மதுரை மேயரானார் இந்திராணி

மதுரை மாநகராட்சியில் திமுக மேயர் வேட்பாளரான இந்திராணி பொன் வசந்த் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
மதுரை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் திமுக 67 வார்டுகளை கைப்பற்றியது. 57வது வார்டில் போட்டியிட்டு 6,851 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் இந்திராணி பொன் வசந்த் மதுரை மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்திராணி தேனி பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் பி.ஏ வரலாறு படித்து, காமராஜ் பல்கலைக்கழகத்தில் எம்ஏ முடித்துள்ளார்.
இவரது கணவர் பொன்வசந்த் வழக்கறிஞராக உள்ளார். இவர் ஆரப்பாளையம் பகுதி கழக செயலாளராகவும், மாவட்ட மாணவர் துணை அமைப்பாளராகவும், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில் இன்று(மார்ச் 4) மதுரை மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் இந்திராணியை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், மதுரை மேயராக அவர் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், இந்திராணிக்கு பதவிபிரமாணம் செய்து வைத்தார்.
தொடர்ந்து கருப்பு நிற அங்கியை அணிந்த இந்திராணி, தனக்கான மேயர் இருக்கையில் அமர்ந்தார். நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல், மதுரை எம்பி சு.வெங்கடேசன் ஆகியோர் இணைந்து இந்திராணிக்கு செங்கோல் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர்.
வினிதா