உள்ளாட்சி பிரதிநிதிகளை நானே கண்காணிப்பேன்: மு.க.ஸ்டாலின்


தேர்தலில் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளை நானே நேரடியாகக் கண்காணிப்பேன் என்று முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதற்கு முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதுபோன்று தேர்தல் வெற்றி பெற்றவர்கள் முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் ஸ்டாலின், “நாடாளுமன்றம், சட்டப் பேரவை, உள்ளாட்சி அமைப்புகள் என எவற்றுக்குத் தேர்தல் நடந்தாலும் கூட்டணியினரின் ஒற்றுமையுடன் வெற்றி சாத்தியமாகி வருகிறது. தமிழ்நாட்டில் நம்முடைய அணி தொடர் வெற்றியைப் பெறுவதற்கு காரணம் இந்த ஒற்றுமை உணர்வுதான்.
‘நான்’ என்று சொல்லுவதை விட ‘நாம்’ என்று சொல்வதே நன்மை பயக்கும். அதனால்தான், இது எனது அரசு என்று சொல்லாமல், ‘நமது அரசு’ என்று சொல்லி வருகிறேன். திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் வழங்கிய மணிமகுடம்தான் உள்ளாட்சித் தேர்தல் வெற்றியாகும்.
எதிர்க்கட்சிகளை முழுமையாக மக்கள் நிராகரித்துள்ளார்கள்; அவர்களது வாதங்களையும் நிராகரித்துள்ளார்கள். தேர்தல் அறிக்கை என்பது ஐந்து ஆண்டுத் திட்டமாகும். அது எதையும் புரிந்துகொள்ள எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை.
கோட்டையில் நிறைவேற்றும் திட்டங்களை மக்களின் கைகளில் கொண்டு போய்ச் சேர்க்கும் கடமை உள்ளாட்சி பிரதிநிதிகளுக்குத்தான் உண்டு. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அதனைச் சிறப்பாகச் செய்வர். அதனை நானே நேரடியாகக் கண்காணிப்பேன். எந்தவிதப் புகாரும் வராத வகையில் அவர்கள் அனைவரும் பணியாற்றுவார்கள். அதனையும் நான் கண்காணிப்பேன்” என்று கூறியுள்ளார்.
மேலும், “முப்பதுக்கும் மேற்பட்ட கழக மாவட்டங்களைச் சேர்ந்த வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள் - அவர்களது குடும்பத்தினர், வெற்றிக்காக உழைத்த கழக உடன்பிறப்புகள் என ஆயிரக்கணக்கானோர் என்னைச் சந்தித்து வெற்றிக் களிப்பைப் பகிர்ந்துகொண்டனர். உடன்பிறப்புகளின் முகத்தில் ஏற்படும் மலர்ச்சியையும் மனதில் ஏற்படும் மகிழ்ச்சியையும் காணும்போது கால்வலியும் உடல் அயர்ச்சியும் சூரியனைக் கண்ட பனிபோல் விலகுகிறது” என்றும் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின்.
-பிரியா