மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 8 மா 2022

டிஜிட்டல் திண்ணை: திமுகவில் பாமக எம்எல்ஏக்கள்?

டிஜிட்டல் திண்ணை: திமுகவில் பாமக எம்எல்ஏக்கள்?

வைஃபை ஆன் செய்ததும் வாட்ஸ்அப் ஆன் லைனில் வந்தது.

"நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்து, பல்வேறு கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் ஆளுங்கட்சியான திமுகவில் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். வெற்றி சான்றிதழ் பெற்ற பத்தாவது நிமிடத்திலேயே திமுகவில் சேர்ந்திருக்கிறார்கள் பிற கட்சி கவுன்சிலர்கள். உள்ளாட்சி தேர்தலின் எதிரொலியாக கவுன்சிலர்கள் மட்டும்தான் திமுகவில் சேர்வார்களா, வேறு கட்சி எம்எல்ஏக்களே திமுகவில் சேர வாய்ப்பிருக்கிறது. இதற்கான அச்சாரம் சேலத்தில் போடப்பட்டிருக்கிறது" என்று பூடகமாக ஒரு குறிப்பை கொடுத்தது வாட்ஸ்அப்.

வாட்ஸ் அப்பே உன்னை வழிமொழிகிறேன் என்று குறுக்கிட்டது பேஸ்புக் மெசஞ்சர். வாட்ஸ்அப் சற்று வழிவிட தொடர்ச்சியை மெசேஞ்சரே டைப் செய்ய ஆரம்பித்தது.

"பாமக இளைஞரணி தலைவரும் மாநிலங்களவை எம்பியுமான அன்புமணி நேற்று மார்ச் 7ஆம் தேதி சேலம் மாவட்டம் மேட்டூருக்கு வந்தார். மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை சேலம் மாவட்டத்தில் உள்ள 100 ஏரிகளுக்கு அனுப்பும் திட்டப்பணிகள் மேட்டூர் அருகே உள்ள திப்பம்பட்டியில் நடக்கிறது.

இதனை பார்வையிட்டு ஆய்வுசெய்த அன்புமணி பாமக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். அப்போது பாமக தலைவர் ஜிகே மணி, சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள், மேட்டூர் பாமக எம்எல்ஏ சதாசிவம், முன்னாள் எம்எல்ஏ கார்த்தி, சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் ரேவதி, பாமக மாவட்ட செயலாளர் ராஜசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

அன்புமணியின் இந்த மேட்டூர் விசிட்டின் போது சில நிர்வாகிகள் அவரை தனியாக சந்தித்து சேலம் மாநகராட்சியில் பாமக அடைந்த படு தோல்வி குறித்து நீங்கள் முழு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

முழு விசாரணை நடத்தி இதற்கு காரணமானவர்களை தண்டிக்க வில்லை என்றால் அவர்கள் விரைவில் திமுகவில் சேர்ந்து விடுவார்கள் என்றும் அன்புமணிக்கு எச்சரிக்கை குறிப்பு கொடுத்திருக்கிறார்கள்.

'சேலம் மாநகராட்சி தேர்தலுக்காக நீங்கள் (அன்புமணி) பிரச்சாரத்துக்கு வந்தீர்கள். அப்போது சேலம் என்றாலே மாம்பழம்தான் ஞாபகம் வரும். அதனால் மாம்பழத்தை மறந்துவிடாதீர்கள்'என்று மக்களிடம் உரிமையாக ஓட்டு கேட்டீர்கள். ஆனால் நடந்தது என்ன? சுயேச்சைகளைக் கூட நெருங்க முடியாமல் பாமக படுதோல்வி அடைந்திருக்கிறது சேலத்தில்.

சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 59 இல் போட்டியிட்டோம். 55 வார்டுகளில் டெபாசிட்டை இழந்துள்ளோம். சேலம் மாவட்டத்தில் உள்ள ஆறு நகராட்சிகளிலும் பாமகவுக்கு ஒற்றை இலக்க சீட்டுகள் தான் கிடைத்துள்ளன.

பாமகவின் இந்த படுதோல்விக்கு காரணம் சேலம் மாநகர் மாவட்ட செயலாளரான அருள் எம்எல்ஏ வும் மேட்டூர் எம்எல்ஏவான சதாசிவமும் தான். அவர்கள் சேலம் மாவட்ட திமுக பொறுப்பாளரான அமைச்சர் நேருவின் வலையில் விழுந்து விட்டார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்தபோது பாமகவின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் முதல்வரை சந்தித்து வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்காக வலியுறுத்தினோம். நமது பொதுவான பிரச்சனை அது. ஆனால் இங்கே இந்த இரு பாமக எம்எல்ஏ களும் திமுக பொறுப்பாளர் அமைச்சர் நேருவோடு மிக நெருக்கமாக இருக்கிறார்கள். சேலத்தில் எடப்பாடியை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் அமைச்சர் நேரு பாமகவினரை கையிலெடுத்துக் கொண்டார். அதனால்தான் பாமக இயல்பான வாக்குகளைக் கூட பெற முடியாமல் சேலத்தில் சரிந்து விட்டது.

தேர்தல் முடிவுகள் வந்த பிறகு பாமக தொண்டர்கள் அதிர்ச்சியில் இருந்தபோது

மாநகர் மாவட்ட செயலாளர் அருள் எம்எல்ஏ, சென்னை சென்று அமைச்சர் நேருவை சந்தித்திருக்கிறார். அப்போது நேரு மாநகராட்சித் தேர்தலில் ஒத்துழைத்ததற்கு நன்றி சொல்லி, 'பேசாம நீங்க ரெண்டு பேரும் திமுகவுக்கு வந்துடுங்க' என்று அழைத்திருக்கிறார். அதுமட்டுமல்ல திமுகவுக்கு ஒத்துழைத்ததற்காக பிரதிபலன் மொத்தமாக கிடைக்க வாய்ப்பில்லை... இஎம்ஐயில் தான் தருவோம் என்று சொல்லி சிரித்திருக்கிறார் நேரு. இதையெல்லாம் சேலத்தில் திமுக நிர்வாகிகள் சொல்லிச் சொல்லி நமது மானத்தை வாங்குகிறார்கள் அண்ணா.... நீங்க இதற்கு ஏதாவது உடனடியா நடவடிக்கை எடுக்கணும். இல்லையென்றால் பாமக எம்எல்ஏக்கள் திமுகவுக்கு சென்றாலும் ஆச்சரியமில்லை.

உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு பாமகவை வலுப்படுத்துவது தொடர்பாக மாவட்ட ரீதியாக டாக்டர் ஐயா ஆலோசனை நடத்தி வருகிறார். மார்ச் 1ஆம் தேதி சேலம் மாவட்டம் பற்றிய ஆலோசனை நடத்தினார். ஆனால் அந்த ஆலோசனைகளில் மாவட்ட செயலாளர்கள் -மாவட்ட தலைவர்கள் மட்டுமே கலந்து கொள்கிறார்கள். அதனால் இந்த விவரங்களை எல்லாம் டாக்டரிடம் நேரடியாக தெரிவிக்க முடியவில்லை. நீங்கள் அய்யாவிடம் சொல்லுங்கள்' என்று அன்புமணியிடம் விலாவாரியாக விளக்கி இருக்கிறார்கள்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அன்புமணி நான் ஐயாவிடம் இதைச் சொல்லி கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன்' என்று சொல்லிச் சென்றுள்ளார்" என்று விளக்கமாக டைப் செய்து முடித்தது மெசஞ்சர்.

தொடர்ந்து முடிவு குறிப்பை டைப் செய்த வாட்ஸ்அப்,"சேலம் மாவட்டத்தில் திமுகவுக்கு தற்போது ஒரே ஒரு எம்எல்ஏ தான் இருக்கிறார். இந்த ஐந்து வருடத்தில் இதை மாற்ற முடியாது. ஆனால் பாமகவில் உள்ள இரண்டு எம்எல்ஏக்களை தங்களுக்கு ஆதரவாக கொண்டு வருவதன் மூலம் சேலம் மாவட்டத்தில் 3 திமுக எம்எல்ஏக்கள் என்ற அரசியல் சூழலை உருவாக்க முதலில் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட செந்தில் பாலாஜி முயன்றார். இப்போது நேரு அதை தீவிரப்படுத்தி இருக்கிறார் என்று பாமகவிலேயே பேசுகிறார்கள்" என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ்அப்.

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

செவ்வாய் 8 மா 2022