மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 15 மா 2022

ஹிஜாப் தடை செல்லும்: கர்நாடக உயர் நீதிமன்றம்!

ஹிஜாப் தடை செல்லும்: கர்நாடக உயர் நீதிமன்றம்!

ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் தேதி கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் பியூ கல்லூரி மாணவர்கள் எனப்படும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவிகள் எட்டு பேர் ஹிஜாப் அணிந்து வகுப்பிற்கு வந்தனர். இவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்க ஆசிரியர்கள் மறுப்பு தெரிவித்தனர். மேலும் வருகைப்பதிவிலும் ஆப்சென்ட் போட்டனர். இதை எதிர்த்து வகுப்பறைக்கு வெளியே மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த பிரச்சனையைத் தொடர்ந்து கர்நாடக அரசு பள்ளிகளில் ஒரே சீருடை திட்டத்தை கடைபிடிக்க வேண்டும் என்று அரசாணை பிறப்பித்தது. அதில், ஹிஜாப் அணிந்து வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, பியூ கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. உடுப்பியில் ஆரம்பித்த பிரச்சினை கொஞ்சம் கொஞ்சமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது.

ஹிஜாப் அணிந்துவர அனுமதி வழங்கக் கோரி மாணவிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், அவர்களுக்கு எதிராக காவி சால்வை அணிந்து வர அனுமதி அளிக்கக் கோரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹிஜாப்-காவி சால்வை போராட்டம் நாளடைவில் வன்முறையாக மாறியது. மேலும் வன்முறை தொடராமல் இருக்க, பள்ளி, கல்லூரிகளுக்கு ஒருவாரம் விடுமுறை அளிக்கப்பட்டது. ஹிஜாப் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு உள்பட பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இந்த பிரச்சனை தேச அளவில் எதிரொலித்தது.

இதற்கிடையில், கர்நாடக அரசின் ஒரே சீருடை சட்டத்தை எதிர்த்தும், ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதி வழங்கக் கோரியும் ஐந்து முஸ்லிம் மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை தனி நீதிபதி கிருஷ்ணா தீட்சித் விசாரித்து வந்தார். பின்பு இந்த வழக்கு தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ணா தீட்சித், காஸி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை மாணவர்கள் எந்தவொரு மதம் சார்ந்த ஆடைகளை பள்ளிக்கு அணிந்து செல்லக் கூடாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, ஹிஜாப் அணிந்து பள்ளிகளுக்கு வந்த மாணவிகள் வாசலிலேயே நிறுத்தப்பட்டு, ஹிஜாப்பை அகற்றிவிட்டு உள்ளே வருமாறு ஆசிரியர்கள் கூறினர். இதை ஏற்க மறுத்த மாணவிகள், வகுப்பையும், தேர்வுகளையும் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் தீர்ப்பு வந்த பின்னர் எங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்புகிறோம். எங்களுக்கு கல்வி போன்று ஹிஜாப்பும் முக்கியம். இது எங்கள் மத சுதந்திரம். அதை விட்டுக் கொடுக்க முடியாது என பெற்றோர்களே தங்கள் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

இதுகுறித்தான வழக்கில் சீருடை கலரிலேயே மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அனுமதி அளிக்க வேண்டும். ஹிஜாப் அணிவது மத நம்பிக்கையின் ஒரு பகுதி என்பதால் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 19(10)(ஏ)ன்படி ஹிஜாப் அணிவது தனிப்பட்ட உரிமை. அதனால் ஹிஜாப் அணிவதற்கு சீருடை சட்டம் தடையாக இருக்க முடியாது என்று மாணவிகள் தரப்பில் வாதிடப்பட்டது.

சீருடை தொடர்பாக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஹிஜாப் அணிவது கட்டாய மத வழக்கம் கிடையாது என்று அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் பிரபுலிங் நவதகி வாதாடினார்.

பதினொரு நாள் நடைபெற்ற விசாரணையில், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த 25ஆம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தது.

இந்த நிலையில் இன்று(மார்ச் 15) ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உடுப்பி, கலபுர்கி, ஷிமொகா உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

அனைவரும் தீர்ப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த வேளையில் இன்று காலை 10.30 மணியளவில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கூடியது. அப்போது தீர்ப்பு நகலில் அனைத்து நீதிபதிகளும் கையெழுத்திட்டனர்.

தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி ஹிஜாப் வழக்கின் தீர்ப்பை வாசித்தார். அந்த தீர்ப்பில், “ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மதத்தின் அத்தியாவசியமான நடைமுறை அல்ல. ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை நியாயமான கட்டுப்பாடுதான். அரசின் கல்வி நிறுவன சீருடை சட்டத்திற்கு அனைவரும் உட்பட்டவர்களே. பள்ளிகளில் மதத்தை அடையாளப்படுத்தும் ஆடைகள் அணிவதை அனுமதிக்க முடியாது. ஹிஜாப் தடைக்கு எதிராக சரியான முகாந்திரங்கள் எதுவும் வைக்கப்படவில்லை. அதனால், ஹிஜாப் மீதான தடை தொடரும்...இதற்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

செவ்வாய் 15 மா 2022