மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 1 மா 2022

சிறப்புக் கட்டுரை: உக்ரைன் போர்; எண்ணெய் பொருளாதாரத்தின் இறுதியா? – பகுதி 3

சிறப்புக் கட்டுரை: உக்ரைன் போர்; எண்ணெய் பொருளாதாரத்தின் இறுதியா? – பகுதி 3

பாஸ்கர் செல்வராஜ்

ரஷ்யாவின் போரும் நோக்கமும்...

ரஷ்ய படையெடுப்பின் நோக்கம் Demilitarization and Denazification என்கிறார் புதின். இதை நேட்டோ அங்கு நிறுவியுள்ள ஆயுதங்களை அழித்து அவர்களாலும் அமெரிக்க ஒப்பந்த ராணுவ குழுவினராலும் (Military Contractor) பயிற்றுவிக்கப்பட்ட நவநாஜிக் குழுக்களின் ஆதிக்கம் நிறைந்த அசோவ் பிரிகேடை ஒழிப்பது என்பதாகப் புரிந்துகொள்ளலாம். அதன்மூலம் இந்தத் தீவிர தேசியவாத குழுக்களின் அரசியல் ஆதிக்கத்தை ரஷ்யா ஒழிக்க நினைக்கிறது. அதன்மூலம் நடுநிலை அல்லது ரஷ்ய ஆதரவு ஆட்சியை நிறுவி ரஷ்ய படைகள் வெளியேறுவதாக இதன் போக்கு இருக்கலாம். வழமையான முழுவீச்சு ஆயுத தாக்குதலுக்குப் பதிலாக உக்ரைன் ராணுவத்தை பல பகுதிகளில் தனித்தனியாகச் சுற்றி வளைக்கும் முறையை ரஷ்யா கையாள்கிறது. அதன்மூலம் தொடர்ந்து அவர்கள் போரிட தேவையான தளவாடங்கள் கிடைக்கவிடாமல் செய்து பேச்சுவார்த்தைக்கு இணங்க வைத்து குறைவான உயிரிழப்புகளுடன் இந்த போரை முடிவுக்கு கொண்டுவரும் திசையில் இந்தப் போர் சென்று கொண்டிருப்பதாகத் தெரிகிறது. முதலில் நேட்டோ இதில் பங்கேற்காது என்ற அறிவிப்பு வந்தது. இப்போது ஆயுத உதவி செய்ய முன்வந்திருக்கிறார்கள். “அமைதி” ஏற்படுத்தச் சென்று கியேவில் சிக்கிய ஜெர்மனியின் உளவுத் துறை தலைவரை அந்நாட்டு சிறப்புப் படை பாதுகாப்பாக மீட்ட பிறகு இதுவரையிலுமான ஆயுத ஏற்றுமதிக் கொள்கையை தளர்த்தி ஆயுதம் வழங்க முன்வந்திருக்கிறது. பைடன் மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை தர முன்வந்திருக்கிறார்.

போரின் பொருளாதார விளைவுகள்...

ரஷ்யாவின் மீது பொருளாதார தடை மற்றும் அந்நாட்டு வங்கிகளை உலக பரிவர்த்தனை அமைப்பான SWIFTஇல் இருந்து வெளியேற்ற மேற்குலகம் முடிவு செய்திருக்கிறது. உலக கோதுமை ஏற்றுமதியில் 25 விழுக்காட்டைக் கொண்டிருக்கும் இந்த இரண்டு நாடுகளுக்கு இடையிலான போர் அதன் விலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இரண்டு நாடுகளில் இருந்தும் கோதுமையை இறக்குமதி செய்யும் சீனா ர‌ஷ்யாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் இறக்குமதி செய்ய விதிகளை தளர்த்தி இருக்கிறது. ஐரோப்பாவுக்கு மாற்று இல்லை. ஆதலால், விலையேற்றத்தைச் சந்திக்கும். அடுத்து ரஷ்யா ஐரோப்பிய ஒன்றியத்தின் 40 விழுக்காடு எரிவாயு தேவையை நிவர்த்தி செய்கிறது. உலகின் பத்து விழுக்காடு எண்ணெய் தேவையை நிவர்த்தி செய்கிறது. தற்காலிகமாக அமெரிக்க, கத்தார் எரிவாயுக்கள் மூலமாக ஐரோப்பா சமாளித்தாலும் அதற்கு 30-40 விழுக்காடு கூடுதல் விலையை கொடுக்க வேண்டும். அப்படியே இறக்குமதி செய்தாலும் அது மொத்த தேவையையும் நிவர்த்தி செய்யாது. ஆதலால் இதற்கு மட்டும் தடை விலக்கம் கொடுத்திருக்கிறார்கள். முன்பு உக்ரைன் வழியாக எரிவாயு கொடுக்க முரண்டு பிடித்த ரஷ்யா இப்போது இதன்வழியாக ஏற்றுமதி செய்வதாகச் சொல்கிறது. எண்ணெய் விலை ஏறிக்கொண்டே போகிறது. 80 விழுக்காடு எரிபொருளை இறக்குமதி செய்யும் இந்திய ஒன்றியம் இந்த விலையேற்றத்தை எதிர்கொள்ள வேண்டும். வசதிமிக்க ஐரோப்பிய ஒன்றியம் இந்த விலையேற்றத்தை சமாளிக்கலாம். எளிதில் உடைந்து விடக்கூடிய பொருளாதாரக் கட்டமைப்பைக் கொண்டிருக்கும் இந்தியா தாக்குபிடிப்பது மிகவும் கடினம்.

மொத்தமாக ரஷ்யாவை SWIFTஇல் இருந்து வெளியேற்றி வெளிநாட்டில் ஒரு ட்ரில்லியன் டாலர் இருக்கும் அதன் சொத்துகளை முடக்கினால் நிதிச் சந்தையில் பெரும் பதிப்புகள் உண்டாகும் என எச்சரிக்கிறார்கள். 2015இல் ரஷ்யா - சீனா இரண்டும் SWIFT பரிவர்த்தனை அமைப்புக்கு மாற்றாக CIPS, SPFS ஆகிய மாற்று பரிவர்த்தனை அமைப்பை உருவாக்கி இரண்டையும் இணைத்து வைத்திருக்கிறார்கள். சீனாவின் CIPS இப்போது 50 பில்லியன் பெறுமான பரிவர்த்தனைகளை (SWIFT 400 பில்லியன்) செய்து வருகிறது. இந்தத் தடை, அதை இன்னும் அதிகரிக்க செய்யும். ரஷ்யா தனது எரிபொருளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது அதிகரித்து சொந்த நாணயங்களில் சொந்த பரிவர்த்தனை அமைப்புகள் மூலம் செய்தால் அது ரஷ்யாவையும் சீனாவையும் இன்னும் நெருக்கமாக்கும். அது சீனா முதல் கிழக்கு ஐரோப்பா வரையான யூரேசிய பகுதி முழுக்க இந்த இரு நாடுகளின் ஆதிக்கத்தை வலுவாக்கும். அண்டை நாடுகளை சொந்த நாணயங்களை பயன்படுத்த சீனா ஊக்குவித்து வருகிறார்கள். அது டாலரின் மீதான அழுத்தத்தை இன்னும் கூட்டும். மோதல்களை இன்னும் அதிகரிக்கும்.

மாறும் உலகமும் அதிகார மையங்களும்

இந்த எல்லாவற்றையும்விட ஒரு முக்கிய மாற்றம் இந்தப் போரின்போது தென்பட்டது. போர் ஏற்படும்போது பங்குச்சந்தை விழுவது இயல்பானது. அமெரிக்கச் சந்தை ஒரு விழுக்காடும், ஐரோப்பா மற்றும் இந்தியச் சந்தைகள் நான்கு விழுக்காடும் விழுந்தன. இவ்வாறான காலங்களில் பாதுகாப்பான முதலீட்டுச் சொர்க்கம் (Safe Heaven) எனக் கருதப்படும் டாலரில் பில்லியன் கணக்கில் போய் முதலீடுகள் குவிவது வழக்கம். ஆனால், இந்த முறை அதிக அளவு சீன நாணயத்துக்கு அது சென்றிருக்கிறது. இது காற்று எந்தப் பக்கம் வீசுகிறது என்பதைத் தெரிவிக்கும் சமிக்கை. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முடக்கப்பட்ட ஜெர்மனியின் ராணுவ வலிமையை உயிர்ப்பிக்க வேண்டிய தேவை வந்துவிட்டதாகவும் வெளியுறவு கொள்கையில் ஜெர்மனியின் இடத்தை நிலைநாட்ட வேண்டியது தேவை என்றும் அந்த நாட்டு அமைச்சர் பேசுகிறார். தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு விழுக்காட்டுக்கும் மேலாகப் பாதுகாப்புக்குச் செலவிடப் போவதாக புதிய அரசு அறிவித்திருக்கிறது. ஜப்பான் தனது அணு ஆயுதக் கொள்கையை மாற்றி அமெரிக்கா அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணையை இங்கே வைக்க வேண்டும் என முன்னாள் அதிபர் அபே ஆலோசனை சொல்கிறார். ஆகுஸ் ஒப்பந்தத்தால் பாதிக்கப்பட்ட பிரான்ஸ், சீனாவுடன் நேரடி பணப்பரிவர்த்தனை செய்ய ஒப்பந்தம் போடுகிறது. ஐரோப்பிய ஒன்றிய ஒற்றுமை உடைந்து கொண்டிருக்கிறது. பலதுருவ உலகம் கருக்கொண்டு வளர்ந்து கொண்டிருக்கிறது. டாலர் மதிப்பு விதி மாற்றத்தை சந்திக்கும் திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது.

உலக நாடுகளின் கடன் 281 ட்ரில்லியனாகவும் அமெரிக்கக் குடும்பங்களின் கடன் 15 ட்ரில்லியனுக்கும் மேலாகவும் உயர்ந்திருக்கிறது (200812.5 ட்ரில்லியன்). அமெரிக்க நிதி நிறுவனங்களை இந்தியா இங்கே விளையாட விட்டதன் விளைவு பங்குகளின் விலை ஏறியது. விலை அதிகமாக இருக்கும்போது அவர்கள் 55570 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்று வெளியேறி இருக்கிறார்கள். எல்ஐசி, எஸ்பிஐ உள்ளிட்ட உள்ளூர் நிதி நிறுவனங்களை 44859 கோடிகளைக் கொட்டச் சொல்லி இந்தியப் பங்குச்சந்தையை அமெரிக்காவின் வழியில் வீழாமல் காத்துக் கொண்டிருக்கிறார்கள். சந்தையில் பிரமாதமாக ஜொலிப்பதாக சொன்ன நைக்கா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இந்த ஊதிப் பெருக்கப்பட்ட பங்குச்சந்தை பலூன் வெடித்து சிதறும்போது இந்தியா இதுவரையிலும் காணாத வலியைச் சந்திப்பது தவிர்க்க இயலாதது.

உக்ரைனின் வழியில் இந்தியா; விழித்துக் கொள்வது நல்லது!

வியட்நாம் போரில் சோவியத் சார்பு அணி வெற்றிபெற்ற நிலையில் இந்தியா சோவியத்தின் பக்கம் சாய்ந்தது. தங்க மதிப்பு முறை உடைப்பைச் சந்தித்தபோது இந்திய வங்கி முதலாளிகள் அரசிடம் ஒப்படைத்து இந்தியாவை சோஷலிச வேடம் போட வைத்தார்கள். பிறகு எழுபதுகளில் ஏற்பட்ட பெட்ரோடாலர் மாற்றத்தின் போதான இந்தியாவின் பஞ்சம், விலைவாசி உயர்வு, அதனைத் தொடர்ந்த அவரசநிலைகால எதேச்சதிகார தனத்தையும் அதன் வலியையும் இந்தியர்கள் மறந்துவிட்டதுபோல் தோன்றுகிறது. ரஷ்யாவா? நேட்டோவா? உக்ரைனா? யார் சரி? யார் பக்கம் நிற்பது? என்பது இங்கு பேசுபொருளாக இருக்கிறது. இந்தப் பொருளாதார ஆதிக்கத்துக்கான அரசியல் சதுரங்கத்தில் ஒருசார்பான சமூக ஊடகங்களின் கருத்தியல் பிரச்சாரத்துக்குப் பலியாகி அவர்களில் ஒருவர் பக்க சார்பெடுத்து இந்த விளையாட்டில் நகர்த்தி விளையாடும் காயாக மாறியதன் விளைவை உக்ரைன் மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் நலனை விடுத்து பண முதலைகளின் நலனுக்கு ஏற்ற வெளியுறவுக் கொள்கையை கடைப்பிடித்ததால் வந்த வினையை நாம் கண்டு கொண்டிருக்கிறோம். வெற்றிக்குத் தேவை என்றால் நம்மை வைத்து விளையாடுவார்கள். சூழல் வரும்போது வெட்டுக் கொடுத்துவிட்டுப் போய் விடுவார்கள். அதற்கான விலையை மக்கள்தான் கொடுக்க வேண்டி வரும் என்ற பாடத்தை நடத்திக் காட்டிக் கொண்டிருக்கிறது உக்ரைன் பிரச்சினை. இந்தப் போரில் எவர் வென்றாலும் உடைந்த அந்த சமூகத்தை ஒட்டி சீர்செய்வது அவ்வளவு எளிதாக இருக்க போவதில்லை. விரைவில் இந்த வேதனையில் இருந்து மீண்டு முன்புபோல ஒற்றுமையுடன் ஒருநாள் அந்த மக்கள் மீளுவார்கள். (இதை எழுதிக் கொண்டிருக்கும்போதே பெலாரசில் பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதாக ரஷ்யா ஊடகம் செய்தி வெளியிடுகிறது)

சர்வாதிகார ஆட்சிக்கு மக்களின் ஆதரவு எப்படி இருக்கிறது? யார் எப்படியான அரசியல் நிலைப்பாடுகளை கொண்டிருக்கிறார்கள்? எப்படி செய்திகளை படிக்கிறார்கள்? என விலாவரியாக கணிப்புகள் நடத்தி செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கிறது வர்த்தக நாளிதழான மின்ட். போரை விடுத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாகச் செல்ல ரஷ்யாவை வற்புறுத்தும் அதேவேளை, இந்தியா இந்தப் பிரச்சனையில் மட்டுமல்ல; சீனாவுடனான மோதலிலும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்க்க சொல்ல வேண்டும். ரஷ்ய விவகாரத்தில் மட்டும் நடுநிலை என்ற வேஷத்தை விடுத்து சீனா உள்ளிட்ட எந்த நாட்டு விவகாரங்களிலும் யார் உள்விவகாரங்களிலும் தலையிடாமல் யாரையும் நமது உள்விவகாரங்களில் தலையிட அனுமதிக்காமல் ஐம்பதுகளைப் போல சார்பற்ற வெளியுறவு கொள்கையைக் கடைப்பிடிக்க வலியுறுத்த வேண்டும். யார் சரி... எந்த பக்கம் நிற்பது போன்ற மயிர் பிளக்கும் விவாதத்தை விடுத்து இந்தியப் பண முதலைகளின் நலனை முன்னிறுத்தி ஒருசார்பு கொள்கையைக் கடைப்பிடித்து நமது பொருளாதாரத்தைப் படுகுழியில் தள்ளிவிட்டு இருக்கும் இந்த இந்துத்துவ அரசியலை 2024இல் எப்படி எதிர்கொள்வது... எழுபதுகளை ஒத்த பொருளாதாரச் சூழலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து இப்போதே விரிவாக விவாதித்து தயாராவது நல்லது.

பகுதி 1 / பகுதி 2

கட்டுரையாளர் குறிப்பு

பாஸ்கர் செல்வராஜ், தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் - அரசியல் - பூகோள அரசியல் - சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.

.

ராகுலையும் கட்டிப்பிடித்து பேரறிவாளனையும் கட்டிப்பிடிப்பதா? ...

4 நிமிட வாசிப்பு

ராகுலையும் கட்டிப்பிடித்து பேரறிவாளனையும் கட்டிப்பிடிப்பதா?  ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கேள்வி

பேரறிவாளன் விடுதலை: மோடிக்கு காங்கிரஸ் கேள்வி!

4 நிமிட வாசிப்பு

பேரறிவாளன் விடுதலை: மோடிக்கு காங்கிரஸ் கேள்வி!

வைகோ இல்லை என்றால் சாத்தியமே இல்லை: பேரறிவாளன்

4 நிமிட வாசிப்பு

வைகோ இல்லை என்றால் சாத்தியமே இல்லை: பேரறிவாளன்

செவ்வாய் 1 மா 2022