மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 பிப் 2022

உக்ரைனில் குண்டு மழை: 137 பேர் பலி!

உக்ரைனில் குண்டு மழை: 137 பேர் பலி!

ரஷ்யா உடனான முதல் நாள் போரில் 137 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக உக்ரைன் எல்லைகளில் ராணுவப் படையைக் குவித்திருந்த ரஷ்யா நேற்று காலை முதல் தாக்குதலைத் தொடங்கியது.

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை எடுக்க உத்தரவிட்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தப் போரில் வேறு எந்த நாடாவது தலையிட்டால் வரலாற்றில் கண்டிராத விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்திருந்தார்.

இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடங்கி இருப்பதால் உலகப் பொருளாதாரம் பாதிக்கும் என பல நாடுகள் கவலை தெரிவித்திருந்தன. போரை நிறுத்தி ரஷ்யப் படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

எனினும் ரஷ்யா உக்ரைனில் பல்வேறு இடங்களில் நேற்று சரமாரி தாக்குதல் நடத்தி இருக்கிறது. உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்குச் சற்று வெளியே உள்ள அண்டனோவ் சர்வதேச விமான நிலையத்தின் மீது ரஷ்யா தாக்குதலை நடத்தியது. அங்கு ரஷ்யாவுக்குச் சொந்தமான mi-8 ரக ஹெலிகாப்டர்கள் அதிக அளவில் வந்து சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுபோன்று உக்ரைன் விமானப் படையின் 11 விமான நிலையங்கள், 3 கட்டளை சாவடிகள் என உக்ரைனுக்குச் சொந்தமான 74 ராணுவக் கட்டமைப்புகள் ரஷ்யாவால் செயல் இழக்கச் செய்யப்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பு கூறுகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை ரஷ்யா நடத்தியிருப்பதாக உக்ரைன் எல்லை பாதுகாப்புப் படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக கீவ் உள்ளிட்ட பகுதிகளில் எங்குப் பார்த்தாலும் ஏவுகணை தாக்குதலும், குண்டு வீசுதலும் அதிக அளவிலிருந்ததால் மக்கள் தங்கள் உயிரைக் காக்க அப்பகுதியை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இந்தச் சூழலில் நேற்று நடைபெற்ற தாக்குதலில் 137 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் கூறியுள்ளார். உக்ரைன் மக்களும் ராணுவ வீரர்களும் வீர மரணம் அடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சூழலில் உக்ரைன் போர் குறித்து ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று ஆலோசனை நடத்தினார். ஐரோப்பிய ஒன்றிய வெளி விவகாரத் துறை மற்றும் பாதுகாப்புத் துறைக்கான உயர்மட்ட பிரதிநிதி ஜோசப் போரெல் நேற்று தொலைபேசியில் அழைத்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் பேசினார்.

ரஷ்யாவின் நடவடிக்கையால் உக்ரைனில் ஏற்பட்டுள்ள பேரிடர் குறித்து இருவரும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் இந்தியாவின் பங்கு என்ன என இருவரும் ஆலோசித்ததாகப் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாகப் பிரதமர் மோடி நேற்று அமைச்சரவை குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.

மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் ,நிர்மலா சீதாராமன், அமித் ஷா, ஜெய்சங்கர் உள்ளிட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்துக்குப் பின் வெளியுறவுத் துறை அமைச்சகச் செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்கலா, "உக்ரைனில் 20,000 இந்தியர்கள் இருந்தனர். அவர்களில் 4,000 பேர் மீட்டு வரப்பட்டனர். மீதம் அங்குள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டு வருவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்று கூறினார்.

-பிரியா

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்! ...

5 நிமிட வாசிப்பு

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்!

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை? அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் ...

11 நிமிட வாசிப்பு

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை?  அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் அதிமுகவாகும் சிவசேனா

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

5 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

வெள்ளி 25 பிப் 2022