மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 1 மா 2022

மாணவர் பலி: உக்ரைன் ரஷ்ய தூதர்களுக்கு சம்மன்!

மாணவர்  பலி:  உக்ரைன் ரஷ்ய தூதர்களுக்கு சம்மன்!

உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், இரு நாட்டு தூதர்களுக்கும் இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள், அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர். இந்த போரில் 21 வயதே ஆன இந்திய மாணவர் உயிரிழந்தது இந்திய மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹவேரியைச் சேர்ந்த மாணவர், நவீன் சேகரப்பா ஞானகவுடர் கார்கீவ் தேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வந்தார். ரஷ்யாவின் தாக்குதலால் இந்திய மாணவர்கள் பதுங்கு குழிகளிலும், அண்டர்கிரவுண்ட் மெட்ரோ ஸ்டேஷன்களிலும் தஞ்சமடைந்துள்ளனர். ஊரடங்கு உத்தரவால் சிலர் ஹாஸ்டலை விட்டு வெளியே வரவில்லை.

இந்நிலையில், “நாணயத்தை மாற்றவும், உணவு வாங்கவும் பதுங்கு குழியிலிருந்து வெளியே வந்த நவீன் கொல்லப்பட்டுள்ளார்” என்று அவரது உறவினர் உஜ்ஜனகவுடா கூறியுள்ளார். உயிரிழந்த மாணவரின் தந்தை, ”கார்கீவ் நகரில் சிக்கியுள்ள மாணவர்களை இந்தியத் தூதரகத்திலிருந்து யாரும் அணுகவில்லை” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

கார்கீவ் நகரில் ஆளுநர் மாளிகைக்கு அருகில் வசித்து வந்த நவீன் உணவு வாங்குவதற்காக ஒரு கடைக்கு வெளியே நின்றுகொண்டிருந்த போது நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக கார்கீவ் நகரில் உள்ள மாணவர் ஒருங்கிணைப்பாளரான பூஜா பிரஹராஜ் தெரிவித்துள்ளார். ஆளுநர் மாளிகையை தாக்கும் முனைப்புடன் நடந்த தாக்குதலில் நவீன் கொல்லப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

முன்னதாக நவீன் தனது குடும்பத்தினருடன் வீடியோ கால் மூலம் கன்னட மொழியில் பேசியுள்ளார்.

அதுபோன்று உயிரிழந்த மாணவரின் பெற்றோருக்குப் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார்.

உக்ரைனில் நடந்த குண்டு வீச்சில் இந்திய மாணவர் உயிரிழந்த நிலையில் மற்ற இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யப் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இது கடந்த 48 மணி நேரத்தில் பிரதமர் மோடி நடத்தும் 4-வது உயர்மட்டக்குழு கூட்டமாகும்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கான தூதர்களை நேரில் வர மத்திய அரசு சம்மன் வழங்கியுள்ளது. உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளது.

-பிரியா

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

3 நிமிட வாசிப்பு

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

செவ்வாய் 1 மா 2022