மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 12 மா 2022

குற்றங்களே நடக்காத சூழ்நிலை உருவாக வேண்டும்: முதல்வர்!

குற்றங்களே நடக்காத சூழ்நிலை உருவாக வேண்டும்: முதல்வர்!

குற்றங்களின் விழுக்காட்டைக் குறைப்பது அல்ல, குற்றங்களே நடக்காத சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர்கள்,காவல் துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாட்டின் இறுதி நாளான இன்று முதல்வர் பேசுகையில், ”கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறைக் கண்காணிப்பாளர்கள், வனத்துறை அதிகாரிகள் மாநாடு மிகுந்த மனநிறைவை அளிப்பதாக அமைந்திருக்கிறது. எல்லோரும் மனம் திறந்து பல்வேறு கருத்துகளைச் சொல்லி இருக்கிறீர்கள். அரசுக்குப் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியிருக்கிறீர்கள்.

முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருப்பதால் - எல்லாம் என்னால்தான் அப்படி என்று நினைக்கின்ற அளவிற்கு நான் நிச்சயமாக இருக்க மாட்டேன், இருக்கவும் இல்லை.

என்னைத் தொடர்ந்து அமைச்சர்கள் இருக்கிறார்கள், துறைகளின் செயலாளர்கள் இருக்கிறார்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறைக் கண்காணிப்பாளர்கள், ஆகிய நீங்களும் இருக்கிறீர்கள், நாம் அனைவரும் சேர்ந்ததுதான் இந்த அரசு” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை கட்டுப்படுத்துவது பாராட்டுக்குரியதுதான். ஆனால் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

குற்றங்களின் விழுக்காட்டைக் குறைப்பது அல்ல, குற்றங்களே நடக்காத சூழ்நிலையை உருவாக்க வேண்டும். சாதி மோதல்களை சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மட்டும் பார்க்காதீர்கள். ஏனென்றால் அது சமூக ஒழுங்குப் பிரச்சினை. படிக்காத இளைஞர்களால் மட்டுமல்ல படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் ஊரில் இருக்கிற ஒரு சிலராலும் இதுபோன்ற மோதல்கள் உருவாகக் கூடிய சூழ்நிலை உருவாகிறது.

இதுபோன்ற இளைஞர்களைக் கண்டறிந்து மனமாற்றம் செய்யணும். அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரணும். ஆக்கபூர்வமான வழிகளில், விளையாட்டுப் போட்டிகளில், ஊர்க்காவல் படைகளில் என அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.

ஒரு காலத்தில் மதம் என்பது, மதம் சம்பந்தப்பட்டதாக மட்டுமே இருந்தது. இப்போது அது அரசியல் நோக்கமுள்ளதாக சிலரால் மாற்றப்பட்டு விட்டது. எனவே அரசியல் உள்நோக்கத்தோடு மத மோதல்களை திட்டமிட்டு உருவாக்குகிறார்கள், இதை தடுத்தாக வேண்டும். சாதி மோதல்களுக்கும் மதப் பிரச்னைகளுக்கும் சமூக வலைத்தளங்கள் முக்கியமான காரணமாக இருக்கிறதாக எல்லோரும் சொன்னீர்கள். அது உள்ளபடியே முழுமையான உண்மை தான்.

சாதி மத வக்ரம் பிடிச்சவங்க சமூக வலைதளங்களை அழிவுக்குப் பயன்படுத்தி சமூகத்தில் குழப்பம் ஏற்படுத்தப் பாக்குகிறார்கள் இவங்கள முளையிலேயே நாம் களையெடுக்க வேண்டும். இப்படிப்பட்ட பதிவுகளை போடுகிறவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தாக வேண்டும். சோஷியல் மீடியா மூலமாக நடக்கிற இந்த வன்மங்களுக்கு எல்லா வகையிலும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

போக்சோ வழக்குகள் இப்போதுதான் அதிகம் நடக்கிறது என நினைக்க வேண்டாம், இப்போது தான் துணிச்சலாக வந்து புகார்களைத் தருகிறார்கள். இதற்கு உரிய நீதி கிடைக்கச் செய்வது உங்கள் தலையாய கடமையாகும். குறிப்பாக, இத்தகைய வழக்குகளில் தாமதங்கள் இருக்கக் கூடாது.

தொழில் நிறுவனங்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் ரவுடியிசம் அதிகம் இருக்கிறது என்று சொன்னார்கள். அத்தகைய இடங்களில் சட்டம் ஒழுங்கை காக்க வேண்டியது மிகமிக முக்கியம். அதேபோல் தொழிற்சாலைகளில் பணிபுரியும் உள்ளூர் மற்றும் வெளி மாநிலத் தொழிலாளர்களின் விவரங்களை வருவாய்த் துறை, காவல் துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை இணைந்து டாக்குமென்ட் செய்ய வேண்டும்.

அமைதியான மாவட்டங்களில்தான் அதிகமான நிறுவனங்கள், தொழில்கள் தொடங்க முன்வருவார்கள். ரவுடிகளை இடம், சாதி, மதம் என்று அடையாளப்படுத்தக் கூடாது.

சாலை விபத்துக்கள் குறைக்கப்பட வேண்டும். உயிரிழப்புகள் தவிர்க்கப்பட வேண்டும். இதற்கு மாவட்ட ஆட்சியர்களும், காவல் கண்காணிப்பாளர்களும் முன்னுரிமை அளிக்க வேண்டும். அதேபோல், பட்டாசு மற்றும் தீ விபத்துக்களை தடுப்பதிலும், அதனுடைய பாதிப்புகளைக் குறைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே போதைப் பொருள்கள் விற்பனை நடைபெறுகிறதா என்பதை தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

என்.எஸ்.எஸ்.மற்றும் என்.சி.சி மாணவர்களுடன் இணைந்து, போதைப் பொருளுக்கு எதிரான செயல்பாடுகளைக் காவல் துறை மேற்கொள்ளலாம்.

கடலோர மாவட்டங்களைக் கண்காணிப்பதும், தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் நம் மாநிலத்துக்குள் ஊடுருவி விடாமல் தடுப்பதும் மிகமிக முக்கியமானதாகும்.

குற்றவாளிகளுக்கு தண்டனை மட்டும் பெற்றுத் தரும் துறையாக இல்லாமல், குற்றவாளிகள் உருவாகாமல் தடுக்கின்ற துறையாக காவல்துறை மாற வேண்டும்” என்று பேசினார்.

-வினிதா

ஆளுநராக பன்னீர்: பாஜகவின் புது பஞ்சாயத்து!

6 நிமிட வாசிப்பு

ஆளுநராக பன்னீர்:  பாஜகவின் புது பஞ்சாயத்து!

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

4 நிமிட வாசிப்பு

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

3 நிமிட வாசிப்பு

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

சனி 12 மா 2022