மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 9 மா 2022

அதிமுக நம்மைத் தேடிவரும்: தினகரன்

அதிமுக நம்மைத் தேடிவரும்:  தினகரன்

சமீப காலமாக சற்று நிதானமாகச் செயல்பட்டு வந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தற்போது அரசியலில் வேகம் எடுத்துள்ளார்.

தினகரன், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அமமுகவை வலுப்படுத்த முழுமையாக களத்தில் இறங்கியுள்ளார். கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற அமமுக பிரதிநிதிகளைச் சந்திக்கும் வகையிலும் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒரு கூட்டத்தை நடத்தினார் தினகரன்.

அதில் அவர் பேசும்போது, "தினகரன் பதுங்கி விட்டார் எனப் பலர் விமர்சித்தார்கள். ஆனால் பதுங்க வேண்டிய நேரத்தில் பதுங்கி பாய வேண்டிய நேரத்தில் நான் பாய்வேன். இனி நாம் அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு தயார் ஆக வேண்டும். திமுக அரசை எதிர்த்து பல போராட்டங்களை நடத்துவோம்" என்றெல்லாம் கூறி தொண்டர்களை உற்சாகப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில் மார்ச் 7ஆம் தேதி 12 பேர் அடங்கிய மண்டலச் செயலாளர்கள் கூட்டத்தை அமமுக அலுவலகத்தில் ஒன்றரை மணி நேரம் நடத்தினார் டிடிவி தினகரன்.

கூட்டத்தில் பேசிய தினகரன், "வரக்கூடிய எம்.பி தேர்தலைச் சந்திக்க கட்சியை முழுமையாக பலப்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இருவர் தலைமையில் ஒரு குழு வரும். அந்தக் குழு, கட்சி வளர்ச்சி, வளர்ச்சிக்குத் தடையாக உள்ள காரணம், நிர்வாகிகள் என்ன நிலையில் உள்ளனர், அவர்கள் எதிர்பார்ப்பு என்ன, அதிமுக நிர்வாகிகள் என்ன நிலைப்பாட்டில் உள்ளனர் என்ற அறிக்கையை 15 நாட்களுக்குள் தலைமைக்குக் கொடுக்க வேண்டும்.

அதன் பிறகு தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாகச் சுற்றுப்பயணம் வர போகிறேன்.

இவ்வளவு நாள் நான் அமைதியாக இருந்ததை நான் முடங்கிப் போய்விட்டதாகவும் காணவில்லை என்றும் பேசினார்கள். கொரோனா வைரஸ் தொற்று காரணத்தால் அமைதியாக இருந்தேன். கொரோனா தொற்றால் பலரை இழந்துள்ளேன்" என்று பேசியிருக்கிறார் தினகரன்.

மேலும், "கர்நாடக அரசு மேகதாது அணையைக் கட்ட ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. அதைக் கண்டித்து திருச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் வரும் 14 ஆம் தேதி நடத்த இருக்கிறோம். அடுத்த நாள் 15ஆம் தேதி அமமுக ஐந்தாவது தொடக்க ஆண்டு விழாவை மிகச் சிறப்பாக கொண்டாடுகிறோம். ஆர்ப்பாட்டத்துக்கு தமிழகம் முழுவதும் இருந்தும் தொண்டர்கள் திருச்சியில் திரள வேண்டும். நீண்ட நாட்களுக்கு பிறகு நமது பலத்தைக் காட்ட வேண்டும். இதுபோல தொடர் போராட்டங்களை நடத்தி கட்சியை பலப்படுத்துவோம். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை மிக நம்பிக்கையோடு நாம் சந்திப்போம்" என்று பேசியுள்ளார் தினகரன்.

சசிகலா விவகாரம் பற்றி சில மண்டலச் செயலாளர்கள் கேட்டபோது, "சின்னம்மா இலக்கும், நமது இலக்கும் ஒன்றுதான். ஆனால், பாதைதான் வெவ்வேறு. அதிமுகவில் இப்போது நடக்கும் சலசலப்புகள் மீது நம் கவனத்தைத் திருப்பி சிதறடிக்க வேண்டாம். நம் கட்சியை வளர்ப்பதில் கவனம் செலுத்துவோம். அதிமுக விரைவில் நம்மைத் தேடி வரும்" என்று குறிப்பிட்டிருக்கிறார் தினகரன்.

அமமுகவின் அடுத்த கட்டம் பற்றி நம்மிடம் பேசிய சில நிர்வாகிகள், "ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தினகரன் அனுப்பி வைக்கும் இருவர் அடங்கிய குழு மார்ச் 18ஆம் தேதி தனது பணியைத் தொடங்குகிறது. 93 மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்து ஆய்வு செய்து ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் அறிக்கையைத் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

மே மாதம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்துக்குப் புறப்படுகிறார் தினகரன். சுற்றுப்பயணத்தில் மக்கள் பிரச்சினைகளைக் கேட்டு தமிழக அரசுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளார் டிடிவி தினகரன்" என்கிறார்கள்.

- வணங்காமுடி

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

புதன் 9 மா 2022