மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 15 மா 2022

ஹிஜாப் வழக்கில் இன்று தீர்ப்பு!

ஹிஜாப் வழக்கில் இன்று தீர்ப்பு!

கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பள்ளி மாணவிகள் சீருடை அணிந்துதான் பள்ளிக்கு வர வேண்டும். ஹிஜாப் அணிந்துவர அனுமதியில்லை என்று கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது ஹிஜாப் - காவி சால்வை போராட்டமாக மாறி, வன்முறை வெடித்தது. இதனால் மாநிலத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது.

இந்த நிலையில் கர்நாடக அரசின் உத்தரவை எதிர்த்து ஐந்து முஸ்லிம் மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை முதலில் தனி நீதிபதியும், அடுத்து தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ணா எஸ்.தீட்சித், காஜி ஆகியோர் அடங்கிய அமர்வும் விசாரித்தது.

இந்த வழக்கில் மாணவிகள் சார்பில் வழக்கறிஞர்கள் தேவதத் காமத், சஞ்சய் ஹெக்டே, ரவி வர்மகுமார், யூசுப் முச்சலா ஆகியோர் வாதிட்டனர். அரசுசார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் பிரபுலிங் கே.நவதகி வாதிட்டார்.

இறுதி தீர்ப்பு வரும்வரை, மாணவர்கள் எந்தவித மதம் சார்ந்த ஆடைகளை பள்ளிக்கு அணிந்துவரக் கூடாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவைச் சுட்டிக்காட்டி பள்ளிகளில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதன் காரணமாக மாணவிகள் வகுப்பையும், தேர்வுகளையும் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இந்த பிரச்சினை தொடர்ந்து நீடித்து வந்தது.

இந்த வழக்கு விசாரணை கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி முதல் 25ஆம் தேதிவரை 11 நாட்களாக நடைபெற்று வந்தது. கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இறுதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை இன்று காலை 10.30 மணிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கவிருக்கிறது.

இந்த வழக்கின் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக தட்சிண கன்னடா மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதுபோன்று, உடுப்பி, ஷிவமொகா, கலபுர்கியில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் பொது இடங்களில் அனைத்து வகையான போராட்டம் நடத்தவும், கொண்டாட்டத்தில் ஈடுபடவும், கூட்டம் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

மோடி வருகை: கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக நிபந்தனை!

4 நிமிட வாசிப்பு

மோடி வருகை: கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக நிபந்தனை!

ஓபிஎஸ் பேசினாரா?: சசிகலா பதில்!

6 நிமிட வாசிப்பு

ஓபிஎஸ் பேசினாரா?: சசிகலா பதில்!

டி.ராஜேந்தருக்கு வெளிநாட்டில் சிகிச்சை: ஏன்?

3 நிமிட வாசிப்பு

டி.ராஜேந்தருக்கு வெளிநாட்டில் சிகிச்சை: ஏன்?

செவ்வாய் 15 மா 2022