குண்டர் சட்டத்தில் ஜெயக்குமார்?

politics

அதிமுகவின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் மீது 3வது வழக்கு நேற்று பிப்ரவரி 25ஆம் தேதி தொடுக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி19 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தினத்தன்று திமுக தொண்டர் மீது கும்பல் வன்முறை நடத்தியதாக ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அதே தினத்தன்று தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி சாலை மறியல் செய்ததாகவும் போடப்பட்ட வழக்கில் அவர் இரண்டாவது முறை கைது செய்யப்பட்டார்.
ஜாமீன் மனு முயற்சியில் இறங்கிய ஜெயக்குமார் மீது அந்த மனு விசாரணைக்கு வந்தபோதே.. கொலை முயற்சி வழக்கும் சேர்க்கப்பட்டு ஜாமீன் முயற்சிக்கு தடை விதித்தது போலீஸ் தரப்பு.

இந்த நிலையில், அடுத்தடுத்து வழக்குகள், ஜெயக்குமாருக்கு அதிகரிக்கும் சட்ட நெருக்கடி என்ற தலைப்பில் பிப்ரவரி 25ஆம் தேதி மின்னம்பலத்தில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். அதில், ‘ஜெயக்குமார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளார்கள்’ என்று தெரிவித்திருந்தோம்.
.
அதன்படியே ஜெயக்குமார் மீது 3-வது வழக்கு பாய்ந்துள்ளது.

சென்னை துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் மகேஷ் என்பவர்தான் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஜெயக்குமார் மீது புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில், “நான் சென்னை துரைப்பாக்கம் பகுதியில் மீன்பிடி வலை தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தேன். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகன் நவீன்குமாருடன் பார்ட்னர்ஷிப் என்ற முறையில் அந்த ஆலையை நடத்தி னேன். எனக்கு சொந்தமான 8 கிரவுண்டு நிலத்தில் அந்த ஆலை அமைந்துள்ளது. 2016 இல் ஜெயக்குமார் ஆட்சி அதிகாரத்தில் இருந்ததைப் பயன்படுத்தி அவரது மருமகன் நவீன் குமார் இந்த ஆலையை என்னிடமிருந்து அபகரித்துக் கொண்டார். அதன்பின் ஆலையை மூடி விட்டு தனது மனைவியான அதாவது ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியா வின் பெயரில் கும்மிடிப்பூண்டியில் இதே போன்ற ஒரு ஆலையை அமைத்து விட்டார்.

இந்த அபகரிப்பு பின்னணியில் அப்போதைய அமைச்சர் ஜெயக்குமார் தான் இருந்துள்ளார். எனது தொழிற்சாலையை மீட்டு தருவதோடு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவரது மருமகன் நவீன் குமார், ஜெயப்பிரியா ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மகேஷ் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார், அவரது மருமகன் நவீன்குமார், மகள் ஜெயபிரியா ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 சட்டப் பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜெயக்குமார் நேற்று கைது செய்யப்பட்டார்.

“ஜெயக்குமார் மீது முதலில் தொடுக்கப்பட்ட இரு வழக்குகளும் சாதாரணமானவைதான். ஆனால் அதில் ஒரு வழக்கில் கொலை முயற்சி பிரிவு பின்னர் சேர்க்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்துள்ள இந்த வழக்கு மேலும் வலிமையானதாக பார்க்கப்படுகிறது.
கடந்த பத்தாண்டுகளில் ஜெயக்குமார் மீது புகார் தரப் பட்டு வழக்கு பதிவு செய்யப்படாத விவகாரங்களை தூசி தட்டி வருகிறது போலீஸ்.

இந்த வழக்குகள் வரிசையில் அடுத்து இளம்பெண் சிந்து ஏமாற்றப்பட்ட விவகாரமும் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது.
இன்னும் சில வழக்குகள் தொடரப்பட்டு ஜெயக்குமார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படவும் வாய்ப்பிருப்பதாக
அரசியல் வட்டாரத்தில் கூறுகிறார்கள். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டால் ஒரு வருடம் வரை ஜாமினில் வெளியே வர முடியாது.
அதேநேரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி வழக்குத் தொடுத்து அது விசாரணை செய்யப்பட்டு ஒருவேளை குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டாலும் சில மாதங்களாவது ஜெயக்குமார் சிறையில் இருக்க வேண்டி வரும். அப்படி ஒரு திட்டத்தை தான் இப்போது போலீசார் தீட்டி வருகிறார்கள். அதற்காகத்தான் ஜெயக்குமார் மீது அடுக்கடுக்கான புகார்கள் ஆராயப்பட்டு அடுத்தடுத்து வழக்குகள் பதியப்படுகின்றன” என்கிறார்கள் வழக்கறிஞர்கள் வட்டாரத்தில்.

**வேந்தன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *