என்றாலும், கலோரி அடிப்படையில் உணவு அளவைக் கணக்கிடுவதே பொதுவாக முறையாக இருக்கிறது. 2017- 18 என்எஸ்எஸ் தரவுகளின் ஆய்வின்படி, நுகர்வுக்கான செலவு சராசரியும் உணவுச் செலவு குறைந்திருக்கிறது. தனிநபர் நுகர்வு குறைந்திருப்பது ஏழைகள் மத்தியில் பசி அதிகரித்திருப்பதை உணர்த்துகிறது.

இது தொடர்பாக அடுத்த கட்டத் தகவல்களுக்குக் காத்திருக்கும் நிலையில், மற்ற காரணிகளையும் கவனிக்க வேண்டும். இவை, நாட்டில் 2015க்குப் பிறகு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு குறைந்திருப்பதை உணர்த்துகிறது.

2020 பொது முடக்கத்துக்குப் பிறகு, ஏழைகளின் வருமானம் குறைந்ததோடு, பொருளாதார பாதிப்பும் நிலவுவதாகப் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெருந்தொற்று காரணமாக, 230 மில்லியன் பேருக்கு மேல் வறுமைக் கோட்டுக்குக் கீழ் சென்றுள்ளனர். பொது முடக்கத்துக்குப் பிறகு உணவுப் பாதுகாப்பின்மை அளவு அதிகரித்துள்ளதாகக் கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆய்வுகள் அளிக்கும் தகவல்கள் ஒருபக்கம் இருக்க, இரண்டாம் அலை பாதிப்பு மிக மோசமாக இருந்துள்ளது. பொது முடக்கம் இல்லை என்றாலும், உள்ளூர் அளவில் பொருளாதாரச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. கிராமப்புறங்களில் பாதிப்பு இன்னும் தீவிரமாக இருந்தது.

நாட்டில் ஊட்டச்சத்து, உணவுப் பாதுகாப்பின்மை ஆகியவை தொடர்பான தற்போதைய நிலை, ஒட்டுமொத்த பொருளாதார இன்னல்களுடன் தொடர்பு கொண்டுள்ளது. இந்த பாதிப்பு பெருந்தொற்றுக்கு முன்பே இருக்கிறது. 2019இல் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 4 சதவிகிதமாக இருந்துள்ளது. 2016இல் இது 8 சதவிகிதமாக இருந்தது. 2015 முதல் கிராமப்புறக் கூலி தேக்கம் அடைந்து, வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. பொருளாதாரத் தேக்கநிலை, மக்கள் நலத் திட்டங்கள் பலவீனமானது, ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவை இடையிலான தொடர்பைப் புரிந்துகொள்ள மேலும் தரவுகள் தேவை. இந்தத் தரவுகளை ஆய்வு செய்ய அவகாசம் தேவை,. ஆனால் அதற்கிடையே இன்னொரு தலைமுறை குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாமல் அவதிப்படுவார்கள்.

*

தீபா சின்ஹா ​​- டெல்லி, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் கற்பிக்கிறார். உணவு உரிமை பிரச்சாரத்துடன் தொடர்புடையவர்.

நன்றி: தி இந்தியாஃபோரம்.இன்

தமிழில்: சைபர் சிம்மன்

.

மோடி வருகை: கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக நிபந்தனை!

4 நிமிட வாசிப்பு

மோடி வருகை: கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக நிபந்தனை!

ஓபிஎஸ் பேசினாரா?: சசிகலா பதில்!

6 நிமிட வாசிப்பு

ஓபிஎஸ் பேசினாரா?: சசிகலா பதில்!

டி.ராஜேந்தருக்கு வெளிநாட்டில் சிகிச்சை: ஏன்?

3 நிமிட வாசிப்பு

டி.ராஜேந்தருக்கு வெளிநாட்டில் சிகிச்சை: ஏன்?

புதன் 16 மா 2022