மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 1 மா 2022

பாஜகவுக்கு எதிராக ஒற்றைக் கூட்டணி: ஸ்டாலின் அழைப்பு!

பாஜகவுக்கு எதிராக ஒற்றைக் கூட்டணி: ஸ்டாலின் அழைப்பு!

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள தன் வரலாற்று நூலான "உங்களில் ஒருவன் பாகம் - 1" நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று (பிப்ரவரி 28) நடைபெற்றது.

திமுக மாநில மகளிரணிச் செயலாளர் கனிமொழி வரவேற்புரை வழங்கிட, கேரள மாநில முதலமைச்சர் மாண்புமிகு பினராயி விஜயன், பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, கவிஞர் வைரமுத்து மற்றும் நடிகர் சத்யராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ராகுல் காந்தி நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

நூலாசிரியரான முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்புரை ஆற்றினார். அப்போது அவர்,

"கலைஞர் நிறைவுக்குப் பிறகு கோடிக்கணக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடன்பிறப்புகளின் தலைவனாக நான் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழுவில் பேசும்போது ஒரு கருத்தை நான் குறிப்பிட்டுச் சொன்னேன்.

'கலைஞர் அவர்களைப் போல எனக்கு எழுதத் தெரியாது. அவரைப் போல பேசத் தெரியாது.

ஆனால் அனைத்தையும் முயன்று பார்ப்பேன்" என்று நான் அப்போது குறிப்பிட்டேன்.

அப்படி நான் செய்த முயற்சிதான் இந்தப் புத்தகம்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் என்ற பெருமையால் அல்ல - தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற கர்வத்தால் அல்ல -

எப்போதும், என்றென்றும், எந்தச் சூழலிலும், எந்தப் பொறுப்பில் இருந்தாலும்... உங்களில் ஒருவன்தான் நான் என்பதை எந்த நாளும் இந்த ஸ்டாலின் மறக்க மாட்டான் என்பதன் அடையாளமாகத்தான் எனது வாழ்க்கை வரலாற்று நூலுக்கு 'உங்களில் ஒருவன்' என்றே பெயர் சூட்டி இருக்கிறேன்.

நீங்கள் அனைவரும் உங்களை விட உயரமான இடத்தில் கொண்டு போய் என்னை உட்கார வைத்தாலும் - நான் உங்களில் ஒருவன் தான். எனது வாழ்நாள் முழுக்க உங்களில் ஒருவனாகத்தான் நான் செயல்படுவேன் என்று உறுதி அளிக்கிறேன்.

உங்களில் ஒருவனான எனது அனுபவங்களில் சிலவற்றை இந்தச் சமுதாயத்துக்குச் சொல்லியாக வேண்டும் என்ற கடமையின் காரணமாக அவ்வப்போது சிறுசிறு பகுதிகளாக நான் எழுதிய பதிவுகளின் தொகுப்புதான் இந்தப் புத்தகம்.

23 வயது வரையில்

எனது இருபத்து மூன்று வயது வரையிலான வாழ்க்கைதான் இந்தப் புத்தகம்.

1953 ஆம் ஆண்டு மார்ச் 1 அன்று நான் பிறந்தேன். எனது பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்னராக - இந்தப் புத்தகம் பிறக்கிறது. 1976 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 அன்று மிசா சட்டத்தின் படி நான் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன். இதற்கு இடைப்பட்ட ஆண்டுகளில் நடந்த வரலாற்றுச் சுவடுகள்தான் இந்தப் புத்தகம்.

எந்தவொரு மனிதனுக்கும் முதல் 25 வயது வரையிலான காலக்கட்டம் என்பது மிகமிக முக்கியமானது. அவரது எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிப்பது அந்த வயதுதான். அவன் என்னவாக ஆகப் போகிறான் என்பதைத் தீர்மானிப்பதும் அந்த வயதுதான். எட்டு எட்டாக மனித வாழ்க்கையைப் பிரித்து எழுதிய வைரமுத்து அவர்களுக்கு இது நன்றாகத் தெரியும். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள். ஆமாம், நான் அரசியல் பயிராகத்தான் வளர்ந்தேன் என்பதை இந்தப் புத்தகத்தைப் படிப்பதன் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம்.

