மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 28 பிப் 2022

இந்தியாவே எதிர்நோக்கும் 'உங்களில் ஒருவன்'!

இந்தியாவே எதிர்நோக்கும் 'உங்களில் ஒருவன்'!

கலைஞர் என்றாலே அவருடைய அரசியல் தொண்டர்களுக்கும் இலக்கிய ஆர்வலர்களுக்கும் அபிமானிகளுக்கும் ஒருசேர நினைவுக்கு வருவது 'நெஞ்சுக்கு நீதி' என்ற பெயர்தான்.

நெஞ்சுக்கு நீதி என்ற தலைப்பில் தன்னுடைய வாழ்க்கையை புத்தகங்களாக எழுதியவர் கலைஞர்.

அவருடைய அடிச்சுவட்டில் திமுகவில் சாதாரண தொண்டராக இணைந்து மாணவர் திமுக, இளைஞர் திமுக, அவசர நிலையில் மிசா சிறை கொட்டடி என அனைத்தையும் அனுபவித்து நீண்டகால அரசியல் வரலாற்றை பெற்று இன்றைக்கு முதல்வராக இருக்கிறார் மு. க. ஸ்டாலின்.

கலைஞரின் நெஞ்சுக்கு நீதியை போலவே முக ஸ்டாலின் தனது வாழ்வியலை சுயசரிதை நூலாக எழுதி அதற்கு, 'உங்களில் ஒருவன்' என தலைப்பிட்டுள்ளார்.

அந்த நூலின் முதல் பாகம் இன்று பிப்ரவரி 28 ஆம் தேதி காங்கிரஸ் முன்னோடி தலைவர் ராகுல் காந்தியால் வெளியிடப்படுகிறது.

நாளை மார்ச் 1ஆம் தேதி ஸ்டாலினுடைய 69 ஆவது பிறந்த நாள் வருகின்ற நிலையில் உள்ளாட்சித் தேர்தல் வெற்றி, ஸ்டாலினின் சுயசரிதை வெளியீட்டு விழா,. பிறந்தநாள் விழா முப்பெரும் கொண்டாட்டத்தில் இருக்கிறது திமுக.

உங்களில் ஒருவன் நூலை வெளியிட இன்று பகல் சென்னைக்கு வருகிறார் ராகுல் காந்தி.

பிற்பகல் 3.30 மணிக்கு நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் நடக்கும் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டு உரையாற்றுகிறார். தொடர்ந்து மாலை 6 30 க்கு

ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் பிரதிநிதிகளை தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் சந்திக்கிறார் ராகுல் காந்தி.

'உங்களில் ஒருவன்' என்ற திமுக தலைவரும் முதல்வருமான மு. க. ஸ்டாலின்தனது சுயசரிதை நூல் குறித்து தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில்,

"என்னுடைய பிறந்தநாளில் நான் உங்களுக்கு வழங்கும் அன்புப் பரிசாக - நன்றிப் பரிசாக ‘உங்களில் ஒருவன்’ என்கிற தன் வரலாற்றுப் புத்தகத்தின் முதல் பாகத்தை வெளியிடுகிறேன். நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரும் அன்னை தயாளு அம்மையாரும் ஈன்றெடுத்த புதல்வனாகவும், தலைவரின் மடி தவழ்ந்து - அவர் விரல் பிடித்து வளர்ந்த தொண்டனாகவும், அரை நூற்றாண்டுகால அரசியல் பயணத்தை மேற்கொண்டு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை இயற்கை நம்மிடமிருந்து சதி செய்து பிரித்தபிறகு, இயக்கத்தைக் காக்க வேண்டிய பொறுப்பைச் சுமந்த தலைவனாகவும், மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்ற முதலமைச்சராகவும், 68 ஆண்டுகளைக் கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது என் வாழ்க்கைப் பயணம்.

பதவிகளை மட்டுமல்ல, சிறைகளையும் சந்தித்தவன்; சித்திரவதைகளை அனுபவித்தவன்; போராட்டக் களங்களைக் கண்டவன். ஏச்சுகள், ஏளனங்கள், அவமதிப்புகள், புறக்கணிப்புகள் என எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு, இயக்கத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டு, இளைஞரணியை வளர்த்தெடுத்து, வெற்றியிலும் தோல்வியிலும் மக்களுக்கான பணியைத் தொடர்ந்து கொண்டிருப்பவன். எனக்குத் தெரிந்ததெல்லாம் உழைப்பு, உழைப்பு, உழைப்பு; வேறேதும் இல்லை.அதுதான், முத்தமிழறிஞர் கலைஞரிடம் நான் பெற்ற நற்சான்றிதழ். அந்த நற்சான்றிதழுக்குத் தமிழ்நாட்டு மக்கள் ஒப்புதலுடன் சூட்டிய வெற்றி மகுடம்தான் இந்த முதலமைச்சர் பொறுப்பு. அந்தப் பொறுப்பை ஏற்ற பிறகும் உழைக்கிறேன்; அனுதினமும் உழைக்கிறேன்; மேலும் மேலும் உழைக்கிறேன்.

உங்களில் ஒருவனான என்னுடைய வாழ்க்கைப் பயணத்தில், நான் பிறந்த 1953-ஆம் ஆண்டு முதல், நெருக்கடி நிலைக்காலத்தில் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 1976-ஆம் ஆண்டு வரையிலான முதல் 23 ஆண்டுகால வாழ்க்கையை ‘உங்களில் ஒருவன்’ என்ற மனதுக்கு நெருக்கமான தலைப்பிலேயே புத்தகமாகப் பதிவு செய்திருக்கிறேன்.

என் சிறு வயது எண்ணங்கள், பள்ளிக்கால நினைவுகள், தலைவர் கலைஞரின் அன்பில் திளைத்த தருணங்கள், அரைக்கால் சட்டைப் பருவத்தில் இருவண்ணக் கொடியேந்தி இயக்கத்திற்காக இயங்கத் தொடங்கிய ஏற்றமிகு பொழுதுகள் உள்ளிட்ட அனுபவங்களை இதில் பதிவு செய்திருக்கிறேன்.

நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் இந்தப் புத்தக வெளியீட்டு விழாவிற்கு 1500-க்கும் அதிகமானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், பங்கேற்கும் தலைவர்களின் பாதுகாப்புச் சூழல் காரணமாக, கழக உடன்பிறப்புகள் அனைவரையும் நேரடியாக அழைக்க முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்குள் இருக்கிறது.

எங்களில் ஒருவன் வெளியிடும் உங்களில் ஒருவன் புத்தகத்திற்கு நாங்கள் வர இயலாதா எனக் கேட்கும் அன்பு உடன்பிறப்புகளுக்காக, நேரலை வாயிலாக அந்த விழா நிகழ்வுகள் ஒளிபரப்பாக இருக்கின்றன. அவரவர் இடத்திலிருந்தும், ஆங்காங்கு உள்ள கழக அலுவலகங்களில் கூடியும் இந்த நிகழ்வைக் கண்டு களித்திட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

ஆனபோதும் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தை நோக்கி திமுகவினர் பலர் திரண்ட வண்ணம் இருக்கிறார்கள். இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்ட கருத்துக்களையும் இந்த புத்தக வெளியீட்டு விழாவில் சொல்லப்பட இருக்கும் கருத்துக்களையும் எதிர்பார்த்து காத்திருக்கிறது இந்தியா.

ஆரா

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை! ...

3 நிமிட வாசிப்பு

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை!

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ...

5 நிமிட வாசிப்பு

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ஆதீனம்!

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

4 நிமிட வாசிப்பு

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

திங்கள் 28 பிப் 2022