மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 9 மா 2022

பார்களை மூடும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு: கட்சிகள் கண்டனம்!

பார்களை மூடும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு: கட்சிகள் கண்டனம்!

தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை ஆறு மாதத்தில் மூட வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்வது கண்டனத்துக்குரியது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும், டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகளின் அருகில் உள்ள பார்களில் தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலி பாட்டில்களை சேகரிப்பதற்கு புது டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டது.

கொரோனா ஊரடங்கால் பார்கள் மூடப்பட்டுள்ளதால், புதிய டெண்டருக்கு பதிலாக பழைய டெண்டரை நீட்டிக்க வேண்டும், நில உரிமையாளர்களின் தடையில்லா சான்றைக் கட்டாயப்படுத்தக் கூடாது போன்ற கோரிக்கைகளுடன் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி சி.சரவணன் அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், தமிழ்நாடு மதுவிலக்கு சட்டப்படி பார் நடத்த டாஸ்மாக்குக்கு அதிகாரம் இல்லாததால், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள பார்களை ஆறு மாதங்களுக்குள் மூட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அதில், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி டாஸ்மாக் கடைகளின் அருகில் பார்களுக்கு உரிமம் வழங்க டாஸ்மாக் நிறுவனத்துக்கு அதிகாரம் உள்ளது. பார்கள் நடத்த டாஸ்மாக் நிறுவனத்துக்கு அதிகாரமில்லை என தனி நீதிபதி மேற்கோள்காட்டிய மதுவிலக்கு சட்டப்பிரிவு பார் உரிமம் வழங்கும் விஷயத்துக்குப் பொருந்தாது.

டாஸ்மாக் பார் டெண்டரை எதிர்த்துதான் வழக்கு தொடரப்பட்டதே தவிர, டாஸ்மாக் கடைகள் அருகில் பார் அமைக்கக் கூடாது என்று எந்த வாதங்களும் முன் வைக்கப்படவில்லை. அதனால், பார்களை மூட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்தச் செயலுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “டாஸ்மாக் பார்களை 6 மாதத்தில் மூட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்வது கண்டனத்திற்குரியது. 2016 தேர்தலின்போது அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடுவோம் என்ற திமுக, இன்று அரசமைத்தபின் பார்களை கூட மூடத் தயங்குவது ஏன்? சொல்வது ஒன்று செய்வது ஒன்று. அதுதான் திமுக”என்று விமர்சித்துள்ளது.

முன்னதாக பாமக நிறுவனர் ராமதாஸ், "ஒருபுறம் ரூ.4,500 கோடிக்கு மது விலைகள் உயர்வு, மறுபுறம் புதிய மதுக்கடைகள் திறப்பு, இன்னொருபுறம் குடிப்பகங்களை மூடுவதற்கு எதிரான மேல்முறையீடு போன்ற அரசின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது மது வணிகத்தை நம்பித்தான் இந்த அரசு செயல் படுகிறதோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. இது நல்லதல்ல.

மது பார்களை மூடும் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். வருவாய்க்கான மாற்றுத் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்த வேண்டும். மதுக்கடைகளைப் படிப்படியாக மூடி தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

-வினிதா

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்! ...

5 நிமிட வாசிப்பு

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்!

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை? அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் ...

11 நிமிட வாசிப்பு

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை?  அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் அதிமுகவாகும் சிவசேனா

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

5 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

புதன் 9 மா 2022