மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 மா 2022

பிரச்சாரத்துக்கு அழைத்தும் யாரும் வரவில்லை: பிரியங்கா ஆவேசம்!

பிரச்சாரத்துக்கு அழைத்தும் யாரும் வரவில்லை: பிரியங்கா ஆவேசம்!

உத்திரப்பிரதேசம் உட்பட 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் படுதோல்வி அடைந்ததை ஒட்டி, காங்கிரஸ் கட்சியின் உயரிய அமைப்பான காங்கிரஸ் காரிய கமிட்டி எனப்படும் செயற்குழு கூட்டம் நேற்று மார்ச் 13ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது.

சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்தும், கட்சி அமைப்பில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும் தீவிரமாக விவாதிக்கப்பட்டன. ஆனால், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி தொடர்வார் என்றும், இன்று தொடங்க இருக்கிற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பிறகு கட்சியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்படும் என்றும் காங்கிரஸ் காரியக் கமிட்டியில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தை தொடங்கி வைத்து தலைவர் சோனியா காந்தி பேசும்போது, "நடந்து முடிந்த தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று நானும் பிரியங்காவும் ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறோம். காங்கிரஸ் கட்சிக்காக எந்தத் தியாகத்தையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று கூற காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்கள் பலர், "இல்லை இப்போதுதான் நீங்கள் தேவை. கட்சியின் அமைப்பு பலவீனத்தையும் அதை சரி செய்வதற்கான மாற்றங்களையும் நீங்கள் முன்னெடுக்க வேண்டும். நம் முன் உள்ள எதிர்கால அரசியல் சவால்களை வென்றெடுக்க நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தனர்.

இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது, "பாரதிய ஜனதா கட்சி தேர்தலை எதிர்கொள்வதற்கான நவீன உத்திகளை பின்பற்றுகிறது.நமது கட்சியும் தனது தேர்தல் உத்திகளை மாற்றிக் கொள்ள வேண்டும். தேர்தலை எதிர்கொள்ளும் நடைமுறைகளையும் நாம் மாற்றியாக வேண்டும்"என்று குறிப்பிட்டார்.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் வேண்டும் என கோரிக்கை வைத்த இருபத்தி மூன்று அதிருப்தி தலைவர்களின் பிரதிநிதியான குலாம்நபி ஆசாத் நேற்று காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் மனம் திறந்து பேசினார்.

"கடந்தகால காரியக் கமிட்டி கூட்டங்கள் சூடான விவாதங்களையும் ஏன் வெளி நடப்புகளையும் கூட பார்த்திருக்கிறது. ஆனால் இப்போதைய நிலவரத்தில் பாஜகவை எதிர்கொண்டு நாம் வளர்வதற்கான ஆக்கபூர்வமான ஆலோசனைகள் தான் தேவைப்படுகின்றன.

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் முதல்வராக இருந்த அமரிந்தர் சிங்கை மாற்றிய காலகட்டம் என்பது மிக தாமதமானது. அதை ஒரு வருடம் முன்பே செய்திருக்க வேண்டும்" என்று குலாம் நபி ஆசாத் கூறியபோது, "அதை பஞ்சாப் காங்கிரஸ் நிர்வாகிகள் தான் விரும்பினார்கள்" என ராகுல் பதிலளித்தார்.

அப்போது சோனியா காந்தி குறிப்பிட்டு, "ஆமாம். குலாம் ஜி சொல்வது போல அந்த முடிவு தாமதம் ஆனது தான். இந்த தவறை நான் ஒப்புக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

குலாம் நபி ஆசாத் மேலும் பேசும்போது, "உத்தரகாண்ட் மாநில தேர்தலில் கவனம் செலுத்தும் வகையில் ஹரிஷ் ராவத் உடைய கட்சிப் பொறுப்புகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டு இருக்க வேண்டும்" என்றும் வலியுறுத்தினார்.

திக்விஜய் சிங், முனியப்பா, முகுல் வாஸ்னிக் ஆகியோர் பேசும்போது ராகுல் காந்தியை தொடர்பு கொள்ளவே முடிவதில்லை என்று குறை கூறினார்கள்.

"ராகுல் காந்தி கட்சி நிர்வாகிகளுடன் இன்னும் நெருக்கமாக இருக்க வேண்டும். பல முக்கிய சந்தர்ப்பங்களில் நாங்கள் தலைமை நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவே முடிவதில்லை" என்று குறிப்பிட்டார்கள்.

23 தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா பேசும் போது, "மாநில காங்கிரஸ் தலைவர்களை நியமித்து விட்டு கூடவே செயல் தலைவர் என்ற பதவியையும் உருவாக்கும்போது

பிரச்சனைகள் தான் உருவாகின்றன. அப்படி என்றால் மாநில காங்கிரஸ் தலைவர் செயல்படாத தலைவரா என்ற கேள்வி எழுகிறது. வெளியே இருந்து கட்சிக்கு வருபவர்களுக்கு மாநிலத் தலைவர் பதவி கொடுக்கப்பட கூடாது. சித்தாந்த ரீதியாக காங்கிரஸோடு நீண்டகால உறவில் இருக்கும் விசுவாசிகளுக்கு தான் மாநில தலைவர் பதவி கொடுக்கப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டார். பஞ்சாப் காங்கிரஸ் கட்சித் தலைவராக சித்து நியமிக்கப்பட்டது பற்றிதான் அவர் விமர்சித்தார். மேலும் ஆனந்த் சர்மா பேசும்போது, "பாஜக அதன் சித்தாந்தத்தில் செயல்படும்போது காங்கிரஸ் அதன் சித்தாந்தத்தில் செயல்பட வேண்டும். பாஜகவுக்காகவே நாம் செயல்பட முடியாது. ஆகையால் மென்மையான இந்துத்வா போக்கை காங்கிரஸ் கைவிட வேண்டும்"என வலியுறுத்தினார்.

காங்கிரஸின் எதிர்க்கட்சி அந்தஸ்தை ஆம்ஆத்மி கடுமையாக பாதிப்பதாகவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

உத்திரப்பிரதேச மாநில பொறுப்பாளர் என்ற வகையிலும் பொதுச் செயலாளர் என்ற வகையிலும் பிரியங்கா காந்தி இந்த கூட்டத்தில் பேசினார்.

"என் முன்னே இரண்டு வாய்ப்புகள் தான் இருந்தன. ஒன்று சும்மா உட்கார்ந்திருப்பது. இன்னொன்று கடுமையாகப் போராடுவது. நான் என் இரண்டாவது வாய்ப்பை தேர்ந்தெடுத்தேன். ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டுமானால் பல காங்கிரஸ் தலைவர்கள் இந்தத் தேர்தலில் குறிப்பாக உத்திரப் பிரதேச தேர்தலில் முதல் வாய்ப்பைத்தான் தேர்ந்தெடுத்தார்கள். அதாவது சும்மா உட்காந்து இருந்தார்கள். உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு நான் பொறுப்பேற்று இருந்த நிலையில் பல தலைவர்களை பிரச்சாரத்துக்கு அழைத்தும் அவர்கள் உத்திரப்பிரதேச மாநிலத்தை எட்டிப்பார்க்கவில்லை. சச்சின் பைலட் போன்ற ஒரு சிலரே தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்வந்தார்கள். மத்தியிலும் மாநிலத்திலும் ஆளுங்கட்சியாக இருக்கும் பாஜகவின் சார்பில் எவ்வளவு பேர் பிரச்சாரத்திற்கு வந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எதிர்க்கட்சியாக இருக்கும் நமது தலைவர்கள் எவ்வளவு தூரம் உத்திரப்பிரதேச தேர்தலுக்கு பங்காற்றினார்கள் என்று அவரவர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்" என்று கடுமையாகவே பேசியிருக்கிறார்.

ராகுல் காந்தி கூட உத்திரப்பிரதேசத்தில் பெரிதாக பிரச்சாரம் செய்யவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

வேந்தன்

வேல்முருகனுக்கு வீசிய வலை: பாஜகவில் இணைந்த முன்னாள் மனைவி!

4 நிமிட வாசிப்பு

வேல்முருகனுக்கு வீசிய வலை: பாஜகவில் இணைந்த முன்னாள் மனைவி!

ரெய்டு நடக்கும் நேரம்: சுட்டிக்காட்டும் ப.சிதம்பரம்

4 நிமிட வாசிப்பு

ரெய்டு நடக்கும் நேரம்: சுட்டிக்காட்டும் ப.சிதம்பரம்

ஹிஜாப்பை கழற்றச் சொன்ன தேர்வு அதிகாரி: நடந்தது என்ன?

5 நிமிட வாசிப்பு

ஹிஜாப்பை கழற்றச் சொன்ன தேர்வு அதிகாரி: நடந்தது என்ன?

திங்கள் 14 மா 2022