மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 4 மா 2022

அதிமுக வாக்கு வங்கி சரியவில்லை: திருமா

அதிமுக வாக்கு வங்கி சரியவில்லை: திருமா

உள்ளாட்சி அமைப்புகளில் கேட்டது கிடைக்கவில்லை என்றாலும், ஒதுக்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நேற்று(மார்ச் 3) வடபழனியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைமை அலுவலகத்தில் மாநகராட்சி துணை மேயர், பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர், நகராட்சி துணைத் தலைவர்களின் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “விசிக கட்சிக்கு ஒரு துணை மேயர், இரண்டு நகர்மன்றத் தலைவர்கள், மூன்று நகர்மன்றத் துணைத் தலைவர்கள், மூன்று பேரூராட்சி மன்றத் தலைவர்கள், ஏழு பேரூராட்சி துணை மன்றத் தலைவர்கள் பதவிகளை ஒதுக்கியதற்கு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை, கடலூர், சேலம் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் துணை மேயர் பதவியும், ஒரு இடத்தில் மேயர் பதவியும் கேட்டிருந்தோம். அதில், கடலூரில் துணை மேயர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மேயர் பதவியும் கிடைத்திருந்தால் இன்னும் மகிழ்ச்சி. எதிர்பார்த்தது கிடைக்கவில்லையென்றாலும், ஒதுக்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டோம். கடலூரில் துணை மேயர் பதவிக்கு வழக்கறிஞர் தாமரைச்செல்வன் போட்டியிடுகிறார். அனைத்து இடங்களிலும் கூட்டணிக் கட்சிகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள் துணை நிற்க வேண்டும். திமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ளனர். அதற்கு வாக்காளர் பெருமக்களுக்கு நன்றி” என்று கூறினார்.

தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி பாஜக என்று சொல்லி வருகிறார்களே என்ற கேள்விக்கு

பதில் அளித்த அவர், "அண்ணாமலைக்கு ஒன்று, இரண்டு கூட ஒழுங்காகப் படிக்கவில்லை என்றுதான் தெரிகிறது. தமிழகத்தில் வெற்றி பெற்ற கட்சிகளின் சதவிகிதத்தை வரிசைப்படுத்தினால் பாஜக எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதை கண்டறிய முடியாமல், மூன்றாவது இடத்தில் இருக்கிறோம் என்று சொல்லுவது, ஒன்று கணக்கு தெரியவில்லை என்று பொருள் அல்லது கற்பனை உலகில் மிதக்கிறார்கள் என்று பொருள். பாஜக மூன்றாவது கட்சி என்பது ஒரு மாயை. தமிழகத்தில் அது எடுபடாது. பாஜக போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில் டெபாசிட்டை இழந்துள்ளனர். அவர்கள் தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்று சொல்லி திரிகிறார்கள். இதை மூடி மறைப்பதற்காக வாய்க்கு வந்ததை சொல்லி கொண்டிருக்கின்றனர். அவர்களின் நிலை பரிதாபத்துக்குரியது” என்று கூறினார்.

அதிமுக தோல்வி குறித்து பேசிய அவர், “அதிமுகவின் வாக்கு வங்கி சரிந்துவிட்டது என்று சொல்ல முடியாது. ஆனால், அதிமுகவை வழிநடத்தக் கூடிய வலிமைமிக்க ஆளுமை இல்லை. ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக கடந்த ஐந்தாண்டுக் காலமாக பாஜகவை தோளில் தூக்கி சுமந்தார்கள். அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்தார்கள். அவர்கள் கொட்டம் அடிப்பதற்கு சிவப்பு கம்பளம் விரித்தார்கள். அதனால் அதிமுக மீதான நன்மதிப்பு மக்களிடம் சரிந்துவிட்டது. இந்த சரிவுக்கு பாஜகவுடன் கொண்ட உறவுதான் காரணம் என்று கருதுகிறேன்.

இந்த நிலையில் சசிகலா அதிமுகவை வழிநடத்தப் போகிறார்கள் என்கிற செய்திகள் வருகின்றன. அவர் இணைவதும்,இணையாமல் இருப்பதும் தனிப்பட்ட முறையில் அதிமுகவின் உட்கட்சி விவகாரம் என்று கருதுகிறேன். இதில் கருத்து சொல்வதற்கு ஏதும் இல்லை” என்று கூறினார்.

-வினிதா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

வெள்ளி 4 மா 2022