மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 6 மா 2022

சிறப்புக் கட்டுரை: உக்ரைன் போரைக் கொண்டாடும் ஆயுத உற்பத்தி நிறுவனங்கள்!

சிறப்புக் கட்டுரை: உக்ரைன் போரைக் கொண்டாடும் ஆயுத உற்பத்தி நிறுவனங்கள்!

ராகுல் பேடி

இரண்டு ஆண்டு கோவிட்-19 பாதிப்பில் இருந்து உலகம் மீண்டு வரும் சூழலில் உக்ரைன் போர் நெருக்கடி அமெரிக்க, ஐரோப்பிய ஆயுத உற்பத்தியாளர்களுக்கு நல்லதொரு வர்த்தக வாய்ப்பாக அமைந்துள்ளது.

21ஆம் நூற்றாண்டின் பனிப்போருக்கு உலகம் தயாராகிவரும் நிலையில், அமெரிக்காவும் நேட்டோவும் ரஷ்யா எல்லை அருகே தங்கள் ராணுவத் தளவாடங்களை வலுவாக்குவதில் ஈடுபட்டுள்ளன. வரலாற்றிலேயே முதன்முறையாக ஐரோப்பிய ஒன்றியம் ஆயுதங்களைக் கொள்முதல் செய்து உக்ரைனுக்கு அளிக்க இருப்பதாகக் கூறியுள்ளது.

பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டு, சோவியத் குடியரசுகள் சிதறிய 30 ஆண்டுக் காலத்துக்குப் பிறகு, 1991இல் இழந்த பகுதிகளை மீண்டும் பிடிக்கும் உத்தேசத்துடன் ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளதால் ஐரோப்பாவில் மீண்டும் மோதல் அபாயம் ஏற்பட்டுள்ளது

ஆயுத நிறுவனங்களின் காட்டில் மழை

போர்ச் சூழல் நீடிப்பதும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் ஆதரவும் ஆயுத உற்பத்தியை ஊக்குவித்து, ஆயுத நிறுவனங்களுக்குப் பெரும் லாபமாக அமையும் என ராணுவ வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இரண்டாம் உலகப் போர் பாதிப்புக்குப் பிறகு, ஜெர்மனி தனது ராணுவத்தை மேலும் வலுவாக்க 100 பில்லியன் யூரோவைச் செலவிடவிருப்பதாக அறிவித்துள்ளதும் முக்கியமாக அமைகிறது. ரஷ்யாவின் ராணுவமயமாக்கலுக்கு பதிலடியாகத் தனது ராணுவத்தில் ஜெர்மனி அதிக முதலீடு செய்வதோடு, உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கவும் தீர்மானித்துள்ளது.

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வுக் கழகத் தகவலின்படி உலக ஆயுத வர்த்தகத்தில் 90 சதவிகிதத்தை 10 நாடுகள் கைக்குள் வைத்துள்ளன. இவற்றில், 2016- 20இல் சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, அமெரிக்கா ஆகியவை 75.9 சதவிகிதத்தைக் கொண்டுள்ளன. இஸ்ரேல், இத்தாலி, கொரியா, ஸ்பெயின், பிரிட்டன் ஆகியவையும் ஆயுத வர்த்தகத்தில் உள்ளன. இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகள் 9.7 சதவிகித பங்களிப்பைக் கொண்டுள்ளன.

இந்த நிலையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் உலக ஆயுத உற்பத்தியாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகின் முன்னணி ஆயுத உற்பத்தி நிறுவனங்களான ரேத்தியான், லாக்ஹீட் மார்ட்டின் (Raytheon, Lockheed Martin) ஆகியவை உக்ரைன் நெருக்கடி அருமையான வர்த்தக வாய்ப்பு எனத் தங்கள் முதலீட்டாளர்களிடம் வெளிப்படையாகச் சொல்லிவருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ரேத்தியான் நிறுவனம், விமானத் தாக்குதல் பாதுகாப்பு அமைப்புகளைப் பிரதானமாக உற்பத்தி செய்கிறது. 1989இல் ஆப்கானிலிருந்து சோவியத் படைகள் விரைவாக வெளியேறுவதற்கான காரணங்களில் ஒன்றான ஏவுகணை அமைப்பும் இதில் அடங்கும். இந்த ஸ்டிரிங்கர் ஏவுகணை ஒன்றின் விலை 119,300 டாலர். உக்ரைனுக்கான ஐரோப்பிய ஆயுத உதவியில் இதுவும் அங்கம் வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் ஹைபர்சாபிக் நுட்பம் கொண்ட ஏவுகணைகளை உற்பத்தி செய்கிறது. போர் விமானம், ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றையும் தயாரிக்கிறது.

இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து, மேம்பட்ட FGM-148 பீரங்கிகளுக்கு எதிரான ஏவுகணைகளை உற்பத்தி செய்கின்றன. இவை 2.5 முதல் 4 கிமீ தாக்குதல் திறன் கொண்டவை, ரஷ்யாவுக்கு எதிரான உக்ரைன் ராணுவத்தின் முக்கிய பதிலடியாக அமைந்துள்ளன. வேறு பல ஆயுத அமைப்புகளும் உள்ளன.

