மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 7 மா 2022

வனப்பகுதியில் மேய்ச்சலுக்குத் தடை: தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்!

வனப்பகுதியில் மேய்ச்சலுக்குத் தடை: தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்!

சமீபத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திரன் திருமுருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்திருந்தார்.

அதில், “மேகமலை வனவிலங்கு மற்றும் சரணாலயத்தில் வனவிலங்கு காப்பாளர், தேனி வனச்சரக மாவட்ட வன அலுவலர் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் கால்நடைகள் மேய்ச்சலுக்கு அனுமதிக்கப்படுகின்றன. இது தமிழ்நாடு வன சட்டம், வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் விதிகளை மீறுவதாகும். அதுமட்டுமில்லாமல், வளர்ப்பு கால்நடைகள், கால் மற்றும் வாய் நோய்கள், ஆந்த்ராக்ஸ் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்தால், அவைகள் வனப்பகுதிகளில் மேய்ச்சலுக்கு செல்லும்போது, அதன்மூலமாக, வனவிலங்குகளுக்கும் இந்த நோய்கள் பரவ வழிவகை ஏற்படுகின்றன. அதனால், வனப்பகுதிக்குள் கால்நடைகள் மேய்ச்சலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை கடந்த வெள்ளிக்கிழமையன்று(மார்ச் 4) விசாரித்த நீதிபதிகள் வி.பாரதிதாசன், என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, “மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு கால்நடைகளை அழைத்துச் செல்வதால் வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. அதனால், தமிழ்நாடு முழுவதும் வனப்பகுதிகளுக்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வனத்துறை அனுமதிக்கக் கூடாது” என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவு கால்நடை வளர்ப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு ஆடு, ஒரு மாடு வைத்திருப்பவர்கள் வீடுகளிலேயே வைக்கோல், புல் போன்றவற்றை போட்டு வளர்க்க முடியும். ஆடு மற்றும் மாடு மந்தை வைத்திருப்பவர்களால் எப்படி மேய்ச்சல்லுக்கு செல்லாமல் கால்நடைகளை வளர்க்க முடியும் என்று கால்நடை வளர்ப்போர் கவலையுடன் கூறுகின்றனர்.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக ஆடு வளர்ப்போர் பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் சத்தியம் சரவணன், “உயர் நீதிமன்ற தீர்ப்பை தமிழக முதல்வர் பரிசீலனை செய்து எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி ராமேஸ்வரத்திலிருந்து, சென்னை வரை கால்நடைகளுடன் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், வனப்பகுதிகளில் கால்நடைகளை மேய்ப்பதற்குத் தடைவிதித்துள்ள உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு உடனடியாக மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர், “வனப்பகுதியை ஒட்டியுள்ள மேய்ச்சல் நிலங்களை நம்பி தொன்றுதொட்டு ஆடு, மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள தொல்குடித் தமிழர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கி, அவர்களை வறுமையில் தள்ளுவதாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது, மிகுந்த வேதனையளிக்கிறது. யானை நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 250 கிலோவரை உணவு உட்கொள்ளும் வழக்கத்தை உடையன. அவற்றை ஒப்புநோக்கும்போது மனிதர்கள் வளர்க்கும் கால்நடைகள் மிகமிகக் குறைந்தளவு உணவையே உண்பதால், அவற்றால் மலைவளம் பாதிக்கப்படுவதாகக் கூறுவதும் ஏற்புடையதல்ல. மேலும், இயற்கையிலேயே வலுவான நோய் எதிர்ப்புச்சக்தி கொண்ட வன விலங்குகளுக்கு, கால்நடைகளால் நோய் பரவுகின்றது என்பதும் அடிப்படை ஆதாரமற்றதாகும்.

மலைக்காடுகளையும், வன உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டுமென்று உண்மையான அக்கறை இருக்குமாயின், ஒவ்வொருநாளும் காடுகளில் முறைகேடாக மரங்கள் வெட்டப்பட்டு டன் கணக்கில் கடத்தப்படுவதையும், சொகுசு விடுதிகள், அடுக்குமாடி கட்டிடங்கள், தண்டவாளங்கள், சாலைகள், தொழிற்சாலைகள், தொலைத்தொடர்பு கருவிகள், அறிவியல் ஆய்வகங்கள் ஆகியவை அமைப்பதற்காக, வன விலங்குகளின் வாழ்விடங்களும், வழித்தடங்களும் சுருக்கப்படுவதையும் தடுத்து நிறுத்த தீவிர நடவடிக்கை எடுப்பதே சரியானதாக இருக்கும்.

அதனால், தமிழர்களின் மேய்ச்சல் மரபுரிமையைப் பறிக்கின்ற உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து, ஆடு, மாடு மேய்க்கும் தொல்குடி தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

-வினிதா

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

திங்கள் 7 மா 2022