இன்று எல்பிஜி - நாளை பெட்ரோல், டீசல்: ராகுல்

இன்று வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு, நாளை பெட்ரோல், டீசலுக்கான விலை உயரும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
மாதந்தோறும் முதல் தேதியன்று எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் செய்து வருகின்றன. அதன்படி மார்ச் மாதத்தில் வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.105 அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வணிக சிலிண்டர் ரூ.2,145க்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் ரூ.2,012 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையேற்றத்தின் காரணமாக, டீக்கடை மற்றும் ஹோட்டல் நடத்துபவர்களும் பாதிக்கப்படுவார்கள். அதன் எதிரொலியாக டீ, உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்படும்.
இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில், “வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை உயர்த்தியதன் மூலம், சாமானிய மக்களின் துயரங்களைப் பற்றி கவலைப்படவில்லை என்பதை மோடி அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இன்று எல்பிஜி விலை உயர்வு, நாளை பெட்ரோல் மற்றும் டீசல்” என்று பதிவிட்டுள்ளார்.
-வினிதா