தப்பு கணக்குப் போட்டுவிட்டீர்கள்: புதினுக்கு பைடன் எச்சரிக்கை!

politics

உக்ரைனில் தொடர்ந்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் , ரஷ்ய அதிபர் புதினுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இன்று ஏழாவது நாளாக உக்ரைனின் கார்கிவ் நகரில் பல்வேறு இடங்களில் ரஷ்யா தாக்குதலை நடத்தி வருகிறது. ரஷ்யாவின் வான்வழிப் படைகள் உக்ரைன் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் பகுதிக்குள் நுழைந்ததாக உக்ரைன் ராணுவம் அறிவித்த சில மணி நேரத்தில், கார்கிவ் பகுதியில் உள்ள போலீஸ் தலைமையகத்தை ராக்கெட்டின் மூலம் மிகப்பெரிய தாக்குதலை ரஷ்யப் படைகள் நடத்தின.

இதனால் அந்த நகரமே புகை மண்டலமாகக் காட்சி அளிக்கிறது. அதோடு, அந்த பகுதியில் இருக்கும் வெளிநாட்டவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

**உணர்ச்சிகரமாக பேசிய ஜெலன்ஸ்கி**

இதனிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, காணொளி காட்சி வாயிலாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு அங்கிருந்த பிரதிநிதிகள் எழுந்து நின்று பலத்த கரகோஷம் எழுப்பினர்.

ஜெலன்ஸ்கி தனது பேச்சில், “எங்கள் நகரங்கள் அனைத்தும் இப்போது தடுக்கப்பட்டிருந்தாலும் நாங்கள் எங்கள் நிலத்திற்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடுகிறோம். உக்ரைன் “ஐரோப்பாவின் சம உறுப்பினர்களாக இருக்க” போராடுகிறது. நீங்கள் எங்களுடன் இருக்கிறீர்கள் என்பதை நிரூபியுங்கள். எங்களைவிட்டு நீங்கள் செல்ல மாட்டீர்கள் என்பதை நிரூபியுங்கள். நீங்கள் உண்மையிலேயே ஐரோப்பியர்கள் என்பதை நிரூபியுங்கள். அப்போதுதான் வாழ்க்கை மரணத்தை வெல்லும், ஒளி இருளை வெல்லும். ஐரோப்பிய ஒன்றியம் எங்களுடன் மிகவும் வலுவாக இருக்க வேண்டும். நீங்கள் இல்லாமல், உக்ரைன் தனிமையில் இருக்கும்” என்று உணர்ச்சிப் பெருக்க பேசினார்.

**எச்சரிக்கும் பைடன்**

ரஷ்யாவின் நடவடிக்கைக்குத் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், செவ்வாய் இரவு நாடாளுமன்றத்தில் பேசிய போது, உக்ரைன் மீதான படையெடுப்புக்கு புதின் மட்டுமே காரணம். இதற்காக அவர் நீண்ட காலம் தொடர்ந்து பெரிய விலையைக் கொடுக்க வேண்டி இருக்கும்.

புதினின் போர் திட்டமிட்ட மற்றும் தூண்டப்படாத ஒன்று. ராஜாங்க ரீதியிலான முயற்சிகளை புதின் நிராகரித்துவிட்டார். நேட்டோ மற்றும் மேற்கு நாடுகள் எதிர்வினையாற்றாது என்று அவர் தவறாக நினைத்துவிட்டார். ஆனால் நாங்கள் தயாராகவே இருக்கிறோம். புதின் தப்பு கணக்குப் போட்டுவிட்டார்” என்று எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் அவர், ரஷ்ய தன்னலக்குழுக்களின் குற்றங்களைக் கண்காணிக்க ஒரு தனி பணிக்குழுவைக் அமெரிக்க நீதித்துறை கூட்டி வருகிறது என்று தெரிவித்ததுடன், ரஷ்யப் படகுகள், சொகுசு குடியிருப்புகள், தனியார் ஜெட் விமானங்களைக் கண்டுபிடித்துக் கைப்பற்ற ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் நாங்கள் இணைகிறோம்” என்றும் கூறியுள்ளார்.

உக்ரைன் சுருண்டுவிட்டால், உலகமே சுருண்டு விடும் என்று புதின் தப்புக் கணக்குப் போட்டு, நினைத்துப் பார்க்க முடியாத எதிர்த்தரப்பின் வலிமையைச் சந்தித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளின் ஒற்றுமையைக் கலைக்கலாம் என்று அவர் கனவு காண்கிறார். ஆனால் அது பலிக்காது என்றும் பைடன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் உக்ரைன் உடனான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்காதான் தடையாக இருக்கிறது. மற்ற நாடுகளிலிருந்து ரஷ்யா தனித்து விடப்படவில்லை. மேற்கு நாடுகளிடமிருந்து உக்ரைன் அணு ஆயுதங்களை வாங்க ரஷ்யா அனுமதிக்காது என்று ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் லாவ்ரோவ் கூறியுள்ளார். அதுபோன்று மூன்றாம் உலக போர் அழிவுகரமான மற்றும் அணு ஆயுத யுத்தமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *