மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 15 மா 2022

கே.என்.நேருவுக்கு அண்ணாமலை ஆதரவு!

கே.என்.நேருவுக்கு அண்ணாமலை ஆதரவு!

கே.என்.நேரு, பங்காரு அடிகளாரை சந்தித்துவிட்டு அவருடன் தரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதில் எந்தவிதமான தவறும் கிடையாது. நானாக இருந்தாலும்கூட அதைத்தான் செய்வேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார்.

நேற்று (மார்ச் 14) சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணத்தில் பாஜக கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு இரட்டை வேடம் போடவில்லை. தமிழக காங்கிரஸ் கள்ள தொடர்பு வைத்துள்ளது. கர்நாடகா மேகதாது அணைக்காக, கர்நாடகா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிவக்குமார், சித்தராமையா பாதை யாத்திரை நடத்துகின்றனர். இதற்கு தமிழக காங்கிரஸ் சார்பில் கண்டன குரல் எழுப்பவில்லை. இதைத்தாண்டி, மாநிலத்தின் உரிமைகளை விட்டுக் கொடுப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் தயாராகிவிட்டார். கூட்டணியில் இருக்கும் முதல்வர் ஸ்டாலினும் ஒரு கருத்தோ, கண்டனமோ தெரிவிக்கவில்லை.

கர்நாடகாவில் ஹேமாவதி கபினி அணையை முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில்தான் உரிமையை விட்டுக்கொடுத்து, அணை கட்டப்பட்டது. தற்போது அவரது மகன் ஸ்டாலின் முதல்வராக இருக்கும்போது, மேகதாது அணையை விட்டுக் கொடுக்கிறார்.

இதுமட்டுமின்றி, கேரளாவில் முல்லைப் பெரியாறு உரிமையும் விட்டுக் கொடுத்துள்ளனர். அதற்காக, பாஜக சார்பில் தேனி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் செய்தோம்.

இந்த ஆட்சிக்கு விடியல் அரசு, விடியா அரசு என்று பெயர் இருந்த நிலையில், அதற்கு அறிவிப்பு அரசு என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தையும், தாங்கள் கொண்டுவந்ததுபோல் ஸ்டிக்கர் ஓட்டி அறிவிப்பு அரசாகச் செயல்பட்டு வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டமான அம்மா உணவகத்தைத் தொடர்ந்து நடத்துவேன் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறுவதும், மறைந்த முதல்வர் கருணாநிதி பெயரில் உணவகம் நடத்தப்படும் என அமைச்சர்கள் தெரிவிப்பதும் கபட நாடகம். அம்மா உணவகத்தில் இருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா படத்தை எடுத்துவிட்டு, இவர்கள் நடத்துவதுபோன்று வேறு படத்தை வைக்கின்றனர். இது வாடிக்கையாக இருந்து வருகிறது. இன்னும் எத்தனை காலத்துக்கு ஏமாற்றுவார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. அந்தந்த மாவட்டங்களில் உள்ள திமுக மாவட்டச் செயலாளர்கள் அரசை வழிநடத்தி வருவதால் இதுபோன்ற குற்றங்கள் பெருகியுள்ளன. திமுகவினர் தவறு செய்தால் நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். ஆனால் செயலில் ஒன்றும் இல்லை. திமுக மற்றும் முதல்வர் குறித்து தவறாக சமூக வலைதளத்தில் பதிவிடுபவர்களை கைது செய்ய சொல்லும் முதல்வர், பெண்களை துன்புறுத்த கூடிய கொடியவர்களை ஏன் கைது செய்ய சொல்லவில்லை” என்று கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் கே.என்.நேரு, பங்காரு அடிகளார் காலுக்கு கீழே அமர்ந்து பேசுவது போன்று வெளியான புகைப்படம் குறித்து பேசிய அவர், “திமுகவிடம் ஒரு மோசமான புரிதல் உள்ளது. மத குருமார்கள், பெரியவர்கள் என எந்த மதத்தினுடைய தலைவர்களாக இருந்தாலும் சரி... அவர்களிடம் எப்படி ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்று இவர்கள் பாடமெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், எனக்கு அதில் எந்த ஒரு தவறும் தெரியவில்லை. அண்ணன் கே.என்.நேரு, பங்காரு அடிகளாரை சந்தித்துவிட்டு அவருடன் தரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதில் எந்தவிதமான தவறும் கிடையாது. நானாக இருந்தாலும் கூட அதைத்தான் செய்வேன்.

நீங்கள் என்னோட பல புகைப்படங்களை பார்த்திருப்பீர்கள். மதகுருமார்கள் சேர் போட்டு அருகில் அமர சொன்னால்கூட நான் உட்கார மாட்டேன். தரையில் அமர்ந்துதான் பேசுவேன். ஏனென்றால் இந்த மண்ணின் அற்புதமான மனிதர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை அது. எப்படி தந்தை, தாயின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவோமோ... அதேபோல் மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வகையில் குருமார்களை பார்க்கும்பொழுது அவர்களுக்கு சமமாக நாங்கள் இல்லை; எங்களை வழிநடத்தும் குருமார்களின் கால்களுக்கு கீழ் நாங்கள் இருக்கிறோம் என்பதை உணர்ந்து செயல்படுகிறோம். ஆனால் இதை நான் பல இடங்களில் செய்யும்போது திமுகக்காரர்கள் தேவையில்லாமல் போதனை செய்வார்கள். திமுகக்காரர்கள் சொல்வதை அவர்களின் வீட்டில் உள்ள மனைவிகளே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று கூறினார்.

-வினிதா

ராகுலையும் கட்டிப்பிடித்து பேரறிவாளனையும் கட்டிப்பிடிப்பதா? ...

4 நிமிட வாசிப்பு

ராகுலையும் கட்டிப்பிடித்து பேரறிவாளனையும் கட்டிப்பிடிப்பதா?  ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கேள்வி

பேரறிவாளன் விடுதலை: மோடிக்கு காங்கிரஸ் கேள்வி!

4 நிமிட வாசிப்பு

பேரறிவாளன் விடுதலை: மோடிக்கு காங்கிரஸ் கேள்வி!

வைகோ இல்லை என்றால் சாத்தியமே இல்லை: பேரறிவாளன்

4 நிமிட வாசிப்பு

வைகோ இல்லை என்றால் சாத்தியமே இல்லை: பேரறிவாளன்

செவ்வாய் 15 மா 2022