சிறப்புக் கட்டுரை: ரஷ்யாவுக்கு சிரியா ஆதரவை எப்படிப் புரிந்துகொள்வது?

politics

b> சைபர் சிம்மன்
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிகப்பெரிய மனிதநேய நெருக்கடியை ஏற்படுத்திவிடுமோ என உலகையே கவலைப்பட வைத்திருக்கும் உக்ரைன் – ரஷ்யா பிரச்சினையில், ரஷ்யா பக்கம் நிற்பதாக சிரியா வெளிப்படையாக அறிவித்துள்ளது. சிரியா அதிபர் பஷார் அல் அசாத் (Bashar al-Assad ), ரஷ்ய அதிபரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது ஆதரவைத் தெரிவித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
ரஷ்யத் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், சிரியா மட்டும் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருப்பது ஏன் என்னும் கேள்விக்கான பதிலை சர்வதேச அரசியலை மேலோட்டமாக கவனித்து வருபவர்கள் எளிதாக ஊகித்துவிடலாம். சில ஆண்டுகளுக்கு முன் சிரியா உள்நாட்டுப் போரில் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ரஷ்யா அந்நாட்டின் பக்கம் நின்றது. எனவே, சிரியா இப்போது ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவிப்பது எதிர்பார்க்கக்கூடியதே என்று புரிந்துகொள்ளலாம்.
அன்று செய்த உதவிக்குப் பதில் இந்த ஆதரவு என்பதுபோல சிரிய அதிபரின் செயல் அமைந்திருந்தாலும், ரஷ்யாவுக்கான சிரியா ஆதரவு ஏன் எனும் கேள்வியை இன்னும் ஆழமாக அலசி ஆராய்ந்து புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. உக்ரைன் போரில் பெரும் உயிர்ச்சேதம் நிகழ்ந்து கொண்டிருக்கும் சூழலில் இந்த ஆய்வை மேற்கொள்வது இந்தப் பிரச்சினையின் பல்வேறு பரிமாணங்களையும் புரியவைக்கும்.
உக்ரைன் பிரச்சினையில், ரஷ்யா பக்கம் நிற்பதோடு, அதற்கான காரணங்களை சிரியா அதிபர் பஷார் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். இது தொடர்பான அல் ஜஸிரா, ராய்ட்டர்ஸ் செய்திகள் சுட்டிக்காட்டுவது போல, “வரலாறு திருத்தப்பட்டிருக்கிறது” என்று அவர் கூறியுள்ளார். அது மட்டுமல்ல, பெரும்பாலான உலக நாடுகளின் நிலைப்பாட்டை, மேற்கத்திய நாடுகளின் மிகை எதிர்வினை (ஹிஸ்டிரியா) என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனில் நடப்பது “வரலாற்றைத் திருத்துவது, சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு உண்டான சமநிலையை மீண்டும் கொண்டுவருவது” என அவர் புதினிடம் கூறியதாக அந்நாட்டு அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாகச் செய்திகளில் கூறப்பட்டுள்ளன.
“ரஷ்யக் கூட்டமைப்பு நிலைப்பாடு சரி எனும் நம்பிக்கையில் மற்றும் நேட்டோ விரிவாக்கத்தை எதிர்கொள்வது ரஷ்யாவின் உரிமை எனும் புரிதலின் அடிப்படையில் அதன் பக்கம் சிரியா நிற்கிறது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதைவிடத் தெளிவாக சிரிய அதிபர் தனது ஆதரவைத் தெரிவித்திருக்க முடியாது. போரால் நிகழும் பாதிப்புகளுக்கு யார் பொறுப்பு என்பது போன்ற கேள்விகளை அவர் கருத்தில் கொள்ளவில்லை என்றாலும், ரஷ்யா நிகழ்த்தும் தாக்குதலுக்கு அந்நாட்டிடம் நியாயம் இருப்பதைப் புரிந்துகொள்வதாக அவர் தெரிவித்திருக்கிறார்.


சொந்த நாட்டு மக்களின் மீதே தாக்குதல் நடத்தி லட்சக்கணக்கான மக்களை அகதிகளாகப் பரிதவிக்கவிட்டவர் எனும் குற்றச்சாட்டுக்கு இலக்கான சிரிய அதிபரின் ஆதரவையும் அதற்கான நியாயங்களையும் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும், அவர் கூறியுள்ள விஷயங்கள் இந்தப் பிரச்சினை ஏன் இத்தனை தீவிரமானது என்பதை உணர்த்துவதை கவனிக்க வேண்டும்.
வரலாற்றுத் திருத்தம் என்கிறார். ஆம், ரஷ்யா தன் பங்குக்கு வரலாற்றை அல்லது வரலாற்றின் விளைவைச் சரி செய்ய முயற்சி செய்கிறது. இதை பனிப்போர் சூழலை மீண்டும் கொண்டுவருவது என்றும் புரிந்துகொள்ளலாம். சோவியத் யூனியன் காலத்துச் சமநிலை என்றும் புரிந்துகொள்லலாம். இவைத்தவிர, வேறு அம்சங்களும் கலந்திருக்கின்றன.
சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு ரஷ்யா தன் நிலைப்பாட்டை வலியுறுத்த விரும்புகிறது. இதில் புதின் எனும் தனிப்பட்ட தலைவரின் விருப்பு வெறுப்புகளும் கலந்திருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், வல்லரசான அமெரிக்க – ஐரோப்பாவில், முன்னாள் சோவியத் யூனியன் பகுதிகள் ரஷ்யா பக்கம் சாயாமல் இருப்பதற்கான விருப்பம் நிலவுவதை மறுக்க முடியுமா?
ஐரோப்பாவின் நலனுக்காக மட்டுமல்லாமல் அதன் அரசியலுக்காகவும் உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பு விரிவாக்கத்தில் ஈடுபடுவதும் இதற்கான முக்கிய புள்ளியாக உக்ரைன் அமைவதும், இதற்கான காரணங்கள் சிக்கலான வரலாற்றில் பின்னிப் பிணைந்திருப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் அல்லவா? நேட்டோ படைகள் தன் எல்லைக்கு அருகே வரக்கூடிய வாய்ப்பை விலக்கி வைக்க ரஷ்யா விரும்புவதாக அரசியல் நோக்கர்கள் சொல்வதையும் மனதில் கொள்ள வேண்டும்.
ஆனால், இந்தக் காரணங்கள் எல்லாம் போரால் ஏற்படும் உயிர்ச் சேதத்தையும், இன்னும் பிற பாரதூரமான பாதிப்புகளையும் நியாயப்படுத்திவிடாது. ஒவ்வொரு நாட்டுக்கும் தனக்கே உரிய நியாயமான கவலைகள் இருக்கத்தான் செய்யும். அவற்றுக்குத் தீர்வு போரில் இல்லை என்பதே இதுவரையிலுமான போர்கள் நமக்கு உணர்த்தும் யதார்த்தம். பிரச்சினையில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருமே இதை உணர்ந்தால் உலகுக்கு நல்லது.

*

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *