மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 2 மா 2022

கனிமொழியிடம் கத்துக்கங்க: மீனாவுக்கு அட்வைஸ்

கனிமொழியிடம் கத்துக்கங்க: மீனாவுக்கு அட்வைஸ்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து திமுக பெரிய வெற்றி பெற்ற நிலையில்... பிப்ரவரி 26-ஆம் தேதி கோவையில் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தை கோவை மாவட்ட பொறுப்பாளரான அமைச்சர் செந்தில் பாலாஜி கூட்டினார்.

அதிமுகவின் கோட்டையாக இருந்த கோவையை திமுக கைப்பற்றிய நிலையில் இந்த கூட்டம் செந்தில் பாலாஜிக்கான பாராட்டுவிழா ஆகவே மாறிப் போயிருந்த நிலையில்... மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் மீனாட்சி ஜெயக்குமாரின் பேச்சால் அந்தக் கூட்டத்தின் திசை திரும்பியது.

கோவை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்ட மீனா ஜெயகுமார் கவுன்சிலர் ஆகிவிட்டால் மகளிர் அணி பொறுப்பை பயன்படுத்தி நிச்சயம் கோவை மாநகராட்சி மேயர் ஆகிவிடலாம் என கணக்குப் போட்டிருந்தார். ஆனால் அவருக்கு போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் இந்த ஒருங்கிணைந்த கோவை மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தனது குமுறல்களை எல்லாம் வெளியே கொட்டினார்.

கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் தான் தனக்கு மாநகராட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்ததை தடுத்தார் என நேரடியாகவே அவர் பேசும்போது குற்றம்சாட்டினார்.

"அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவை மாவட்ட பொறுப்பாளராக தலைவர் நியமித்த போது... ஒரு ஆம்பளையை கோவை மாவட்டத்திற்கு பொறுப்பாளராக நியமித்திருக்கிறார் என நான் கூறினேன். இங்க இருக்கிறவங்க பண்ணாததை செந்தில்பாலாஜி சாதித்து விட்டார்.

மனதில் பட்டதை ஓபனாக பேசி விடுவதால் தான் நான் பல இடங்களில் பேசுவதே இல்லை. எனக்கு இந்த தேர்தலில் வாய்ப்பு கிடைக்க இருந்ததை தடுத்தவர் மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் தான். அவருக்கும் எனக்கும் பெரிய பிரச்சினை எல்லாம் இல்லை. ஒரு இடப் பிரச்சனையில் தான் தொடங்கியது. ஆனால் அதை மனசுல வச்சி என் வெற்றியை தடுத்த முதல் ஆள் அவர்தான்

என்னை தீண்டத்தகாதவர் மாதிரி SC னு சொல்லி எல்லார்கிட்டயும் பரப்புனாங்க திமுக நிர்வாகிகள்.

அதனால் தான் எனக்கு சீட்டு கிடைக்கல. எங்க சோழிய வெள்ளாளர் சமூகத்துல இருந்து நான் ஆள் கூட்டிட்டு வந்து நிறுத்தட்டுமா? உன் பொண்டாட்டிக்கு சீட்டு வேணும்னா தாராளமா கேட்டு வாங்கிக்க. அதுக்காக என்ன பத்தி எதுக்கு தவறான தகவல்கள் அனுப்புறே?" என்று மீனா ஜெயக்குமார் கோபத்திலும் சோகத்திலும் பேச அவருக்கு ஆதரவாக சிலரும் எதிராக சிலரும் அரங்கத்தில் எழுந்து கூச்சலிட்டனர்.

அப்போது பொறுப்பாளர் அமைச்சர் செந்தில் பாலாஜி, "எல்லாரும் இருக்கும் இடத்தில இதுபோல பேசாதீங்க. அது என்ன பிரச்சனையோ அதை என்கிட்ட கடிதமாக கொடுங்க. நடவடிக்கை எடுக்கிறேன்" என்று சொல்லி மீனா ஜெயக்குமாரை அமர வைத்தார்கள்.

மீனா ஜெயக்குமாரின் இந்த பேச்சு கோவையில் திமுக பெற்ற வெற்றியை விட அதிகமாக சமூக தளங்களில் பகிரப்பட்டது.

இந்த தகவல் மாநில மகளிர் அணி செயலாளரும் எம்பியுமான கனிமொழிக்கும் சென்று சேர்ந்தது.

இதுபற்றி கனிமொழியின் ரியாக்ஷன் என்ன என்பதை மாநில மகளிர் அணியின் சீனியர் நிர்வாகிகள் சிலரிடம் கேட்டோம்.

"தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக தேர்தல் முடிவு வரை காத்திருந்து கட்சி வெற்றி பெற்ற பிறகு பொதுமேடையில் இவ்வாறு பேசுவதை கனிமொழி ஏற்றுக் கொள்ளவில்லை. தனது வருத்தத்தை அவர் மீனாவுக்கு தெரியப்படுத்தி விட்டார்.

உள்ளாட்சித் தேர்தலில் மகளிரணி நிர்வாகிகளுக்கு பல இடங்களில் கனிமொழியே மாவட்ட செயலாளர்களிடமும் அமைச்சர்களிடமும் நேரடியாக சிபாரிசு செய்திருக்கிறார். சில இடங்களில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. சில இடங்களில் சில காரணங்களைச் சொல்லிக் கொடுக்கப்படவில்லை.

இதற்காக கனிமொழி பொதுமேடையில் யாரையாவது குற்றம் சொல்லி பேசினாரா? பெண்கள் அரசியலுக்கு வருவதையும் அரசியலில் சிறப்பாகச் செயல்படுவதையும் ஒரு சவாலாகவே செய்யவேண்டியிருக்கிறது. இந்த நிலையில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக இதுபோல பொது மேடையில் பேசுவது தவறு.

கட்சிக்குள்ளே கனிமொழிக்கும் சில வருத்தங்கள் இருக்கின்றன. ஆனால் தனது தனிப்பட்ட வருத்தங்களை எல்லாம் கடந்து 50 சதவீத மகளிர் ஒதுக்கீட்டை கொண்டுவரச் சொல்லி தலைவரிடம் வற்புறுத்தியும்... மகளிரணி நிர்வாகிகளுக்கு வாய்ப்பு கேட்டும் வெற்றி பெற்றிருக்கிறார் கனிமொழி.

மகளிர் அணி செயலாளர் என்ற வகையில் அவரது போராட்ட குணத்தை மகளிரணி நிர்வாகிகளும் பின்பற்ற வேண்டும். கட்டுப்பாட்டோடும் கண்ணியத்தோடும் போராடும் குணத்தை கனிமொழியிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். இதையெல்லாம் மீனா ஜெயக்குமாரிடம் நாங்களும் எடுத்துச் சொல்லி இருக்கிறோம்" என்கிறார்கள்.

வேந்தன்

.

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

புதன் 2 மா 2022