உக்ரைன் மண்ணை பெண்களும் காப்பார்கள்: பெண் எம்.பி!

politics

ஆண்களைப் போலவே பெண்களும் உக்ரைன் மண்ணைக் காப்பார்கள் என்று உக்ரைன் எம்.பி. கிரா ருடிக் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் மூன்றாவது நாளாக போர் நடந்து வருவதால், தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. உக்ரைனுக்குள் நுழைந்துள்ள ரஷ்யப் பெரும் படைகள், தலைநகர் கீவ்வைக் கைப்பற்ற முன்னேறி வருகின்றன. கீவ் நகரில் உள்ள உயரமான அடுக்குமாடி குடியிருப்பின் மீது ரஷ்ய படை ஏவுகணை கொண்டு தாக்கியது.

இந்த நிலையில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி, “உக்ரைன் தலைநகரை கைப்பற்ற நினைக்கும் ரஷ்யப் படைகளின் திட்டத்தை உக்ரைன் ராணுவம் முறியடித்து வருகிறது. தலைநகர் கீவ் இன்னும் எங்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. தலைநகர் கீவ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் உக்ரைன் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. போரை நிறுத்தும்படி ரஷ்ய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் ரஷ்யர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களது தாய்நாட்டை காப்பாற்ற என்ன வேண்டுமானாலும் செய்வோம். ரஷ்யாவிற்கு எதிராக போராட துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வழங்க தயாராக இருக்கிறோம். நாட்டிற்காக யாராவது போராட விரும்பினால், அவர்கள் முன்வந்து ஆயுதங்களை வாங்கிக்கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.

தற்போது, உக்ரைன் பெண் எம்.பி கிரா ருடிக், கலாஷ்னிகோவ் துப்பாக்கியுடன் போஸ் கொடுக்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து எம்.பி.கிரா ருடிக் ட்விட்டரில், “நான் ஆயுதங்களை ஏந்திக் கொள்ள கற்றுக்கொள்கிறேன். சில நாட்களுக்கு முன்புவரை அது என் நினைவுக்கு வரவே இல்லை. உக்ரைன் நாட்டில் ஆண்களைப் போலவே பெண்களும் நம் மண்ணைக் காப்பார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து ஆங்கில சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த எம்.பி.கிரா ருடிக், “முதல் முறையாக ஆயுதங்களை கையில் ஏந்தியிருக்கிறேன். உக்ரைனில் போர் தொடங்கியதிலிருந்து நான் மிக அதிகமான கோபத்தில் இருக்கிறேன். அண்டை நாடான ரஷ்யா மற்றும் புதினும், நாங்கள் உக்ரைனில் இருப்பதற்கான உரிமையை எப்படி மறுக்க முடியும்? என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. நானும், எனது குடும்பமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறோம். அதனால், என்னை போன்று பலரும் தங்கள் கைகளில் ஆயுதத்தை ஏந்தியுள்ளனர். ரஷ்யர்களை எதிர்த்துப் போராடும் ஒரு எதிர்ப்புக் குழுவை உருவாக்கிக் கொண்டு இருக்கிறேன். ரஷ்ய படைகளை எங்கள் மண்ணிலிருந்து அவர்கள் வந்த இடத்திற்குத் திரும்ப அனுப்ப வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *