மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 26 பிப் 2022

ஜெயக்குமார் சந்திப்பு: சசிகலா-எடப்பாடி-பன்னீர் முக்கோண பரபரப்பு!

ஜெயக்குமார் சந்திப்பு: சசிகலா-எடப்பாடி-பன்னீர் முக்கோண பரபரப்பு!

தற்போது கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை பிப்ரவரி 24ஆம் தேதி காலை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி சிறைக்குச் சென்று சந்தித்து பேசினார். அப்போது அவருடன் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியும் இருந்தார்.

பிப்ரவரி 24ஆம் தேதி காலை பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் சென்னையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார்கள்.

அந்த விழாவை முடித்துவிட்டு வேகவேகமாக புழல் சிறைக்கு சென்று ஜெயக்குமாரை சந்தித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர்செல்வம் ஏன் சிறைக்கு சென்று ஜெயக்குமாரை சந்திக்கவில்லை என்ற கேள்வி அதிமுக வட்டாரத்தில் கடந்த இரண்டு நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது.

இதற்கு விடை தேடி விசாரித்தபோதுதான் ஜெயக்குமாரை சசிகலா, பன்னீர், எடப்பாடி ஆகியோர் சந்திக்க முயற்சித்த பின்னணி பற்றிய பரபரப்பு தகவல்கள் கிடைத்தன.

"உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்த நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு இருந்த பிடிமானம் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும் என எதிர்பார்க்கிறார் சசிகலா.

இந்த நேரத்தில் தன்னை தீவிரமாக எதிர்த்து வந்த ஜெயக்குமார் கைது செய்யப்பட்ட நிலையில்... அவரை சிறைக்கு சென்று சந்திக்க முடிவு செய்கிறார் சசிகலா. இதன் மூலம் தனக்கு தனி நபர்களை விட கட்சி தான் முக்கியம் என்ற கருத்தை அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட மற்ற நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் ஏற்படுத்த முயல்கிறார். இதன் முன்னோட்டமாக சசிகலாவின் தரப்பில் சிலர் சிறைக்குச் சென்று ஜெயக்குமாரை சந்தித்து, 'சின்னம்மா தங்களை சிறைக்குள் வந்து சந்திக்க விரும்புகிறார்' என்று தகவல் தெரிவித்துள்ளார்கள். ஆனால் ஜெயக்குமாரோ இப்போதைக்கு தன்னால் எந்த குழப்பமும் வந்துவிட வேண்டாம் என்றும் அவர்கள் என்னை சந்திக்க விரும்பியதற்கு நன்றி என்றும் சொல்லி அனுப்புகிறார்.

சசிகலா சிறைக்குச் சென்று ஜெயக்குமாரை சந்திக்க முயற்சிக்கிறார் என்ற தகவல் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிய வந்ததும்... பிப்ரவரி 24ஆம் தேதி ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சி முடித்துவிட்டு நேராக சேலம் திரும்பும் திட்டத்தில் இருந்தவர் திடீரென வேலுமணியை அழைத்துக்கொண்டு புழல் சிறைக்கு சென்று ஜெயக்குமாரை சந்தித்துள்ளார்.

இதற்கிடையே ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட போதே... பன்னீர்செல்வம் எடப்பாடியிடம், 'சிறையிலிருக்கும் ஜெயக்குமாரை நாம் சென்று சந்தித்து வரவேண்டும்' என்று சொல்லியிருக்கிறார். அதற்கு எடப்பாடி பழனிச்சாமி, சேலத்துக்கு செல்வதாக சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

ஆனால் பன்னீர் கேட்டும் அவரோடு செல்லாமல் வேலுமணியோடு சென்று ஜெயக்குமாரை சந்தித்த தகவலறிந்து பன்னீர்செல்வம் கோபமாகி விட்டார் என்கிறார்கள்.

இதனை அதிமுகவின் முன்னாள் ஐடி விங் நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சிறையில் இருக்கும் ஜெயக்குமாரை சசிகலா தனக்கு முன்னால் சந்தித்துவிட போகிறாரோ என்ற அவசரத்தில் பன்னீரிடம் கூட சொல்லாமல் அவசரமாக சென்று சந்தித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

இந்த சம்பவமே அதிமுகவுக்குள் தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு சாம்பிளாக இருக்கிறது.

வணங்காமுடி வேந்தன்

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

சனி 26 பிப் 2022