மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 13 மா 2022

ஜெயக்குமார் வீட்டில் ஓபிஎஸ், இபிஎஸ்: நடந்தது என்ன?

ஜெயக்குமார் வீட்டில் ஓபிஎஸ், இபிஎஸ்: நடந்தது என்ன?

சிறையிலிருந்து விடுதலையான அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று (மார்ச் 12) காலை 6.45 மணிக்கு விடுதலை செய்யப்பட்ட நிலையில் புழல் மத்திய சிறை வாசலிலேயே செய்தியாளர்களைச் சந்தித்து ஸ்டாலின் அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் ஜெயக்குமார்.

அதன்பிறகு அவர் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார். வீட்டு வாசலில் அவரது மனைவி ஆரத்தி எடுத்து அவரை உள்ளே அழைத்துச் சென்றார். சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு 10.15 மணி அளவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஜெயக்குமாரை சந்திக்க வீட்டுக்கு வருவதாக அவருக்குத் தகவல் அனுப்பப்பட்டது.

சிறையில் இருந்தபோது ஜெயக்குமாரை பன்னீர்செல்வமும் எடப்பாடியும் ஒன்றாகச் சென்று சந்திக்கவில்லை என்ற சலசலப்பு எழுந்த நிலையில் நேற்று காலை ஜெயக்குமாரின் வீட்டுக்கு இருவரும் ஒன்றாகவே வந்தனர்.

இருவரும் ஜெயக்குமாரைச் சந்தித்தபோது கூடவே அவரது வழக்கறிஞர் இன்பதுரை, தமிழக அரசின் முன்னாள் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், முன்னாள் அமைச்சர்கள் புதுக்கோட்டை விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் உள்ளிட்ட பலரும் இருந்தார்கள்.

இணை ஒருங்கிணைப்பாளரும் ஒருங்கிணைப்பாளரும் தன் வீடு தேடி வந்ததை மிக உருக்கமாக கருதிய ஜெயக்குமார் அவர்களை வரவேற்று உபசரித்தார்.

'என்னண்ணே எப்படி இருக்கீங்க' என இருவரும் ஜெயக்குமாரைப் பார்த்து கேட்க, தனது வழக்கமான புன்சிரிப்போடு அவர்களை வரவேற்று அமர வைத்தார் ஜெயக்குமார்.

எல்லோருக்கும் டீ எடுத்துக்கொண்டு வந்தபோது, எடப்பாடியைப் பார்த்து சர்க்கரை கம்மியாக என்று சொல்லி டீ வைத்தனர் ஜெயக்குமார் குடும்பத்தினர். அப்போது எடப்பாடி, 'இன்னிக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அதனால நிறைய சர்க்கரை போடுங்க' என்று சிரித்தபடியே இன்னும் கொஞ்சம் சர்க்கரை அதிகமாக கேட்டு வாங்கி வாயில் போட்டுக் கொண்டார்.

தேநீர் அருந்திய படியே இருவரும் ஜெயக்குமாரிடம் அளவளாவினார். தனது கைகளை அவர்களிடம் காட்டிய ஜெயக்குமார், 'சிறையில இருக்க வேண்டிய சாதாரண வசதி கூட இல்லண்ணே. என்ன கஷ்டப்படுத்துணும்னே பிளான் பண்ணி தான் இதெல்லாம் பண்ணியிருக்காங்க. குடிக்க தண்ணீர் கூட சரியா இல்ல' என்று ஆரம்பித்து தனது சிறை நாட்களை விவரிக்க ஆரம்பித்தார்.

பன்னீர் செல்வமும் எடப்பாடியும் அவற்றைக் கேட்டு ஜெயக்குமாரை தட்டிக் கொடுத்து, 'கட்சி உங்களோட என்னிக்கும் நிக்கும். கவலைப்படாதீங்க' என்றனர்.

கொசுக்கடியால் கையில் ஏற்பட்ட கொப்புளங்களையும் வடுக்களையும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் காட்டிய ஜெயகுமார், 'இங்க பாருங்க விஜயபாஸ்கர். கொசுக்கடி எப்படி இருக்குன்னு பாருங்க' என்று சிரித்துக்கொண்டே கூற அந்த இடமே சற்று கலகலப்பானது.

நீதிமன்றம் பெயில் கொடுத்தும் வெள்ளிக்கிழமை இரவு தன்னை வீணாக சிறைக்குள்ளேயே இருக்கும்படி செய்து விட்ட சிறை அதிகாரிகளைப் பற்றி கொஞ்சம் கோபமாகவே பேசிக்கொண்டிருந்தார் ஜெயக்குமார்.

அப்போது முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், 'அண்ணே... கோர்ட்ல நாம பெயில் வாங்கும்போதே பெயில் ஆர்டரை இ-மெயில் மூலமா சம்பந்தப்பட்ட சிறை நிர்வாகத்துக்கு

உடனே அனுப்பச் சொல்லி கேட்டு இருக்கணும். அங்கேயே அதுக்காக வாதாடி ஜெயில் நிர்வாகத்துக்கு மெயில் அனுப்பியிருந்தா அவங்களால லேட் பண்ண முடியாது. நம்ம ராஜேந்திர பாலாஜிக்கு இப்படித்தான் பண்ணினோம்" என்று விளக்கினார்.

கொஞ்ச நேரம் சிறை, அரசியல் எனப் பேசி விட்டு குடும்ப உறுப்பினர்களை இருவருக்கும் அறிமுகப்படுத்தினார் ஜெயக்குமார். அப்போது தனது பெரிய மருமகளை எடப்பாடியிடம் அறிமுகப்படுத்திய ஜெயக்குமார், 'எங்க வீட்டிலேயே எடப்பாடி இருக்குண்ணே... இவங்க சொந்த ஊர் எடப்பாடி தான்' என்று சொல்ல எடப்பாடி ஆச்சரியப்பட்டார்.

தம்பதி சமேதராக எடப்பாடி பழனிசாமியின் கால்களில் விழுந்து ஜெயக்குமாரின் வாரிசுகள் வணங்கினார்கள். அவரும் ஆசீர்வதித்தார்.

'டெய்லி நைட் தம்பி ஜெயவர்தனோட பேசாம நான் தூங்கறதே இல்லை. கோர்ட்டில் என்ன ஆச்சு, நீங்க எப்படி இருக்கீங்க, வக்கீல்கள் என்ன சொல்றாங்க... எல்லாத்தையும் ஒவ்வொரு நாளும் ராத்திரி நான் அவர்கிட்ட கேட்டு தெரிஞ்சுப்பேன். நீங்க கைது செய்யப்பட்டதை தைரியமா ஃபேஸ் பண்ணி ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டியதை செஞ்சி மீடியாக்களுக்கு சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லி ரொம்ப ஆக்டிவா இருக்காரு ஜெயவர்தன்' என்று எடப்பாடி பழனிசாமி ரொம்பவே சீரியஸாக ஜெயவர்தன் பற்றி ஜெயக்குமாரிடம் பாராட்டினார். அப்போது எடப்பாடியை பார்த்து கை கூப்பினார் ஜெயவர்தன்.

இப்படியே சுமார் முக்கால் மணி நேரம் ஜெயக்குமாரின் வீட்டில் பன்னீர்செல்வமும் எடப்பாடியும் பேசிக் கொண்டிருந்தனர்.

"உடம்ப பாத்துக்கங்க. நல்லா சாப்பிடுங்க" என்று பன்னீர்செல்வம் அறிவுரைக்கு தலையசைத்தார் ஜெயக்குமார்.

இருவரையும் வாசல் வரை சென்று வழியனுப்பி வைத்தார். அதன் பிறகும் பல அதிமுக புள்ளிகள் ஜெயக்குமாரின் வீடு தேடி வந்து தங்களது ஆதரவைத் தெரிவித்துச் சென்றனர்.

கட்சி, நிர்வாகி என்பதை எல்லாம் தாண்டி ஒரு குடும்ப சந்திப்பு போலவே ஜெயக்குமார் இல்லத்தில் நேற்று நடந்த சந்திப்புகள் இருந்தன.

ஆரா

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்! ...

5 நிமிட வாசிப்பு

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்!

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை? அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் ...

11 நிமிட வாசிப்பு

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை?  அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் அதிமுகவாகும் சிவசேனா

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

5 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

ஞாயிறு 13 மா 2022