பகத்சிங் கிராமத்தில் பதவி ஏற்பு: அசத்தும் ஆம் ஆத்மி

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி முதன்முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கிறது. மொத்தமுள்ள 117 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி மட்டுமே 92 இடங்களில் வென்றுள்ளது. தற்போதைய ஆளும் கட்சியான காங்கிரஸ் 18 இடங்களை மட்டுமே பெற்று தோல்வியை தழுவியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த மான் பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கிறார். இவர் தூரி தொகுதியில் 58 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
பஞ்சாப் மக்கள் அற்புதத்தை நிகழ்த்தி இருப்பதாகவும் புரட்சியை நடத்திக் காட்டி இருப்பதாகவும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ள நிலையில் புதிய முதல்வராக பதவி ஏற்க இருக்கும் பகவந்த் மான் இதுவரை பின்பற்றி வந்த மரபுகளை உடைக்க போவதாக அறிவித்துள்ளார்.
இதுவரை முதல்வர்கள் மாநில தலைநகரத்திலுள்ள பெரிய மண்டபங்களிலும் அல்லது ஆளுநர் மாளிகைகளில் தான் பதவி ஏற்றுக் கொள்வார்கள்.
ஆனால் பஞ்சாப் புதிய முதல்வராக பதவி ஏற்க இருக்கும் ஆம் ஆத்மியின் பகவந்த் மான், பஞ்சாபிலிருந்து சுதந்திர போராட்டத்திற்கு பாடுபட்ட மாவீரன் பகத்சிங்கின் சொந்த கிராமமான கட்கர் கலன் கிராமத்தில் பதவி ஏற்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது,
"நான் பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்கப் போவதில்லை. பகத்சிங்கின் கிராமமான கட்கர் கலன் கிராமத்தில்தான் பதவி ஏற்கப் போகிறேன்.
மேலும் இனி பஞ்சாபில் எந்த அரசு அலுவலகத்திலும் முதல்வரின் புகைப்படம் வைக்கப்பட மாட்டாது. அதற்கு பதிலாக மாவீரன் பகத்சிங், பாபாசாஹேப் அம்பேத்கர் ஆகியோரின் படங்கள் மட்டுமே அரசு அலுவலகங்களில் வைக்கப்படும்" என்று பஞ்சாபின் புதிய முதல்வர் பகவந்த் மான் இன்று மார்ச் 10ஆம் தேதி அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
வேந்தன்