மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 1 மா 2022

சிறப்புக் கட்டுரை: உக்ரைன் போர் - எண்ணெய் பொருளாதாரத்தின் இறுதியா? - பகுதி 1

சிறப்புக் கட்டுரை: உக்ரைன் போர் - எண்ணெய் பொருளாதாரத்தின் இறுதியா? - பகுதி 1

பாஸ்கர் செல்வராஜ்

காலனியாதிக்கம் உச்சத்தைத் தொட்டு பொருளாதார நெருக்கடி நிலவிய 1930களில் ஏகாதிபத்தியங்களிடையே மற்ற நாட்டு இறக்குமதி பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் வர்த்தகப் போர் மற்றும் தங்கத்துடன் பிணைக்கப்பட்ட நாணயங்களை விடுவித்து மதிப்பைக் குறைத்து சந்தையைப் பிடிக்கும் பணப்போர் நடந்தது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட இரண்டாம் உலகப்போரில் அப்போதைய ஏகாதிபத்தியங்களான இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் கடுமையான இழப்பைச் சந்தித்த பிறகு அப்போது வலுவுடன் இருந்த அமெரிக்காவின் தலைமையில் முதலாளித்துவ அணியாகவும் மற்றவை சோவியத் ரஷ்யாவின் தலைமையில் கம்யூனிச அணியாகவும் உலகம் இரு அணிகளாக பிளவு கண்டது வரலாறு.

தங்கத்தில் இருந்து எண்ணெய்க்கு மாறிய மதிப்பு விதி!

முதலாளித்துவ அணி 1 அவுன்ஸ் தங்கம் = 35 டாலர்கள் என தங்களுக்குள் பொதுவான மதிப்பு விதியை உருவாக்கிக் கொண்டு ஒருவருக்கொருவர் சந்தையைத் திறந்துவிட்டுக் கொண்டார்கள். இந்த மதிப்பு விதியின் மையமான தங்கம் அப்போதைய தளத்தகை சரக்கு (Strategic Commodity). ஏனெனில் சந்தையில் அதன் விலையில் ஏற்படும் மாற்றம் எல்லா பொருட்களிலும் பிரதிபலிக்கும். டாலர் மதிப்பையும் மாற்றும். அப்போது தங்க கையிருப்பு அதிகம் வைத்திருந்த அமெரிக்கா, சந்தையில் தங்கத்தின் மதிப்பை நிலைப்படுத்தும் சாத்தியத்தை வழங்கியது. அந்தத் தங்கத்தின் மதிப்பை தெரிவிக்கும் டாலர் நாடுகளுக்கு இடையிலான பரிவர்த்தனை நாணயமானது. இந்தப் பொருளாதாரத்துக்கான சந்தை விரிவாக்கத்துக்குத் தடையாக நின்ற கம்யூனிசத்தை வீழ்த்த முயன்ற வியட்நாம் உள்ளிட்ட போர்களில் ஏற்பட்ட தோல்வியும் செலவும் அமெரிக்காவை ஒப்பந்தத்தைப் பின்பற்ற முடியாத சூழலுக்குக் கொண்டு போகவே, இவர்களுக்குள் முட்டிக்கொண்டது. பிரான்ஸ் டாலரைக் கொடுத்து தங்கத்தைக் கேட்டது. தங்கம் கிடையாது எனச் சொல்லிய அமெரிக்கா, உடனடியாக டாலரில் மட்டுமே இனி எண்ணெய் விற்போம் என சவுதியை அறிவிக்க செய்தது. நாடுகள் இப்போது டாலரைக் கொடுத்து எண்ணெய் கொடுங்கள் என்று கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன. தங்கத்தின் மதிப்பை தெரிவித்த டாலர், எண்ணெயின் மதிப்பை தெரிவிக்கும் பெட்ரோடாலர் ஆனது. தங்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டு எண்ணெய் தளத்தகை சரக்கு ஆனது.

அமெரிக்க நடுத்தரவர்க்கம் கடனாளியாக...

