மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 28 பிப் 2022

‘என் அண்ணன் ஸ்டாலின்’: புத்தக வெளியீட்டு விழாவில் ராகுல்

‘என் அண்ணன் ஸ்டாலின்’: புத்தக வெளியீட்டு விழாவில் ராகுல்

முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எழுதிய தன் வரலாற்று நூலான ‘உங்களில் ஒருவன்’ புத்தக வெளியீட்டு விழா நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த விழாவுக்காக வருகை தந்த ராகுல் காந்தியை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவரும், பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஓமர் அப்துல்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திக தலைவர் கி.வீரமணி, தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், உதயநிதி எம்.எல்.ஏ உள்ளிட்டோரும் பங்கேற்றனர். திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமையில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து கனிமொழி எம்.பி வரவேற்புரையாற்றினார். ‘கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி’ என்ற திருக்குறளுடன் கனிமொழி எம்.பி தனது வரவேற்பு உரையை தொடங்கினார். ராகுல்காந்தி உள்ளிட்ட அனைத்து தலைவர்களையும் வரவேற்றுப் பேசினார்.

பின்னர் மேடையிலிருந்த தேஜஸ்வி யாதவ், டி.ஆர்.பாலு, நடிகர் சத்யராஜ், கனிமொழி உள்ளிட்டோருக்குப் பொன்னாடை போர்த்திச் சிறப்பு செய்தார் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்.

இதையடுத்து, உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழா மேடையில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் இல்லம் போன்ற மாதிரி வீடு கொண்டு வந்து வைக்கப்பட்டது.

அந்த மாதிரி வீட்டிலிருந்து உங்களில் ஒருவன் புத்தகத்தை எடுத்து ராகுல் காந்தி வெளியிட்டார். அதனை அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார்.

விழாவில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “நான் என்னுடைய அண்ணன் மு.க.ஸ்டாலினை, ஒரு அருமையான புத்தகத்தை வழங்கியதற்காகப் பாராட்டுகிறேன். அவரது வாழ்க்கை நீண்ட நெடிய போராட்டம். பல ஆண்டுகளாக அந்த போராட்டத்தில் அவர் ஈடுபட்டுள்ளார். தமிழ்நாட்டு மக்களுக்காக அவர் ஏராளமான நன்மைகளைச் செய்து வருவதற்காக நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

நேற்று என் அம்மா என்னை அழைத்து நாளை மு.க.ஸ்டாலினுக்குப் பிறந்தநாள் என்றார். எனக்குத் தெரியும் என்று சொல்லிவிட்டு அவருக்கு எத்தனை வயது என்று தெரியுமா என்று கேட்டேன். அதற்கு அவர் தெரியாது என்றார். 69 என்றேன். இதற்கு சாத்தியமே இல்லை என்றார்.

உடனே எவ்வளவு வயது இருக்கும் என்று கேட்டேன். அதற்கு 50-60க்குள்ளாகத்தான் இருக்கும் என்றார். அதன்பிறகு அவர், முதல்வர் ஸ்டாலினின் வயதைக் கூகுள் செய்து பார்த்து ஒத்துக்கொண்டார். மு.க.ஸ்டாலின் இவ்வளவு இளமையாக இருப்பது குறித்து அவர் மற்றொரு புத்தகத்தை எழுத வேண்டும்.

தமிழகத்துக்கு வருவது எனக்கு எப்போதுமே மகிழ்ச்சித் தரும். இதை அடிமனதிலிருந்து நான் கூறுகிறேன். என்னை அறியாமலேயே பலமுறை தமிழ்நாட்டைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறேன். ஒருமுறை நாடாளுமன்றத்திலிருந்து வெளியே வந்த சமயத்தில் ஒரு பத்திரிகையாளர் கேட்ட போதுதான் அதை உணர்ந்தேன். அப்போதுதான் “நானும் தமிழனே” என்றேன்.

பிறகு ஏன் அப்படி சொன்னேன் என்று யோசித்தேன். நான் தமிழ்நாட்டில் பிறக்கவில்லை, தமிழ் பேசவில்லை. 3000 ஆண்டுகள் பழமையானது தமிழ்மொழி. தமிழர்களின் நாகரிகம் பற்றி தெரிந்துகொள்ளக் கூட முற்படவில்லை என்று நானே எனக்குள்ளே கேள்வி கேட்டுக்கொண்டேன். நான் எப்படி தமிழன் என்ற உரிமையை எடுத்துக்கொண்டேன். பின்னர்தான் நான் உணர்ந்தேன்.

ஏனென்றால் என்னுடைய ரத்தம் இந்த மண்ணில் கலந்திருக்கிறது. எனது தந்தையை இழந்தது என்பது மிக வேதனையான அனுபவம். அந்த சோகமான அனுபவத்தை திருப்பி திருப்பி நினைத்துப் பார்த்தேன். அதன் பிறகுதான் உணர்ந்தேன். தமிழன் என்று அழைத்துக்கொள்ள அனைத்து உரிமைகளும் எனக்கு இருக்கிறது” என்று தொடர்ந்து பேசினார்.

-பிரியா

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

3 நிமிட வாசிப்பு

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

4 நிமிட வாசிப்பு

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

4 நிமிட வாசிப்பு

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

திங்கள் 28 பிப் 2022