இயல்பாக இருப்பதே என் சாகசம்

பிற்காலத்தில் தான் என்னவாக ஆக வேண்டும் என்பதை மிகச் சிறுவயதில் ஒருவன் தீர்மானித்து விட்டால் -

அதில் இருந்து இம்மியளவும் விலகாமல் பயணித்தால் -

அந்த இலக்கை நிச்சயம் அடைந்தே தீருவான் என்பதற்கு அடையாளம்தான் நான். அத்தகைய அடையாளங்களின் தொகுப்பு தான் இந்த நூல்.

அந்த இலக்கை அடைவதற்கு நான் எந்த சாகசங்களும் செய்யவில்லை. சாகசங்கள் செய்யத் தேவையுமில்லை. நான் என்னுடைய இயல்பிலேயே இருந்தேன். என்னுடைய இயல்பே என்னை இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. தலைவர் கலைஞர் அவர்கள் ஒருமுறை சொன்னார்கள் - 'நான் பக்குவப்பட்ட காலத்தில் பிறந்தவன் ஸ்டாலின். அது அவனது இயல்பிலேயே தெரியும்' என்று சொன்னார்கள். அத்தகைய பக்குவம் சிறுவயதிலேயே - எனக்கு இருந்தது என்பதை இந்த புத்தகத்தின் மூலமாக நீங்கள் அறியலாம்.

சாதாரணமாக ஒரு இளைஞரின் வாழ்க்கையில் நடக்காத , பார்க்காத, கேள்விப்படாத, காட்சிகள் அனைத்தும் எனது வாழ்க்கையில் நடந்ததும் காரணமாக இருக்கலாம். நான் ஐந்து மாதக் குழந்தையாக தவழ்ந்து கொண்டு இருந்தபோது தலைவர் கலைஞர் அவர்கள் திருச்சி சிறையில் இருந்தார்கள்! கைக்குழந்தையாகத் தூக்கிக் கொண்டுதான் தயாளு அம்மாள் அவர்கள் என்னைக் கொண்டு போய் திருச்சி சிறையில் இருந்த தலைவர் கலைஞருக்கு காட்டினார்கள். நான் 12 வயது பையனாக இருந்தபோது மொழிப்போராட்டத்தில் ஈடுபட்டதற்காக தேசப்பாதுகாப்புச் சட்டப்படி தலைவர் கலைஞர் அவர்கள் கைது செய்யப்படுகிறார்.

முரசொலி மாறன் அவர்களும் கைது செய்யப்படுகிறார்கள். கல்லூரிப் படிப்பை முடித்ததும் - நான் மிசாவில் கைதாகிறேன். கோபாலபுரம் வீட்டின் ஓர் அறையாகத்தான் சிறை இருந்தது. அதுதான் என்னைச் செதுக்கியது. கோபாலபுரம் வீடு தமிழ்நாட்டின் நிரந்தரமான அரச சபை. திராவிட இயக்கத்தின் திருச்சபை. திரையுலகக் கலைஞர்களுக்கு கலைச்சபை. இலக்கியவாதிகளுக்கு சிந்தனைச் சபை. மொத்தத்தில் எங்கள் உயிர்ச்சபை. அந்த உயிர்சபை தான் என்னை உருவாக்கியது. அந்த வீடு என்னை வளர்த்தது – ஆளாக்கியது - பக்குவப்படுத்தியது - பண்படுத்தியது. பல்வேறு பொறுப்புகளுக்கு என்னைத் தகுதிப்படுத்தியது. அந்த வகையில் பார்த்தால், இந்தப் புத்தகம் அந்த வீட்டின் வரலாறு! பள்ளிப் பருவத்தில் கழகப்பாடம் படித்த வரலாறு!

