மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 9 மா 2022

பாமக எதிர்ப்பு - சிறுத்தைகள் ஆதரவு: சூர்யா படம் கல்லா கட்டுமா?

பாமக எதிர்ப்பு - சிறுத்தைகள் ஆதரவு: சூர்யா படம் கல்லா கட்டுமா?

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள, 'எதற்கும் துணிந்தவன்' படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிடுகிறது.

இந்தப் படத்தில் சத்யராஜ், பிரியங்கா மோகனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், பாமக மாணவர் அணியின் மாநிலச் செயலாளர் விஜயவர்மன் கடலூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்துக்கு நேற்று கடிதம் ஒன்று எழுதியிருந்தார்.

அந்தக் கடிதத்தில், ‘திரைப்பட நடிகர் சூர்யா நடித்து கடந்த 2021 நவம்பர் 2ஆம் தேதி வெளியானது ஜெய் பீம் திரைப்படம். த.செ.ஞானவேல் இயக்கிய திரைப்படத்தை 2டி நிறுவனம் மூலம் தயாரித்து நடித்திருந்தார். இருளர் சமுதாய மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டுள்ள உண்மைச் சம்பவ அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம். அதில் வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரம் அதே பெயரில் இடம்பெற்றது. மற்ற கதாபாத்திரத்தில் வந்த அனைவரும் அதே பெயரில் நடித்தனர்.

ஆனால், காவல் உதவி ஆய்வாளராக நடித்தவர் ஒரு ஜாதி வெறியர் போல சித்திரித்து வன்னியர்களின் அடையாளமான அக்கினி கலசத்தை அவர் வீட்டில் காட்சிப்படுத்தி காவல் உதவி ஆய்வாளரை வன்னியர் சமுதாயத்தைச் சார்ந்தவர் என்றும் ஒட்டுமொத்த வன்னிய சமுதாய மக்கள், ஜாதி வெறி வன்மம் உள்ளவர்கள் போலவும் காட்டியுள்ளனர்.

சகோதரத்துவமாக உள்ள இருளர், வன்னியர் சமுதாயத்தில் ஜாதி வன்மத்தைத் தூண்டும் விதமாக இத்திரைப்படம் எடுத்திருப்பது வன்னியர்களைக் கொச்சைப்படுத்தும் விதமாகவும், வன்முறையாளர்களாகவும் தொடர்ந்து சித்திரித்துவரும் சூர்யாவின் திரைப்படத்தை, அவர் வன்னிய மக்களிடம் பொது மன்னிப்பு கேட்காதவரை கடலூர் மாவட்டத்தில் ஒளிபரப்ப அனுமதிக்கக் கூடாது என பாட்டாளி மக்கள் சார்பாகவும், வன்னியர் சங்கம் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்ற கடிதங்களை, வன்னியர்கள் அதிகமாக இருக்கும் 13 மாவட்டங்களின் பாமக நிர்வாகிகள் அடுத்தடுத்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவருக்கு அனுப்ப இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், விஜயவர்மன் கடிதம் கிடைத்தவுடன் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் ரோகிணி பன்னீர்செல்வம், 'எதற்கும் துணிந்தவன்' படம் திரையிடுவதற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு உள்துறை செயலாளருக்குக் கடிதம் எழுதியிருப்பதாக திரையரங்க உரிமையாளர்கள் வட்டாரம் கூறுகிறது.

எதற்கும் துணிந்தவன் படத்தைத் திரையிடுவது சம்பந்தமாக உள்ளூர் சூழலுக்கு ஏற்ப திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு எடுத்துக்கொள்ளுமாறு சங்கத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 550 திரையரங்குகளில் எதற்கும் துணிந்தவன் படத்தைத் திரையிட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. வடமாவட்டங்களில் கணிசமான திரையரங்குகளின் உரிமையாளர்களாக வன்னியர்கள் உள்ளனர். வியாபார ரீதியாகப் படத்தை திரையிட ஆர்வமாக இருந்தாலும் சொந்த சமூகத்தைப் பகைத்துக்கொள்ள வேண்டுமா என்கிற தயக்கம் அவர்களிடம் நிலவுகிறது.

இதற்கிடையில் வன்னிய சமூகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் வாழப்பாடி இராம சுகந்தன், “பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும் மீண்டும் வன்னிய இளைஞர்களைச் சரியான முறையில் வழிநடத்தாமல் சமூக விரோதிகளாக மற்ற சமூகத்தினர் இடையே சித்திரிப்பது சமுதாயத்திற்கு நல்லதல்ல, ராமதாஸ் மற்றும் அன்புமணி இந்த சமுதாயத்தின் கேடுகள்" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாமக சார்பில் சூர்யாவுக்குக் கொடுக்கப்படும் அரசியல் நெருக்கடியை கவன ஈர்ப்பு அரசியலாகவே பார்க்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “பாமகவின் கவன ஈர்ப்பு அரசியல் காரணமாக முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சி வருத்தத்துக்குரியது” எனத் தெரிவித்தார்.

மேலும், “பாமகவின் இச்செயல் கவன ஈர்ப்புக்காகச் செய்யப்படுகிற ஓர் அரசியலாகத் தான் தெரிகிறது. நடிகர் சூர்யாவைப் பொறுத்தவரையில் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் படிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வோடு பல பத்தாண்டுகளாக ஏராளமான அருட்கொடைகளை ஆற்றி வரக்கூடியவர். சாதி மதம் மொழி என்ற வரம்புகளைக் கடந்த நிலையில், அனைத்து தரப்பு மக்களின் நன்மதிப்பைப் பெற்று வளர்ந்து வருகிற, வளர்ந்திருக்கிற ஒரு திரைக்கலைஞன். அவருக்கு இத்தகைய அரசியல் நெருக்கடி கொடுப்பது ஏன் என்று விளங்கவில்லை. தொடர்ந்து இதுபோன்ற கவன ஈர்ப்பு அரசியலைச் செய்வது பாமகவின் வாடிக்கையாக இருக்கிறது. இது வருந்தத்தக்க ஒரு நிலைப்பாடாக இருக்கிறது. உள்ளபடியே நான் அதற்காக வருத்தப்படுகிறேன்” எனக் கூறினார்.

இது தொலைக்காட்சிகளில் செய்தியாக வெளியான பின்பு எதற்கும் துணிந்தவன் படத்திற்கு எதிரான மனோநிலையை பாமகவினரிடம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

"பாமக எதிர்பார்த்ததை திருமாவளவன் செய்து கொடுத்துவிட்டார். இந்தப் படம் பற்றிய சிந்தனையே இல்லாமல் இருந்த பாமக மற்றும் வன்னிய சமுதாய மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக எதற்கும் துணிந்தவன் படத்தைத் திரையிடவிடக் கூடாது என்கிற எதிர்ப்பு மனநிலை அதிகரித்து வருகிறது" என்கின்றனர் பாமக வலிமையாக இருக்கும் மாவட்டங்களில் உள்ள திரையரங்க உரிமையாளர்கள்.

விஜயவர்மன் கடிதம் சம்பந்தமாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், கதாநாயகன் சூர்யா, இயக்குநர் பாண்டிராஜ் ஆகியோர் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

படத்தில் பங்கேற்றுள்ள இதர கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களும் தனிப்பட்ட முறையில் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிடவோ, ஊடகங்களுக்குப் பேட்டி தரவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

படத்தை தமிழ்நாடு முழுவதும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் நேரடியாக வெளியிடுவதால் உரிய பாதுகாப்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கை திரையரங்குகளுக்குக் கொடுக்கப்பட்டாலும் சிறு அசம்பாவிதம் நடந்தாலும் இழப்பு லட்சங்களில் இருக்கும். அதை யாரிடம் கேட்பது என்கிற தயக்கம் திரையரங்கு உரிமையாளர்களிடம் உள்ளது.

'எதற்கும் துணிந்தவன்' படத்தைத் திரையிட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள தியேட்டர்களில் பெரும்பான்மையானவை நவீனப்படுத்தப்பட்ட, விலையுயர்ந்த இருக்கை வசதி கொண்டவையாகும். ஒருபக்கம் பயம், மற்றொருபுறம் சூர்யா படத்தைத் திரையிட்டால் கல்லா கட்டலாம் என்கிற ஆசை இரண்டுக்கும் மத்தியில் திரையரங்கு உரிமையாளர்கள் தடுமாற்றத்துடன் உள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வட்டாரத்தில் விசாரித்தபோது, "பாமக, வன்னிய சமூகத்தினரின் எதிர்ப்பு, கண்டனம் இவற்றால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. கொரோனா பொது முடக்கத்துக்குப் பின் சினிமா தன் இயல்புநிலைக்குத் திரும்பி வருகிறது. சினிமாவை ஒரு தொழிலாகப் பார்க்க வேண்டும். அரசியலாக்கக் கூடாது. அதையும் கடந்து எதிர்ப்புகள் வரும் நிலையில் அதை எதிர்கொள்ள தயாராகவே உள்ளோம்” என்கின்றனர்.

படத்தின் பெயர்தான் எதற்கும் துணிந்தவன். ஆனால், படத்தை நடைமுறை ரீதியாகத் திரையிட்டு லாபம் பார்க்க வேண்டிய திரையரங்கு உரிமையாளர்கள் கொஞ்சம் பயமும் பதற்றத்தோடும்தான் இருக்கிறார்கள்.

சூர்யா படத்துக்கு பாமகவினர் திரையரங்க உரிமையாளர்களைக் கடிதம் மூலம் மிரட்டி வருவதற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

அச்சங்கம் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்க முயற்சி செய்யும் இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து கருத்து சுதந்திரத்துக்கு இவர்களால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைக் களைவதற்கும், மிரட்டலுக்குப் பணியாமல் படத்தை வெளியிடுவதற்கு உகந்தச் சூழலை உருவாக்குவதற்கும் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் பெயரால் விடுக்கப்பட்டுள்ள இம்மிரட்டலுக்கு எதிராக குரலெழுப்புமாறு கருத்துரிமையில் நம்பிக்கையுள்ள யாவரையும் தமுஎகச கேட்டுக்கொள்கிறது” என அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம் மற்றும் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

-இராமானுஜம்

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

புதன் 9 மா 2022