மேயராகும் பெண் பொறியாளர்கள்!

தமிழகத்தில் இன்று மேயர், துணை மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக திமுக நேற்று வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.
இதில் மேயர் பதவிக்கு 9 ஆண்கள் 11 பெண்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். துணை மேயர் பதவிக்கு 10 ஆண்கள் 5 பெண்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டதாரிகள் ஆவர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மற்றும் தாம்பரம் மாநகராட்சிகளில் பெண் பொறியாளர்கள் மேயராக பொறுப்பேற்க உள்ளனர்.
புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சியில் உள்ள மொத்தம் 70 வார்டுகளில் திமுக கூட்டணி 50ல் வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி 9 வார்டுகளிலும், சுயேச்சைகள் 7 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.
தாம்பரம் மாநகராட்சியின் முதல் மேயர் பதவி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், திமுக சார்பில் 32ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வசந்தகுமாரி மேயர் வேட்பாளர் என கட்சித் தலைமை நேற்று அறிவித்தது.
25 வயதாகும் இவர் பிடெக் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார். இவரது தந்தை கமலக்கண்ணன், தாய் ஜெயந்தி, கணவர் கோகுல செல்வன்.
வசந்தகுமாரி தற்போது திமுகவில் தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக உள்ளார். அதோடு இவர் தனது குடும்பத்தின் முதல் பட்டதாரி ஆவார். இவரது தந்தை கமலக்கண்ணன் 35 ஆண்டுகளாக திமுகவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுபோன்று காஞ்சிபுரத்திலும் முதல் பெண் மேயராக பொறியாளர் ஒருவர் தேர்வாக உள்ளார்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 51 வார்டுகளில் 32ல் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.
புதிதாக உருவாக்கப்பட்ட இந்த மாநகராட்சியின் முதல் மேயர் வேட்பாளராக திமுக சார்பில் 9வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மகாலட்சுமி அறிவிக்கப்பட்டுள்ளார்.
மகாலட்சுமி காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க இளைஞர் அணி துணை அமைப்பாளர் யுவராஜின் மனைவி ஆவார். இன்போசிஸ் மென்பொருள் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த இவர் அந்த பதவியை விட்டுவிட்டுத் தேர்தலில் போட்டியிட்டார்.
9-வது வார்டில் போட்டியிட்ட இவர் 1,539 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்று தற்போது மேயராக உள்ளார்.
-பிரியா