மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 5 மா 2022

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுடன் பன்னீர் தம்பி- நடந்தது என்ன?

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுடன் பன்னீர் தம்பி- நடந்தது என்ன?

மொபைல் டேட்டா ஆன் செய்ததும் இன்ஸ்டாகிராம் சில படங்களை அனுப்பியது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ. ராஜா அதிமுக பொதுச்செயலாளர் என்று உரிமை கொண்டாடும் சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார். ராஜா சசிகலா சந்திப்பு படம், அவரோடு சென்ற தேனி மாவட்ட நிர்வாகிகள் படம் ஆகியவற்றை இன்ஸ்டாகிராம் அனுப்பியது.

அதைப் பார்த்துவிட்டு நடந்தது என்ன என்பதை வாட்ஸ்அப் டைப் செய்யத் தொடங்கியது.

"தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சில கோயில்களுக்கு செல்வதற்காக சசிகலா மார்ச் 4ஆம் தேதி பகல் தூத்துக்குடி வந்தடைந்தார்.

ஏற்கனவே தேனி மாவட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் சையது கான் தலைமையில் கூடி சசிகலாவையும் தினகரனையும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். இந்தப் பரபரப்பு முடிவதற்குள் தான் சசிகலாவை சந்திக்க தூத்துக்குடிக்கு புறப்பட்டுச் சென்றார் பன்னீரின் தம்பி ராஜா.

திருச்செந்தூரில் தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த சசிகலாவை சந்திக்க ஓ.ராஜா, நேற்று மாலை 5. 30 க்கு சென்றார். அதே ஓட்டலில் ராஜாவுக்கும் ஒரு ரூம் புக் செய்யப்பட்டிருந்தது. அந்த ரூமில் சசிகலாவுக்காக காத்திருந்தார் ராஜா.

மாலை ராஜாவை சந்தித்து ஓரிரு நிமிடங்கள் நலம் விசாரித்த சசிகலா, 'கோயிலுக்கு போறதுக்கு எனக்கு டைம் ஆயிடுச்சு. இங்கேயே இருங்க. வந்து பேசுவோம்' என்று அவரிடம் சொல்லிவிட்டு கோயிலுக்கு புறப்பட்டு சென்றார்.

இரவு 9.30 மணிக்கு திரும்ப ஹோட்டலுக்கு வந்தார் சசிகலா. அதுவரை காத்திருந்த ராஜா சசிகலாவுடன் சுமார் 20 நிமிடங்கள் பேசி இருக்கிறார்.

பன்னீர்செல்வம் எப்படி இருக்கிறார் என்று நலம் விசாரித்த சசிகலா தேனி மாவட்டத்தில் நடந்த கூட்டம் பற்றியும் ராஜாவிடம் விளக்கமாக கேட்டு அறிந்துகொண்டார்.

அப்போது ராஜா, 'அம்மா... நீங்க அதிமுக மறுபடியும் எந்த பிரிவையும் சந்திக்கக்கூடாதுனு ரொம்ப பக்குவமா நிதானமா செயல்படுறீங்க. ஆனா நீங்க என்னதான் சமாதானமாகப் போக விரும்பினாலும் எடப்பாடி அதுக்கு தோதாக இல்லை. அவர் தன்னை சுத்தி இருக்கிற சமூக பின்னணியில் விடாப்பிடியா இருக்காரு. எடப்பாடியையும் சம்மதிக்க வச்சி எல்லாரையும் ஒற்றுமை படுத்தலாம்னு நினைக்கிறது சரியா வராது.

அதனால நீங்க அதிரடியாக களத்தில் இறங்குங்க. தலைமைக் கழகத்துக்கு வாங்க... உங்களை வரவேற்க நாங்க தயாராய் இருக்கோம். இப்போதைக்கு என்ன பண்ணுனாலும் அதிமுக மறுபடியும் இரண்டு பிரிவாக போக வாய்ப்பு இருக்கு. நிச்சயம் எடப்பாடிக்கிட்ட ஒரு பிரிவு இருக்கும். ஆனா அதைக் கூடிய சீக்கிரம் சரி பண்ணிடலாம்.

எல்லாம் சுமுகமாக நடக்கணும்னா காலம்தான் விரயமாகும். அதனால நீங்க அதிரடியாக தலைமைக் கழகத்துக்கு வாங்க' என்று சொல்லி இருக்கிறார் பன்னீரின் தம்பி ஓ. ராஜா.

இதையெல்லாம் கேட்டுக் கொண்ட சசிகலா, 'என்னால அதிமுகவுக்கு எந்த பாதகமும் வந்துடக் கூடாதுன்னுதான் கடந்த இரண்டு தேர்தலின் போதும் நான் ஒதுங்கியே இருந்தேன். ஆனால் வருகிற நாடாளுமன்றத் தேர்தலையும் இப்படியே விட்டுவிட முடியாது. நீங்க சொல்றதையும் யோசனை பண்றேன். ஒரு முடிவெடுக்கலாம்' என்று சொல்லி அனுப்பி இருக்கிறார் சசிகலா.

சசிகலாவை கடந்த 24ஆம் தேதி சந்தித்ததாக விழுப்புரம் , திண்டிவனம் பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், பன்னீர்செல்வம் எடப்பாடி இருவரின் கையெழுத்திட்டு நீக்கப்பட்ட அறிவிப்பு நேற்று வந்த நிலையில்தான்.... ஓ. ராஜாவோடு தேனி மாவட்ட அதிமுக இலக்கிய அணி செயலாளர் முருகேசன், மாவட்ட மீனவர் அணி செயலாளர் வைகை கருப்பு உள்ளிட்ட நிர்வாகிகளும் சசிகலாவை சந்தித்தனர்.

அவர்கள், 'சீக்கிரம் தேனிக்கு வாங்கம்மா' என்று சசிகலாவுக்கு அழைப்பு விடுத்தனர். நிச்சயமா வரேன் என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்திருக்கிறார் சசிகலா. அதிமுகவில் பரபரப்பான காட்சிகள் அடுத்தடுத்து நடக்க அதிக வாய்ப்பு உள்ளன" என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ்அப்.

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்! ...

5 நிமிட வாசிப்பு

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்!

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை? அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் ...

11 நிமிட வாசிப்பு

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை?  அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் அதிமுகவாகும் சிவசேனா

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

5 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

சனி 5 மா 2022