ஒவ்வொன்றும் 175,200 டாலர் விலை கொண்ட 30 ஜாவ்லின் ஏவு மையங்களையும் 180 ஏவுகணைகளையும் கடந்த அக்டோபரில் அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கியது. இப்போது ஐரோப்பிய ஒன்றிய உதவியிலும் இத்தகைய ஏவுகணைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மரண வியாபாரிகள்

அமெரிக்காவின் சிகாகோவைச் சேர்ந்த ‘இன் திஸ் டைம்ஸ்’ இதழின் தகவலின்படி, ரேத்தியான் நிறுவன சி.இ.ஓ கிரேக் ஹேய்ஸ், ஜனவரியில் வெளியிட்ட வருவாய் அறிக்கையில், ஐரோப்பாவின் தற்போதைய நெருக்கடி மூலம் நிறுவனம் பயன்பெறும் வாய்ப்பு உள்ளதைக் குறிப்பிட்டுள்ளார். பொது நிறுவனம் ஒன்று தனது நிதி நிலை முடிவுகளை விவாதிக்கும் வெப்காஸ்டாக இது அமைந்தது. இதேபோல, லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தின் தலைவர் ஜிம் டைக்லெட், உக்ரைன் தொடர்பாக அமெரிக்க, ரஷ்ய நாடுகளிடையிலான அதிகாரப் போட்டி அருமையான வர்த்தக வாய்ப்பாக அமைவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தின் அங்கமான ஜெனரல் டைனமிக்ஸ், உக்ரைன் நெருக்கடி போன்ற கடந்த கால மோதல்களிலிருந்து பெற்றுள்ள வர்த்தக லாபம் தொடர்பாக விரிவாகக் குறிப்பிட்டுள்ளது. உக்ரைனில் நிலவும் ராணுவப் பதற்றம் நிறுவனத்துக்கான லாபகரமான வாய்ப்பு எனும் விதமாக நிறுவனத்தின் கருத்து அமைந்துள்ளதாக இந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது.

புறக்கணிக்கப்பட்ட எச்சரிக்கை

உக்ரைன் நெருக்கடி அளிக்கும் வர்த்தக வாய்ப்பு தொடர்பாக அமெரிக்க ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் வெளிப்படுத்தியுள்ள களிப்பு, 1961இல் தனது விடைபெறும் உரையில் அமெரிக்க அதிபர் ஐஷன்ஹோவர் தெரிவித்த எச்சரிக்கைகளை நினைவூட்டுகிறது. இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்க ராணுவத்துக்குத் தலைமை தாங்கிய ஐஷன்ஹோவர் அந்த உரையில், நாட்டின் ஆயுத உற்பத்தித் துறையைக் கட்டுப்படுத்தத் தவறினால் உலகம் முழுவதும் நிரந்தரப் போர்ச் சூழல் உருவாகும் எனத் தெரிவித்திருந்தார்.

உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா முன்னணி ராணுவமாக உருவான நிலையில், அதன் ராணுவப் பலத்துக்கு வழிவகுத்த ஆயுத இயந்திரம் வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களாக மாறாது என அவர் கூறியிருந்தார்.

இதனிடையே, ரஷ்ய ராணுவத் தொழில்நுட்பமும் சீனாவின் பணமும் இணைவது, இருதரப்பின் அரசியல், ராணுவ, ராஜாங்க உறவுகள், தைவான் - இந்திய எல்லையில் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயலும் உத்தியை மேற்கொள்வது முதலானவற்றால் ஐஷன்ஹோவர் எச்சரித்த நிலை உருவாக வாய்ப்பிருப்பதாக உள்நாட்டு வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இறுதியில், உலகின் ஆயுத உற்பத்தி நிறுவனங்கள், தங்கள் நிதி ஆதாயத்துக்காக மனித மோதலைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவே விரும்புவார்கள். லாபம் அடைய இனியும் எதுவும் இல்லை என்னும் நிலையை அடைவதுவரை இது நீடிக்கலாம்.

1965இல் இந்தியா – பாகிஸ்தான் போரின்போது இந்தியக் கவிஞர் சஹீர் லுதாவின்வி எழுதிய கவிதை இங்கு பொருத்தமாக அமைகிறது:

போர் என்பதே ஒரு பிரச்சினை, அது பிரச்சினைகளுக்கு என்ன தீர்வுகளை வழங்கிவிட முடியும்?

அது இன்று தீயையும், ரத்தக் களரியையும் உண்டாக்கி, நாளை தேவையையும் பசியையும் உருவாக்கும்.

ராகுல் பேடி 1979இல் இந்தியன் எக்ஸ்பிரஸில் தனது வாழ்க்கையைத் தொடங்கி 42 ஆண்டுகளாக ஒரு பத்திரிகையாளராக இருந்து வருகிறார். 1980களின் பிற்பகுதியில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ராய்ட்டர்ஸ் ஃபெலோவாகச் சேர்ந்த பிறகு லண்டனில் பணியமர்த்தப்பட்டார். தற்போது, ​​அவர் ஜேன்ஸ் டிஃபென்ஸ் வீக்லி, யுகே, ஐரிஷ் டைம்ஸ், டப்ளின் மற்றும் டெய்லி டெலிகிராப் ஆகியவற்றில் புது டெல்லி நிருபராக உள்ளார்.

*

நன்றி- தி வயர் இணைய இதழ்

தமிழில்: சைபர் சிம்மன்

திருவாரூர் வீதிக்கு கலைஞர் பெயர்: பாஜகவுக்கு பணிந்ததா திமுக? ...

8 நிமிட வாசிப்பு

திருவாரூர் வீதிக்கு கலைஞர் பெயர்: பாஜகவுக்கு பணிந்ததா திமுக?

குவாரி கொடூரம்: பின்னணி முகம்!

5 நிமிட வாசிப்பு

குவாரி கொடூரம்: பின்னணி முகம்!

சிறப்புக் கட்டுரை: இலங்கை: பெரும்பான்மைவாதம் என்ற தேசத்தின் ...

19 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: இலங்கை: பெரும்பான்மைவாதம் என்ற தேசத்தின் புதைகுழி!

ஞாயிறு 6 மா 2022