மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 1 மா 2022

வாழ்த்து பரிசு மழையில் நனைந்த முதல்வர் ஸ்டாலின்

வாழ்த்து பரிசு மழையில் நனைந்த முதல்வர் ஸ்டாலின்

முதல்வராகப் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக இன்று ஸ்டாலின் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதனால் அண்ணா அறிவாலயம் இன்று விழாக் கோலம் பூண்டது.

இன்று (மார்ச் 1) தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். ஆழ்வார்பேட்டை வீட்டில் இன்று காலை எழுந்ததும் தனது தந்தையான மறைந்த முதலமைச்சர் கலைஞரின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா உதயநிதி மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் மற்றும் பேரன், பேத்திகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

இதையடுத்து தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா , கலைஞர் ஆகியோரது நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். கலைஞர் நினைவிடத்தில் உங்களில் ஒருவன் நூலை வைத்து வணங்கினார்.

தொடர்ந்து கலைஞரின் கோபாலபுர இல்லத்துக்குச் சென்ற அவர் தனது அம்மா தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார்.

அங்கிருந்து சிஐடி காலனிக்கு சென்ற அவரை கனிமொழி எம்.பி. வாசலில் நின்று வரவேற்றார். அங்கு கலைஞரின் துணைவியார் ராஜாத்தி அம்மாளிடம் ஆசி பெற்றார். அங்கிருந்து கிளம்பிய முதல்வர் ஸ்டாலின், பேராசிரியர் அன்பழகன் இல்லத்துக்கும் சென்று மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து கலைவாணர் அரங்கத்தில், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் திறன் மேம்பாட்டுக்கான 'நான் முதல்வன்' திட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

இவ்விழாவில் சிறப்புரையாற்றிய முதல்வர் அங்கிருந்து, அண்ணா அறிவாலயம் சென்றார். அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். முதல்வர் வாழ்க, தளபதி வாழ்க என்ற கோஷங்கள் விண்ணை முட்டும் அளவுக்கு இருந்தது.

அண்ணா அறிவாலயத்துக்கு வெளியில் சூழ்ந்திருந்த தொண்டர்களின் உற்சாக வாழ்த்துக்கு மத்தியில் உள்ளே சென்றார். பின்னர் உள்ளே தனக்காகக் காத்திருந்த தொண்டர்களையும், கட்சி நிர்வாகிகளையும் அழைத்து திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்துகளையும் பரிசுகளையும் பெற்றுக்கொண்டார். சால்வைகள், புத்தகங்கள், பழக்கூடைகள், மாலைகள் என பல்வேறு விதமான பரிசுகளை வழங்கினர்.

அதுபோன்று, இன்று முதல்வர் ஸ்டாலினுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முதல் பல்வேறு தரப்பினரும் தொலைபேசி வாயிலாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்தனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முதல்வரைத் தொடர்பு கொண்டு, தமிழகத்தின் வளர்ச்சிக்காக நீங்கள் பாடுபட வேண்டு்ம். உங்களுக்கு நீண்ட பொதுவாழ்வு அமைய வேண்டும் என்று வாழ்த்தினார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்வரைத் தொடர்பு கொண்டு தமிழில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததுடன் பூங்கொத்தும், வாழ்த்து கடிதமும் கொடுத்து அனுப்பினார்.

புதுச்சேரி மற்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தாங்கள் இளமையாக இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறி வாழ்த்து தெரிவித்தார். பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோரும் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.

அதுபோன்று, சென்னை அண்ணா சாலையில் உள்ள பார்வைத் திறன் பாதிப்பு, காது கேளாதோர், வாய் பேச முடியாத குழந்தைகளுக்கான லிட்டில் ஃப்ளவர் சிறப்பு பள்ளியில் உள்ள குழந்தைகளுடன் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் சென்று பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது பள்ளியின் வளர்ச்சி நிதியாக ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.

-பிரியா

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை! ...

3 நிமிட வாசிப்பு

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை!

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ...

5 நிமிட வாசிப்பு

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ஆதீனம்!

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

4 நிமிட வாசிப்பு

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

செவ்வாய் 1 மா 2022