பாடப்புத்தகங்களோடு சேர்த்து முரசொலி படித்த வரலாறு! கல்லூரிக் காலத்தில் அரிதாரம் பூசி முரசே முழங்கு நாடகம் போட்ட வரலாறு! படித்து முடித்து பணிக்குச் செல்ல விரும்பாமல் மொழிக்கு உயிரைத் தரத் தயார் என முழங்கிய வரலாறு!

திரையுலகில் கால் பதித்த வரலாறு! 23 வயதில் துர்க்காவை கரம்பிடித்த வரலாறு! திருமணமான ஐந்து மாத காலத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட வரலாறு! இப்படி எல்லாத் திருப்பங்களும் 23 வயதுக்குள் பார்த்தவன் நான். அதைத்தான் எழுதி இருக்கிறேன். புத்தகத்தில் உள்ளதை அதிகம் சொல்லிவிடக் கூடாது என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

திராவிட மாடல்

எனது தத்துவம் என்பதற்கு 'திராவிட மாடல்' என்று பெயர். 'மாடல்' என்பது ஆங்கிலச் சொல்தான். அதைத் தமிழில் சொல்வதாக இருந்தால் 'திராவிடவியல் ஆட்சிமுறை'தான் எனது கோட்பாடு. அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் என்னுடைய கோட்பாட்டு நெறிமுறை ஆகும். கல்வியில் - வேலைவாய்ப்பில் - தொழில் வளர்ச்சியில் - சமூக மேம்பாட்டில் - இந்த நாடு ஒரு சேர வளர வேண்டும். அந்த வளர்ச்சி என்பது அனைத்து சமூகங்களையும் மேம்படுத்துவதாக அமைய வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தின் வளர்ச்சியாக இல்லாமல் - அனைத்து மாவட்டங்களும் சீராக வளர வேண்டும். வளர்த்தெடுக்கப்பட வேண்டும். பால் பேதமற்ற - ரத்தபேதமற்ற சமூகமாக நமது சமூக மனோபாவம் மாற வேண்டும். 'எல்லார்க்கும் எல்லாம்' என்பதே இந்த திராவிடவியல் கோட்பாடு ஆகும்.

அனைத்து தேசிய இனங்களுக்கும் சரிநிகர் உரிமை தரப்பட வேண்டும் என்பதுதான் திராவிடவியல் கோட்பாடு. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் ஆகும். அதைத்தான் அரசியல் அமைப்புச் சட்டமும் சொல்கிறது. அனைத்து மாநிலங்களும் அதிக அதிகாரம் கொண்ட சுயாட்சித் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். இந்த மாநிலங்களின் ஒன்றியமான இந்திய அரசானது கூட்டாட்சி முறைப்படி செயல்பட வேண்டும் என்பதுதான் திராவிடவியல் கோட்பாடு.

இந்த திராவிடவியல் கோட்பாட்டை, தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் ராகுல்காந்தி அவர்களும், பினராயி விஜயன் அவர்களும், உமர் அப்துல்லா அவர்களும், தேஜஸ்வீ அவர்களும் இங்கே அழைக்கப்பட்டுள்ளார்கள்.

திராவிட மாடலை உள்வாங்கிய ராகுல்

இந்திய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் எழுந்து நின்று அருமைச் சகோதரர் ராகுல்காந்தி, “India is a union of states” என்றும்; “BJP can never ever rule over the people of Tamil Nadu” என்றும் பேசியது, அவர் திராவிடவியல் கோட்பாட்டை முழுமையாக அவர் உள்வாங்கியவர் என்பதை உணர்த்துகிறது. இத்தகைய மனமாற்றத்தை அகில இந்தியத் தலைவர்கள் அடைய வேண்டும் என்றுதான் பேரறிஞர் அண்ணா அவர்களும்; முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் விரும்பினார்கள். அவர்கள் காலத்தில் அடைய முடியாத மாற்றம் இப்போது தெரியத் தொடங்கி இருக்கிறது.

கூட்டாட்சித் தத்துவத்தின் நெறிமுறைகள் குறித்து சகோதரர் ராகுல்காந்தி அவர்கள் அதிகம் பேசத் தொடங்கி இருப்பதற்கு நான் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசியல் அமைப்பு சட்டம் திருத்தப்பட வேண்டும்

மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கொண்ட வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும். அதற்கு அகில இந்தியக் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும் - அனைத்து மாநிலக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்.

நிதி உரிமைகள் பறிக்கப்பட்டு - சிந்தனை உரிமைகள் பறிக்கப்பட்டு - செயல்படும் உரிமைகள் பறிக்கப்பட்டு - இன்றைய தினம் மாநிலங்கள் அதிகாரமற்ற பகுதிகளாக உருக்குலைக்கப்படுவதை தடுத்தாக வேண்டும். அதற்கு இந்தியா முழுமைக்குமான அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து செயல்பட்டாக வேண்டும்.

மாநிலங்களின் அதிகாரங்கள் ஒவ்வொன்றாக பறிபோவதன் காரணமாக - அந்த மாநில மக்களின் அனைத்து அரசியல் உரிமைகளும் பறிக்கப்படுகிறது. அதனை அனைத்துக் கட்சிகளும் உணர்ந்துள்ளன. 'மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி' என்பது இந்தியா முழுமைக்குமான முழக்கமாக மாறிவிட்டது. அதைத்தான் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் எதிரொலித்தார்.

சட்ட ஆட்சியோடு சமூக நீதி ஆட்சி

அதேபோல், இது சட்டத்தின் ஆட்சியாக மட்டுமில்லாமல் - சமூகநீதியின் ஆட்சியாக மாற்றப்பட வேண்டும். இதற்காக அகில இந்திய அளவிலான சமூகநீதிக்கூட்டமைப்பை திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் உருவாக்கி, அனைத்து அகில இந்தியக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறேன். இத்தகைய திராவிடவியல் கோட்பாட்டை இந்தியா முழுமைக்கும் விதைப்பதை எனது பணியாக மேற்கொள்வேன் என்பதை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக உறுதி அளிக்கிறேன். அந்த வகையில் எனது அரசியல் வாழ்க்கையின் திருப்புமுனையாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.

பிரிவினை சக்திகளுக்கு எதிராக ஒற்றுமை

இங்கே வந்திருக்கும் ஒவ்வொரு தலைவருக்கும் உங்களுடைய மதிப்பு மிக்க வருகையால் இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் இதுவரையிலான என்னுடைய வாழ்வை பொதுப் பணிக்காகவே அர்ப்பணித்து உள்ளேன். எஞ்சி இருக்கும் வாழ்நாளையும் மக்களுக்காகவே செலவிடுவேன்.

என்னுடைய உரையை நிறைவு செய்யும் முன்.... இந்த மேடையில் இருக்கும் தலைவர்களுக்கு மட்டுமல்ல, நாட்டின் மதசார்பற்ற மதிப்பீடுகளில் நம்பிக்கை வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.

இந்திய ஒன்றியம் தற்போது பிரித்தாளும் சக்திகளால் பெரும் அபாயத்தை எதிர் கொண்டுள்ளது. அந்த பிரிவினை சக்திகளை தோற்கடித்து இந்தியாவின் அடிப்படை கோட்பாடுகளை காப்பதற்காக நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒருங்கிணைய வேண்டும்.

உங்களால் உருவாக்கப்பட்டவன் நான். உங்களால் வளர்த்தெடுக்கப்பட்டவன் நான். என்றும் உங்களில் ஒருவனே என்பதைச் சொல்லி விடைபெறுகிறேன்" என உரையாற்றினார் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின்.

தற்போது ஆளும் பாஜகவுக்கு எதிராக 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், மாநிலக் கட்சிகள் உள்ளிட்ட அனைவரும் ஒற்றுமையாக ஒரே அணியில் நிற்க வேண்டும் என்பதுதான் மு.க.ஸ்டாலின் விடுத்திருக்கும் பிறந்தநாள் செய்தி.

வேந்தன்

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

செவ்வாய் 1 மா 2022