சந்தையில் எண்ணெயின் விலையையும் டாலரின் மதிப்பையும் நிலைப்படுத்த, தான் விரும்பியவாறு நிர்ணயிக்க, அதன் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை இப்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். அதற்கு தடையாக இருந்த சோவியத்துடனான பனிப்போரில் அமெரிக்கா வெற்றி பெறவே தன்னிகரில்லா தலைமை இடத்தைப் பெற்றது. ஒற்றைத்துருவ உலகம் உருவானது. உலகின் மூலைமுடுக்கெல்லாம் டாலர் பாய்ந்தது. நாடுகள் அமெரிக்காவுக்குப் பொருட்களை ஏற்றுமதி செய்தோ, டாலரை கடனாக வாங்கியோ எண்ணெய்வள நாடுகளிடம் கொடுத்து எண்ணெய் வாங்க வேண்டும்; அந்த நாடுகள் அவற்றை அமெரிக்க கடன் பத்திரங்களில் முதலீடு செய்வார்கள்; அது மீண்டும் பொருளுக்கு டாலர் அல்லது கடனுக்கு டாலர் எனச் சுழலும். இந்தச் சுழற்சியின் மையம் அமெரிக்க மக்களின் பொருள் நுகர்வு; இன்றியமையாதவை எண்ணெய்வள நாடுகளின் இசைவும், மற்ற நாடுகளின் டாலர் தேவையும். இந்த நிதிய பேரரசை கட்டமைக்க அமெரிக்கத் தொழிற்துறையை பலிகொடுத்ததன் விளைவு, அமெரிக்க மக்களின் திறனையும் வருமானத்தையும் குறைத்து மக்களை வாங்க வழியில்லாதவர்களாக மாற்றியது. இதைச் சமாளிக்க கடன் பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தினார்கள்.

ஏற்பட்ட நெருக்கடியும் எதிர்ப்பை எதிர்கொண்டதும்...

எழுபதுகளில் சில பில்லியன் டாலராக இருந்த அமெரிக்கக் குடும்பங்களின் கடன் 2008இல் 12.5 ட்ரில்லியன் டாலராக அதிகரித்தது. கடனை அடைக்க மக்களின் வருமானத்துக்கு வழி ஏற்படுத்தாமல் கடன் மேல் கடன் கொடுத்து கடைசியில் அது 2008 பொருளாதார நெருக்கடியில் முடிந்தது. சந்தையில் ஏற்பட்ட இழப்பை ஏற்றுக்கொண்டு சமூக உற்பத்தியில் அதற்கான மாற்றங்களைச் செய்யாமல் தனது உலகப்பணத் தகுதியைப் பயன்படுத்தி ட்ரில்லியன் கணக்கில் டாலரை அச்சிட்டு தனது தலைவலியைத் தீர்க்க முற்பட்டார்கள். இருக்கும் பொருளுக்கும் எண்ணெய் வர்த்தக தேவைக்கும் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட டாலர் பணவீக்கத்தை அதிகரித்தது. இப்படி உயரும் எரிபொருளுக்கு எந்த எதிர்ப்பும் இன்றி சொன்ன விலைக்கு நல்ல பிள்ளையாக எரிபொருளை நுகரும் ஐரோப்பிய, சீன, இந்திய நாடுகள் வாங்கிக் கொண்டிருக்க மாட்டார்கள். அதேபோல எண்ணெயைக் கொடுத்து டாலர் காகிதச் சேமிப்பை எல்லையின்றி குவித்து வைத்துக் கொள்ள எண்ணெய்வள நாடுகள் முட்டாள்களும் அல்ல.

யுரோ நாணயம் பிறந்தது. இந்த ஏற்பாட்டுக்கு முன்னாட்களில் எதிர்ப்பு தெரிவித்த சதாமைப் போல பின்னாளில் எதிர்ப்பு தெரிவித்த கடாபி வீதியில் வீசியெறிந்து கொல்லப்பட்டார். இரான் உலக எண்ணெய் வர்த்தக சந்தையில் (Swift) இருந்து வெட்டி வீசப்பட்டது. எண்ணெய் வர்த்தகப் போக்குவரத்துக்கு அருகில் இருக்கும் எகிப்து, துனிசியாவில் வண்ணப் புரட்சிகள் வெடித்தன. ரஷ்யாவில் இருந்து ஐரோப்பாவுக்கு எண்ணெய் குழாய் செல்லும் உக்ரைனிலும் வீதி எதிர்ப்பு போராட்டம் வெடித்தது. ரஷ்ய ஆதரவு அதிபர் பதவியை இழந்தார். நவநாஜிக்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பினரின் ஆதரவு பெற்ற அரசு அங்கு உருவாக்கப்பட்டது. அதற்கு எதிராக ரஷ்ய மொழி பேசும் பகுதிகளில் இருக்கும் மக்கள் ரஷ்யாவின் உதவியுடன் தங்களுக்குள் வாக்கெடுப்பு நடத்தி தனிநாடு அமைக்கவும் ரஷ்யாவுடன் இணைத்துக் கொள்ளவும் அறிவிப்புகளை வெளியிட்டார்கள். ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த கிரிமியாவை இணைத்துக்கொண்ட ரஷ்யா மற்ற பகுதிகளுக்கு சுயாட்சி உரிமை வழங்க ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் தலைமையில் பேசி மின்ஸ்க் (Minsk) ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அதைச் செயல்படுத்தாமல் நேட்டோ ஆதரவு அதிபர் காலம் கடத்தவே உக்ரைன், நேட்டோ ஆதரவுடன் செயல்படும் உக்ரைனிய மொழி பேசும் பகுதி ரஷ்யா ஆதரவுடன் செயல்படும் ரஷ்ய மொழி பேசும் பகுதி என இரண்டாக உடைந்தது.

மாற்று ஏற்பாடுகளும் சந்தித்த பின்னடைவும்!

உலகின் மிகப்பெரிய பார்ஸ் எரிவாயு வயலை இரானுடன் பகிர்ந்துகொள்ளும் கத்தாரின் எரிவாயுவை இராக், சிரியா, துருக்கி வழியாக குழாய் மூலம் ஐரோப்பாவுக்குக் கொண்டுசென்று அந்தச் சந்தையைப் பிடிக்கும் திட்டத்துடன் சிரியாவில் உள்நாட்டு போர் தோற்றுவிக்கப்பட்டது. இந்த ஏற்பாட்டினால் சந்தையை இழக்கும் இரானும் ரஷ்யாவும் சேர்ந்து இதை எதிர்கொண்டு வெற்றி கண்டன. ரஷ்யாவும் சீனாவும் எரிவாயு குழாய் அமைத்து இருதரப்பு நாணயங்களில் பரிவர்த்தனை செய்துகொள்ளும் உடன்படிக்கை செய்து கொண்டன. ரஷ்யாவுடன் இரண்டாவது எரிவாயுக் குழாய் அமைக்க ஜெர்மனி ஒப்பந்தம் செய்து கொண்டது. புவி வெப்பமாதலை தடுக்கும் பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஒபாமா நிர்வாகம் எண்ணெய் வர்த்தகத்தின் மீதான கட்டுப்பாடு தளர்ந்ததன் விளைவாக எண்ணெயில் இருந்து மாற்று எரிபொருள் பொருளாதாரம் (Renewable) மற்றும் டிபிபி (TPP) பொருளாதார உடன்படிக்கை என மாற்று ஏற்பாடுகளை நோக்கி அமெரிக்கப் பொருளாதாரத்தை நகர்த்தியது.

இதனால் பாதிக்கப்படப்போகும் அமெரிக்க எண்ணெய் கும்பலின் எதிர்ப்பு ட்ரம்ப்பை அதிபராக்கியது. அவர் இவற்றை எல்லாம் வீசி எறிந்து எல்லா நாடுகளோடும் வர்த்தகப் போரில் ஈடுபட்டார். உலகப் பொருளாதாரம் சுணக்கம் கண்டுவந்த நிலையில் அமெரிக்கா, சீனா, ஐரோப்பா, ஜப்பான் என அனைத்து நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு தங்களின் நாணய மதிப்பைக் குறைத்தன. வர்த்தகப் போரும் பணப்போரும் நடந்து கொண்டிருந்த நிலையில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டது. அதைப் பயன்படுத்தி சீனாவைத் தாக்கி தனிமைப்படுத்த முயன்ற ட்ரம்ப் நிர்வாகம் தோல்வியைத் தழுவியது. கொரோனாவிடம் தோற்ற அமெரிக்காவின் பங்குச்சந்தையும் பொருளாதாரமும் பலத்த சேதத்தைச் சந்தித்தது. இப்போதும் இந்த பெருநிறுவனங்களின் பங்குகளை வீழ்ச்சியடைய விடாமல் ட்ரில்லியன் கணக்கில் டாலரை உற்பத்தி செய்து தாங்கி நின்றார்கள். 2008இல் இருந்து சற்று வேறுபட்டு இப்போது இந்தச் சலுகை அமெரிக்க மக்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. 2019இல் 22 ட்ரில்லியனாக இருந்த அமெரிக்க அரசின் கடன் 2022இல் 30 ட்ரில்லியனாக அதிகரித்தது.

பிரச்சினையின் மையம்

20,000 பில்லியன் டாலர் பணப்புழக்கம் இருக்கும் நிலையில் பணச்சுழற்சியின் வேகம் (Velocity of Circulation) 2.0இல்(2005) இருந்து சரிந்து இப்போது 1.2க்கும் கீழாக சரிவடைந்திருக்கிறது. இதன் பொருள், இந்தk கடன் கொடுப்பனவுப் பணம் உற்பத்தியில் ஈடுபடாமல் ஒரு சில வங்கிகள், நிதி நிறுவனங்கள், பணக்காரர்களிடமே குவிந்து கிடக்கிறது. இந்தப் பணத்தைக் கொண்டு அவர்கள் உலகப் பொருளாதாரமே முடங்கிக் கிடக்கும்போது பங்குச்சந்தை குறியீட்டு எண்களை விண்ணைத்தொட வைத்த அதிசயத்தைக் கண்டோம். விற்பனை இல்லாதபோது ஏன் இப்படி பங்கின் விலை ஏறுகிறது என்று கேட்டால் இனிவரும் நாட்களில் பொருளாதார பூகம்பம் ஏற்பட்டு, இந்த நிறுவனங்கள் பொருட்களை விற்று லாபத்தைப் பெருக்கி இப்படி முதலிட்ட பணத்துக்கும் அதிகமான வருவாயை ஈட்டித் தருவார்கள் என்கிறார்கள். இந்தியா இவர்களை வரவேற்று பங்குச்சந்தை குறியீட்டு எண்ணெய் உயர்த்தி முற்றுருமையை உருவாக்கிக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது சீனா, அந்நாட்டின் பெருநிறுவனங்களின் முற்றுருமையை உடைத்து அவற்றின் பங்குகளின் விலையை வீழச் செய்து கொண்டிருந்தது.

இதுவரையிலும் மலிவான தொழிலாளர்களையும் நாணயத்தையும் கொண்டு உற்பத்தியாகும் பொருட்களை டாலரை வாங்கிக் கொண்டு மலிவாக அளித்து வந்த சீனா, அதை நிறுத்தி தனது நாணய மதிப்பை உயர்த்தி பொருட்களின் விலையைக் கூட்டியது. இதுவரையிலும் அதிக டாலர் உற்பத்தியால் ஏற்படும் பணவீக்கத்தை உலக நாடுகளுக்கு அமெரிக்கா ஏற்றுமதி செய்துவந்தது. 2008இல் சீன மின்னணு சாதனங்களைச் சந்தைப்படுத்த அமெரிக்கா ஒப்புகை பதிலாக அது அமெரிக்கக் கடன் பத்திரங்களில் முதலீடு என்ற ஏற்பாடு அப்போது அதனை சுமுகமாக்கியது. அமெரிக்கா-சீன மோதல் நடைபெற்று வந்த சூழலில் நாணய மதிப்பை உயர்த்தி இப்போது சீனா பணவீக்கத்தை அமெரிக்காவுக்கே திருப்பி அனுப்பியது. அமெரிக்காவின் ரஷ்யா, இரானின் வெனிசுவேலாவுடனான மோதலில் அந்த நாடுகள் தங்கள் டாலர் இருப்பை கைவிட்டு மற்ற யுரோ, யுயன் நாணயங்களில் வர்த்தகம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பா இரானுடன் புதிதாக உருவாக்கிய பரிவர்த்தனை அமைப்பின்மூலம் (INSTEX) பரிவர்த்தனை செய்கிறது. உலகின் 10% எண்ணெய் தேவையை நிவர்த்தி செய்யும், 630 பில்லியன் டாலர் கையிருப்பைக் கொண்டிருக்கும் ரஷ்யா தனது டாலர் நாணயக் கையிருப்பை 46 விழுக்காட்டில் (2017) இருந்து 16 விழுக்காடாகக் (2021) குறைத்து விட்டது. அதேசமயம் சீன நாணய கையிருப்பை 0.1 விழுக்காட்டில் இருந்து 13 விழுக்காடாக அதிகரித்திருக்கிறது. உலக வர்த்தகத்தில் யுயனின் பயன்பாடு இரண்டு விழுக்காட்டுக்கும் மேலிருந்து கடந்த ஒரு வருடத்தில் மூன்று விழுக்காட்டுக்கும் மேல் அதிகரித்திருக்கிறது.

டாலரின் உற்பத்தி அதிகரித்த நிலையில் எண்ணெய்வள நாடுகள் இதை ஏற்கவும் முக்கிய உற்பத்தியாளரான சீனா இந்தச் சுழற்சியை தொடரவும் மறுத்ததன் விளைவு, அமெரிக்காவில் பணவீக்கம் ஆறு விழுக்காட்டைத் தாண்டியது. பொருட்களின் விலைகள் கிடுகிடுவென உயர்ந்தன. இதை மட்டுப்படுத்த எண்ணெய்வள நாடுகளை எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க பைடன் வேண்டுகோள் விடுத்தார். ஓபெக் நாடுகள் ரஷ்யாவுடன் இணைந்து கொண்டு மறுத்துவிட்டன. பணவீக்கத்தைக் குறைத்து, விலைவாசி உயர்வைத் தடுத்து இந்த வருட அமெரிக்க இடைக்காலத் தேர்தலை பைடன் நிர்வாகம் எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தம். இந்தத் தலைவலி தீர ஒன்று சீனாவை டாலர் இருப்பைக் கூட்டி தனது நாணய மதிப்பை டாலருடன் ஒத்திசைந்து செல்லும் வகையில் இணங்க வைக்க வேண்டும் அல்லது ரஷ்யா, இரான் உள்ளிட்ட நாடுகள் எண்ணெய் உற்பத்தியைக் கூட்டி டாலரில் விற்பனையைத் தொடர்ந்து டாலர் கையிருப்பைக் கூட்ட வேண்டும்.

என்ன செய்தது அமெரிக்கா? மதியம் 1 மணி பதிப்பில் பார்ப்போம்...

கட்டுரையாளர் குறிப்பு

பாஸ்கர் செல்வராஜ், தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் - அரசியல் - பூகோள அரசியல் - சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.

திருவாரூர் வீதிக்கு கலைஞர் பெயர்: பாஜகவுக்கு பணிந்ததா திமுக? ...

8 நிமிட வாசிப்பு

திருவாரூர் வீதிக்கு கலைஞர் பெயர்: பாஜகவுக்கு பணிந்ததா திமுக?

குவாரி கொடூரம்: பின்னணி முகம்!

5 நிமிட வாசிப்பு

குவாரி கொடூரம்: பின்னணி முகம்!

சிறப்புக் கட்டுரை: இலங்கை: பெரும்பான்மைவாதம் என்ற தேசத்தின் ...

19 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: இலங்கை: பெரும்பான்மைவாதம் என்ற தேசத்தின் புதைகுழி!

செவ்வாய் 1 மா 2022